விஜய் வாகனத்தை பின் தொடர்ந்தபோது விபத்து: கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி பலி

Mar 24, 2026 - 13:28
Mar 24, 2026 - 14:19
 0  67
விஜய் வாகனத்தை பின் தொடர்ந்தபோது விபத்து: கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி பலி

விஜய் வாகனத்தை பின் தொடர்ந்தபோது விபத்து: கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி பலி

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள அய்யாசாமிப்பட்டியில், கடந்த 4ம் தேதி, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.

இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் வந்த விஜய் சாலை மார்க்கமாக செங்கிப்பட்டி சென்றார். திருச்சியில் இருந்து கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு சென்ற விஜய்யின் வாகனத்தை, கட்சித் தொண்டர்கள் பலர் டூவீலரில் பின்தொடர்ந்து வந்தனர். விஜய் வாகனத்தைப் பின்தொடர வேண்டாம் என தவெக நிர்வாகிகள் எச்சரித்தனர்.

 அதையும் மீறி திருச்சி, பொன்மலை அருகே உள்ள கல்கண்டார் கோட்டையைச் சேர்ந்த கல்லுாரி மாணவர்கள் விக்னேஷ்19, அவரது நண்பர் ஹாரூண் 20 இருவரும் டூவீலரில் விஜய்யை பின்தொடர்ந்து சென்றபோது விபத்தில் சிக்கினர்.

இதில் விக்னேஷ்க்கு தலையில் பலமாக அடிப்பட்டது. இதையடுத்து தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

காலில் பலத்த காயம் ஏற்பட்ட ஹாரூணுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து செங்கிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

இந்நிலையில், விக்னேஷை தவெக நிர்வாகிகள் கண்டு கொள்ளவில்லை என விமர்சனம் எழுந்தது. 

இதையடுத்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், தஞ்சாவூர் எம்.பி., முரசொலி ஆகியோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இதுவரையும் சந்திக்க சென்றனர். விக்னேஷ் அதி தீவிர சிகிச்சை பிரிவில் இருந்ததால் அவருக்கான மருத்துவ செலவை ஏற்றுக்கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிகிச்சையில் இருந்த ஹாரூணை மட்டும் சந்தித்து ஆறுதல் கூறி சென்றனர்.

இதைதொடர்ந்து தவெக மத்திய மாவட்ட கழகம் சார்பில் சிகிச்சைக்குச் செய்யப்பட்ட செலவு உள்ளிட்ட விவரங்களுடன் அறிக்கை வெளியிடப்பட்டது. 

 இந்நிலையில், விக்னேஷ்க்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் அவரது பெற்றோர் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் இருந்து, கடந்த மார்ச். 20ம் தேதி, டிஸ்சார்ஜ் செய்து, திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காகச் சேர்ந்தனர்.

 தஞ்சையில் இருந்து திருச்சிக்கு மாற்றப்பட்ட விக்னேஷ் மருத்துவ செலவை திருவெறும்பூர் தவெக சட்டமன்ற வேட்பாளராக களம் இறங்கும் நவல்பட்டு விஜய் ஏற்றுக் கொண்டுள்ளார்.

 திருச்சி தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த விக்னேஷ் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் சக மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

 இந்த விபத்து குறித்து புலனாய்வு செய்து வந்த செங்கிப்பட்டி போலீசார் பிரேதத்தை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இன்று உடற்கூறாய்வுக்கு பின்னர் விக்னேஷ் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

 விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளும் இடங்களில் எல்லாம் உயிர் பலி நடப்பது தொடர் கதையாகி இருக்கும் நிலையில் தேர்தல் பிரச்சாரம் செய்ய விஜய் மீண்டும் களத்தில் இறங்க இருக்கிறார். 

  முன்னதாக, கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூர் கூட்டம், சேலம் நிர்வாகிகள் கூட்டத்தின்போதும் இதேபோன்ற விபத்துகள் பதிவாகியிருந்த நிலையில், தற்போது மற்றுமொரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள சூழலில், விஜய்யின் வாகனங்களைப் பின்தொடர்ந்து சென்று விபத்தில் சிக்கிய இளைஞரின் உயிரிழப்பு அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 1
Angry Angry 1
Sad Sad 1
Wow Wow 0