காரைக்குடியில் பேசாமல் திரும்பிய விஜய் ; திருச்சியில் சாலை வலம்: பவுன்சர்கள் அராஜகம்
காரைக்குடியில் பேசாமல் திரும்பிய விஜய் ; திருச்சியில் சாலை வலம்: பவுன்சர்கள் அராஜகம்
காரைக்குடி தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து, பிரச்சாரம் நடக்கும் இடத்துக்கு வந்ததால், தவெக தலைவர் விஜய் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் காரைக்குடியில் விஜய் பேசாமல் திரும்பிச் சென்றார். பல மணி நேரம் காத்திருந்த விஜய் ரசிகர்கள், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். காரைக்குடியில் இருந்து திருச்சி வந்த விஜய் சாலை வலம் மேற்கொண்டார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் இன்று விஜய் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக காவல்துறை அனுமதியும் அளித்திருந்தது. காரைக்குடியில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 4 வேட்பாளர்களுக்கும் ஆதரவாக விஜய் இன்று வாக்கு சேகரிப்பதாக இருந்தது. இதற்காக இன்று காலையில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்த விஜய், அங்கிருந்து தனது பிரசார வாகனம் மூலமாக காரைக்குடிக்கு புறப்பட்டார்.
மதுரையிலிருந்து வரும் வழியில் தவெகவினர் திரண்டதால், அவர்களுக்கு கையசைத்தபடி விஜய்யின் வாகனம் ஆமை வேகத்தில் பயணித்தது.
இதற்கிடையில் திடீரென பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கிய விஜய், அவருக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த சைக்கிளில் ஏறி பயணிக்க தொடங்கினார். இதனால் அவர் காரைக்குடிக்கு வருவதற்கு மிகவும் தாமதமானது.
மதுரையில் இருந்து காரைக்குடி வருவதற்க்கு உள்ள 90 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க விஜய்யின் வாகனம் 4 மணி நேரத்திற்கும் மேல் எடுத்துக்கொண்டது. இதனால் விஜய், காரைக்குடிக்கு மதியம் 2.30 மணிக்கு மேல்தான் வந்தார். விஜய் காரைக்குடியில் பிரச்சாரம் செய்ய நண்பகல் 12 மணி முதல் மதியம் 2.30 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
காவல்துறை அனுமதித்திருந்த நேரத்தை தாண்டி காரைக்குடிக்கு விஜய் வந்ததால், அவருக்கு பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், பிரச்சாரம் நடக்கும் இடத்தில் கூடியிருந்த தொண்டர்களிடம் பேசாமலேயே விஜய் அங்கிருந்து புறப்பட்டார். மேலும், காரைக்குடியில் ரோடு ஷோ மேற்கொண்ட விஜய், தவெக வேட்பாளர் பிரபுவுக்கு வாக்களிக்கும்படி சைகையின் மூலம் தெரிவித்துவிட்டு புறப்பட்டார். இதனால் பல மணி நேரம் காத்திருந்த பொதுமக்கள் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
திருச்சியில் செய்தியாளர்களுடன் மோதல்
முன்னதாக காரைக்குடியில் பிரச்சாரம் மேற்கொள்ள முடியாத நிலையில் காரைக்குடியில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த விஜய் சாலை வலம் மேற்கொண்டார். இதனால் திருச்சி புதுக்கோட்டை, புதுக்கோட்டை திருச்சி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருச்சி விமான நிலையம் வந்த தவெக தலைவர் விஜய்யை செய்தியாளர்கள் ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் வெளியானது குறித்து பதில் அறிவதற்காக கேள்வி எழுப்ப முற்பட்டபோது விஜய்க்கு பாதுகாப்புக்காக வந்த தனியார் பவுன்சர்கள் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்களை தள்ளிவிட்டு தாக்குதல் நடத்தினர். இதனால் திருச்சி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
தனியார் பவுன்சர்கள் விஜய் வருவதற்கு முன்பு உளவுத்துறை அதிகாரிகளிடம் ஐடி கார்டு கேட்டனர். இதனால் போலீசார்கள் பவுன்சர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு இறுதியில் போலீசார் அவர்களை எச்சரித்தனர். இந்த நிகழ்வுகள் காரணமாக விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதே நேரத்தில் விஜய் பயணிக்க காத்திருந்த அவரது சொகுசு விமானத்தில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
1
Angry
0
Sad
0
Wow
0