திருச்சி மாவட்டத்தில் 38,733 பேர் தபால் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு-மாவட்ட ஆட்சியர்
திருச்சி மாவட்டத்தில் 38,733 பேர் தபால் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு-மாவட்ட ஆட்சியர்
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு மூலம் வாக்குப்பதிவு செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான வே.சரவணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது வாக்குச்சாவடிக்கு வருகைபுரிந்து வாக்களிக்க இயலாத 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 40 சதவீதத்துக்குமேல் உடல் பாதிப்புடைய மாற்றுத்திறனாளிகள் தங்களது வாக்குகளை வீட்டில் இருந்தபடியே தபால் வாக்குமூலம் வாக்களிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 16,327 மூத்த குடிமக்கள், 22,406 மாற்றுத்திறனாளிகள் என 38,733 பேர் உள்ளனர். இவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே தபால் வாக்குகளை செலுத்துவதற்கான விருப்பத்தைக் கோரும் விண்ணப்ப படிவங்கள் (படிவம் 12b) அவர்கள் வசிக்கும் இருப்பிடத்திற்கே நேரில் சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் கடந்த 16.03.2026 (திங்கட்கிழமை) முதல் வழங்கப்பட்டு வருகிறது.
வீடு தேடி படிவத்தை கொண்டுவரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அந்த படிவத்தில் தங்களது வாக்குகளை தபால் வாக்கு மூலம் வீட்டில் இருந்தபடியே செலுத்துவதற்கான விருப்பத்தை பூர்த்தி செய்து படிவம் பெற்ற 5 நாட்களுக்குள் மீண்டும் வழங்க வேண்டும்.
தபால் வாக்குமூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து வாக்களித்த பிறகு அல்லது தபால் வாக்குமூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துவிட்டு தபால் வாக்குமூலம் வாக்கு செலுத்தாதவர்கள் பிறகு வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிக்கு சென்று மீண்டும் வாக்களிக்க இயலாது. மேலும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகளை பெற விண்ணப்பிக்கும்போது தகுதியான மருத்துவரால் வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கான மருத்துவச் சான்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
வாக்குச்சாவடி நிலை அலுவலர் முதல்முறை வீடு தேடி வரும்போது வாக்காளர் வீட்டில் இல்லை என்றால், மறுமுறை அவ்வீட்டிற்கு மீண்டும் சென்று வாக்காளரிடம் 12b படிவத்தை பூர்த்தி செய்து அவரது விருப்பத்தை பெறுவார். வாக்குச்சாவடி நிலை அலுவலர் இருமுறையும் செல்லும்போது வாக்காளர் வீட்டில் இல்லை என்றால், அவ்வாக்காளர் தபால் வாக்குமூலம் வாக்களிக்க விருப்பமற்றவர் என கருதப்படும். விருப்ப மனுவை அளித்துள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு தபால் வாக்கு செலுத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்.
மேற்கண்டவாறு திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான வே.சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0