ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க வேண்டும் - ஒன்றிய அரசுக்கு எம்பி துரை வைகோ கோரிக்கை!
ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க வேண்டும் - ஒன்றிய அரசுக்கு எம்பி துரை வைகோ கோரிக்கை!
ஈரானில் சிக்கித் தவிக்கும் 700க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது;
ஈரானில் நடைபெற்று வரும் போர் சூழ்நிலையால், குமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் அங்கு சிக்கித் தவித்து வருகின்றனர்.
கிஷ் தீவு, பந்தர் அப்பாஸ், அசாலுயே பகுதிகளில் தங்கி உள்ள இவர்களுக்கு, மீன்பிடி நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்பட்டதால் வருமானமும் இல்லை. உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் கிடைக்காமல், குண்டுவீச்சு அச்சத்தில் உயிர் பயத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களின் குடும்பத்தினரும் மிகுந்த கவலையிலும் பதட்டத்திலும் உள்ளனர்.
இது தொடர்பாக, பாபின் செசாரியோ மற்றும் சத்யராமன் ஆகியோர் தங்களது சகோதரர்கள் அஷ்வின் ரஞ்சித் குமார் மற்றும் சகாய ஜெனிஷ்ராஜ் ஆகியோர் முறையான விசா மூலம் மீன்பிடி நிறுவனத்தின் மூலமாக ஈரானுக்கு மீன் பிடிக்க சென்ற நிலையில், தற்போது அங்கு சிக்கித் தவித்து வருவதால், அவர்களை பாதுகாப்பாக மீட்க கோரி மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
கடந்த 11.03.2026 அன்று நடைபெற்ற விசாரணையில், இந்திய தூதரகம் மூலம் தேவையான உதவி மற்றும் பாதுகாப்பான மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரசுத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டிருந்தது. எனினும், இதுவரை அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்படாதது கவலைக்கிடமானதாக உள்ளது.
இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்க்கும், வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரிக்கும் நான் மின்னஞ்சல் மூலம் கடிதம் எழுதியுள்ளேன்.
எனவே, ஒன்றிய அரசு உடனடியாக தலையீடு செய்து, சிறப்பு விமானங்கள் அல்லது கப்பல்கள் மூலம் ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
மேற்கண்டவாறு ஒன்றிய அரசுக்கு திருச்சி எம்பி துரை வைகோ விடுத்துள்ள கோரிக்கையில் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0