சேலம் அருகே தாறுமாறாக ஓடிய அரசுப்பேருந்து மோதி 8 பேர் பலி
சேலம் அருகே தாறுமாறாக ஓடிய அரசுப்பேருந்து மோதி 8 பேர் பலி
கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து தடம் மாறி சரக்கு வாகனம், இரு சக்கர வாகனம் மீது மோதியதில் குழந்தை உள்பட 8 பேர் பலியான சம்பவம் சேலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இதுகுறித்த விபரம் வருமாறு;
ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி 30 பயணிகளுடன் இன்று 12 மணிக்கு வந்த அரசுப் பேருந்து உத்தமசோழபுரம் பகுதியில் பிரேக் பிடிக்காததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்த சரக்கு வாகனத்தின் மீதும், அதைத் தொடர்ந்து இருசக்கர வாகனத்தின் மீதும் மோதியது.
இந்த விபத்தில் சரக்கு வாகனத்தில் வந்த குழந்தை மற்றும் இருசக்கர வாகத்தில் பயணித்தவர்கள் என 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 2 நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானதால் இந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்தது. மேலும், பேருந்தில் பயணம் செய்த 30 பயணிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். காயமடைந்த பயணிகள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து தகவலறிந்த கொண்டலாம்பட்டி போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து கொண்டலாம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, விபத்துக்கு காரணமான அரசுப் பேருந்தை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அடித்து நொறுக்கியுள்ளனர். அரசுப் பேருந்து விபத்துக்குள்ளான சம்பவத்தால் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0