முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றத்தில் திமுக மனு
முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றத்தில் திமுக மனு
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட கோரி தி.மு.க சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டுள்ளது. இது குறித்த விபரம் வருமாறு ;
சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கிரிராஜன் தாக்கல் செய்துள்ள மனுவில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ் பி வேலுமணி, தங்கமணி , சி.விஜயபாஸ்கர், எம்.ஆர் விஜயபாஸ்கர், சி.காமராஜ், கே.சி.வீரமணி, கே பி அன்பழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யா, மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறவினர் சேலம் இளங்கோவன், ஆகியோருக்கு எதிராக தனித்தனியாக வழக்குகளை தாக்கல் செய்துள்ளார்.
அந்த வழக்குகளில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி அமைச்சராக இருந்தபோது, மாநகராட்சி பகுதியில் சாலைகள் அமைப்பதில் முறைகேடுகள் நடைபெற்றதாக வழக்கு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு, எல்.இ.டி விளக்குகள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக வழக்கு என பல்வேறு வழக்குகள் லஞ்சு ஒழிப்புத்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் முந்தைய அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த தங்கமணி, கே. பி.அன்பழகன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், காமராஜ் , சி.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி உள்ளிட்டோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோல், முன்னாள் எம்எல்ஏ சத்யா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு,சேலம் இளங்கோவன் மீது ஊழல் முறைகேடு வழக்கும் விசாரணை நிலுவையில் உள்ளது.
இவர்களுக்கு எதிரான வழக்குகள் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விட்டால் அந்த குற்றம் தொடர்பான வழக்கை தொடர முடியும் என்று சட்டவிரோத பண பரிமாற்றத்தில் சட்டத்தில் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளில் குற்றம் செய்தவர்கள் பண மோசடி மற்றும் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்தது, ஊழல் குற்றத்தில் ஈடுபட்டதால் அவர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்வதற்கான முகாந்திரம் உள்ளது.
இது தொடர்பாக அமலாக்கத்துறைக்கு பல்வேறு புகார்கள் அனுப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே, லஞ்ச ஒழிப்புத்துறை சேகரித்துள்ள ஆவணங்கள் அடிப்படையில் இவர்கள் மீது வழக்கு அமலாக்கத்துறை வழக்கு தொடர முடியும் என்றும், மேலும், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் இவர்கள் மீது வழக்குகள் உள்ளதால், சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்வதற்கான முகாந்திரம் உள்ளது என தெரிவித்துள்ளார். எனவே, அவர்கள் மீது அமலாக்கத்துறை சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0