ஆசிரியர்களை தமிழக அரசு ஒருபோதும் கைவிடாது - அமைச்சர் அன்பில் மகேஷ்
ஆசிரியர்களை தமிழக அரசு ஒருபோதும் கைவிடாது - அமைச்சர் அன்பில் மகேஷ்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் பணியில் நீடிக்க, பணி உயர்வு பெறுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (Teacher Eligibility Test- TET) கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. அதில் ஓய்வு பெற 5 ஆண்டுகள் மட்டுமே உள்ள ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ஓய்வு பெற 5 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயம்.
தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணியில் இருந்து வெளியேற வேண்டும். அவர்கள் ஓய்வுபெற்றதாக கருதப்பட்டு, அவர்களுக்கான ஓய்வுகாலப் பயன்கள் அளிக்கப்பட வேண்டும். ஆசிரியராக பணியில் சேர விரும்புவோரும், ஆசிரியர் பணியில் உயர்வை விரும்புவோரும் இந்த தேர்வில் தகுதி பெற வேண்டும். இல்லையென்றால் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற உரிமை இல்லை.
மேலும் அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு பொருந்துமா? என்பதை அரசியல் சாசன அமர்வு விசாரிக்க பரிந்துரைக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அரசு பள்ளி ஆசிரியர்கள் 1.50 லட்சம் பேருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்தநிலையில், தமிழகம் முழுவதும் 20அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருச்சி கே.கே.நகரில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
இப்பள்ளியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று திறந்து வைத்து பள்ளியில் சேரும் மாணவர்களை வரவேற்று அவர்களுக்கு புத்தகம், பேனாக்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மண்டல தலைவர் மதிவாணன், மாமன்ற உறுப்பினர்கள் மலர்விழி ராஜேந்திரன், பொற்கொடி, பள்ளி தலைமை ஆசிரியை எலிசபெத் ராணி மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; தற்போது பணியில் உள்ள ஆசிரியர்கள் டெட் (TET) எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தின் தீர்ப்பின் விபரம் முழுமையாக கிடைத்தவுடன் அதுகுறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு, பின்னர் இது குறித்து மேல்முறையீடு செய்யப்படும்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக ஆசிரியர் சங்கங்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. எக்காரணத்தைக் கொண்டும் தமிழக அரசு ஆசிரியர்களை கைவிடாது எனத் தெரிவித்தார்.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0