துறையூர் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் சிறுவன் உயிரிழப்பு ; அண்ணாமலை கடும் கண்டனம்

Mar 17, 2026 - 20:20
 0  37
துறையூர் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால்  சிறுவன் உயிரிழப்பு ; அண்ணாமலை கடும் கண்டனம்

துறையூர் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் சிறுவன் உயிரிழப்பு ; அண்ணாமலை கடும் கண்டனம் 

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி நேரத்தில் மருத்துவர் இல்லாததால், மருத்துவ உதவி கிடைக்காமல் 4½ வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கண்ணனூர் ஊராட்சியில் முருகன் கோவில் தெரு, நெசவாளர் காலனி பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ் (34). கூலி தொழிலாளியான இவரும், அவரது மனைவி திவ்யாவும் ஒரே மகனாக பிரஜன் (4½) என்பவரை வளர்த்து வந்தனர். உடல்நிலை சரியில்லை என கொண்டு செல்லும் வழியில் மயக்கம் அடைந்ததால் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்ற நிலையில் இந்த சம்பவம் ஏற்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்த சிறுவன் துறையூரில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வந்துள்ளான். சிறுவனுக்கு கடந்த 14ஆம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பெற்றோர் சிறுவனை துறையூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில், கண்ணனூர் அருகே வந்தபோது சிறுவனுக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டுள்ளது.

 இதனால் கண்ணனூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அவசர சிகிச்சைக்கு சென்றனர். அங்கு முதலுதவி பெற்ற பின் வேறு மருத்துவமனைக்கு செல்லலாம் என்று நினைத்த நிலையில் கண்ணனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்களோ, செவிலியர்களோ இல்லாததால் சிறுவனுக்கு அவசர சிகிச்சை அளிக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது.

 சிறுவன் மூச்சுத் திணறலால் தவித்த நிலையில், கண்ணனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் இருந்த மருத்துவ உதவியாளர் ஒருவர் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளார். 108 ஆம்புலன்சும் உடனடியாக கண்ணனூர் ஆரம்ப சுகாதார நிலையம் வந்தது. ஆனால் அதிலும் செவிலியர் இல்லாமல் ஓட்டுநர் மட்டுமே இருந்ததால் சிறுவனுக்கு முறையான சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக பெற்றோர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இதனால், மேலும் தாமதிக்காமல் பெற்றோர் தங்களது சொந்த வாகனத்தில் குழந்தையை துறையூர் நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இதனால் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு கதறி அழுத சம்பவம் பார்ப்போரை கதற வைத்தது.

இந்த சம்பவம் குறித்து பெற்றோர் கூறுகையில், கண்ணனூர் மற்றும் சுற்றியுள்ள சுமார் 18 கிராமங்களுக்கு இந்த ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையமே இருப்பதாகவும்,

அவசர நேரங்களில் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் பணியில் இல்லாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தனர்.

மேலும், மருத்துவ ஊழியர்களுக்காக அமைக்கப்பட்ட தங்கும் விடுதியில் அவர்கள் தங்குவதில்லை என்றும், அவசர முதல் உதவிக்காக சென்றாலும் மருத்துவர் கிடைப்பதில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி, போதுமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது அவர் தொலைபேசியை எடுக்கவில்லை, அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாமல் குழந்தை இறந்ததாக கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பாஜக முன்னாள் தலைவரும், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினருமான அண்ணாமலை விடுத்துள்ள பதிவில், திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவர் இல்லாத காரணத்தால், மருத்துவ உதவி கிடைக்காமல் நான்கரை வயது சிறுவன் பிரஜன் உயிரிழந்த செய்தி மனதை உலுக்குவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 14.03.2026 அன்று சிறுவன் பிரஜனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், பெற்றோர், கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றபோது, மருத்துவர் மற்றும் செவிலியர்கள் பணியில் இல்லாமல், முதல் உதவி கூட கிடைக்காமல், சிறுவன் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டிற்கே மருத்துவத் தலைநகரமாக விளங்கிய தமிழகம், கடந்த ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில், அடிப்படை சுகாதார வசதிகள் கூட இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்றும், அரசுப் பணி நியமனம், பணி மாற்றம் என ஒவ்வொரு துறையிலும் லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றவே அரசுப் பணிகள் என்பதை விட்டுவிட்டு, அரசுப் பணி நியமனங்களில் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்ற போக்கில் திமுக அமைச்சர்கள் செயல்படுவதன் விளைவு, சுகாதாரத் துறையில் தொடர்ந்து ஏற்படும் உயிரிழப்புகள் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளில், தாங்கள் பணம் சம்பாதிக்க, தமிழக சுகாதார கட்டமைப்பையே சீரழித்திருக்கிறது திமுக அரசு என்றும், உயிரிழந்த சிறுவன் பிரஜன் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு காரணமான அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும், அரசு மருத்துவமனைகளில், 24 மணி நேரமும் மருத்துவ சேவையை உறுதிப்படுத்த வேண்டும் என்று திமுக அரசை அண்ணாமலை வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0