தனியார் பேருந்து ஓட்டுநரின் அட்டூழிய செயல் ; பயணியை தகாத வார்த்தையில் திட்டி தாக்கிய காணொளி வைரல்

Jan 30, 2026 - 13:10
 0  60
தனியார் பேருந்து ஓட்டுநரின் அட்டூழிய செயல் ; பயணியை தகாத வார்த்தையில் திட்டி தாக்கிய காணொளி வைரல்

தனியார் பேருந்து ஓட்டுநரின் அட்டூழிய செயல் ; பயணியை தகாத வார்த்தையில் திட்டி தாக்கிய காணொளி வைரல் 

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்திற்கு சங்கர் என பெயரிடப்பட்ட தனியார் பேருந்து(TN45BP5345) சென்றுள்ளது.

அந்த தனியார் பேருந்தை ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஓட்டுநர் அன்புராஜ் என்பவர் பேருந்தை மிகவும் வேகமாகவும் ஆபத்தான முறையிலும் இயக்கி உள்ளார். 

இதனை அந்த பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர், "இவ்வளவு வேகமாக ஓட்டாதீர்கள் அல்லது என்னை இறக்கி விட்டு விடுங்கள்" ஓட்டுநர் மற்றும் நடத்தினரிடம் கேட்டுள்ளார்.

 அதைக் கொஞ்சமும் பொருட்படுத்தாத ஓட்டுனர் அன்புராஜ் மீண்டும் பேருந்தை அதிவேகமாக வேண்டுமென்றே மிகவும் ஆபத்தான முறையில் மீண்டும் பேருந்தை இயக்கிக் கொண்டு இருந்தார். பயணியும் இது தவறு என உணர்த்திக் கொண்டே இருந்தார். இதனால் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பயணிக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதன் பின்பு திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம் வந்தவுடன் அந்த ஓட்டுநர் தன் பேருந்தில் பயணித்த அந்த பயணியை தகாத வார்த்தைகளில் திட்டி, பொதுமக்கள் மத்தியில் அடித்து துன்புறுத்தி உள்ளார்.

அதே பேருந்தில் கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சமூக ஊடகப் பிரிவின் மாவட்ட செயலாளர் சுந்தரவேல் தன் குடும்பத்துடன் பயணித்துள்ளார். இந்த சம்பவத்தை வேறொரு பேருந்தில் இருந்து எடுத்த வாலிபரிடம் அந்த காணொளியை கேட்டு வாங்கி, இந்த வீடியோவை சாட்சியாக வைத்து எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 மேலும் திருச்சி மாநகரில் தனியார் பேருந்துகள் பொதுமக்களை அலட்சிய போக்குடன் நடத்துவதும், போட்டி போட்டுக் கொண்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக வேகமாக இயக்குவதையும் குறிப்பிட்டு புகார் அளித்ததோடு அந்த காணொளையை சமூக ஊடகங்களிலும் வெளியிட்டார்.

இதன் அடிப்படையில் எடமலைப்பட்டிபுதூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பேருந்து மற்றும் ஓட்டுநரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் பேருந்தின் உரிமையாளரையும் வரவழைத்து கடிந்து கொண்டதோடு ஓட்டுநர் அன்புராஜ் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

 திருச்சியில் தனியார் பேருந்து ஓட்டுனர் பயணியை பேருந்து நிலையத்தில் வைத்து அடிக்கும் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது குறிப்பிடத்தக்கது.

க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 1
Sad Sad 0
Wow Wow 0