திருச்சி நீதிமன்ற வளாகத்தில் இந்து மக்கள் கட்சியினருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு
இந்து மக்கள் கட்சியினருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே நீதிமன்ற வளாகத்தில் தள்ளுமுள்ளு
திருச்சி நீதிமன்ற வளாகத்தில் ஸ்ரீரங்கம் ஈவெரா சிலை வழக்கிற்கு ஆஜராக இன்று வருகை தந்த இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜுன் சம்பத்க்கும், நீதிமன்ற வளாகத்தில் இருந்த ஒருசில வழக்கறிஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் திருச்சி நீதிமன்றத்தில் கூடுதல் போலீஸ் போடப்பட்டது. இது குறித்த விபரம் வருமாறு ;
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ராஜகோபுரம் முன்பாக உள்ள தந்தை பெரியார் சிலையை இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட சிலர் கடந்த 2006 ஆம் ஆண்டு உடைத்து சேதப்படுத்தியதாக போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
அந்த வழக்கின் விசாரணை திருச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் (CJM) இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று கருதப்பட்டது.
துப்பாக்கி ஏந்திய போலீஸாரின் பாதுகாப்புடன் அர்ஜுன் சம்பத் இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜரானார். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் மூத்த வழக்கறிஞர் இன்று ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இந்த வழக்கு தொடர்பான விசாரணையை பிப்ரவரி 4ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
இதனிடையே, நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனது காருக்கு அர்ஜுன் சம்பத் வந்தார். அவரது ஆதரவாளர்கள் அவரை சூழ்ந்துக்கொண்டு செல்போனில் வீடியோ எடுத்தனர்.
அவர்களிடம், நீதிமன்ற வளாகத்தில் ரீல்ஸ் எடுக்கக்கூடாது, வீடியோ எடுக்கக் கூடாது, பேட்டி எடுக்கக் கூடாது என அங்கிருந்து வழக்கறிஞர்கள் சிலர் எடுத்துக்கூறினார்கள். அப்போது இருபிரிவினருக்கும் இடையே வாக்குவாதமும், அதனை தொடர்ந்து தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
இந்நிலையில், திருச்சி நீதிமன்றத்தில் தனக்கு பாதுகாப்பு வேண்டும். தன்னிடம் வாக்குவாதம் செய்த வழக்குறைஞர்களை கைது செய்ய வேண்டுமென, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், நீதிபதி நசீர் அலி என்பவரிடம், அர்ஜுன்சம்பத் வாய்மொழியாக புகார் அளித்தார்.
இந்தத் தள்ளுமுள்ளு நிகழ்வால் நீதிமன்றத்தில் கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பின்னர், கூடுதல் பாதுகாப்புடன் நீதிமன்ற வளாகத்தில் இருந்து அர்ஜுன் சம்பத் வெளியே அழைத்து வரப்பட்டார்.
இது குறித்து அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் பேசுகையில்; மக்கள் கலை இலக்கிய கழகத்தைச் சார்ந்த வழக்கறிஞர் கென்னடி மற்றும் சில வழக்கறிஞர்கள் எங்களை சூழ்ந்து கொண்டு, ஈவேரா வாழ்க என முழக்கமிட்டனர். ரவுடிகள் போல் நடந்து கொண்டனர்.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தில் (மகஇக) உள்ள கென்னடி, தனது செயல்பாடுகளை நீதிமன்றத்திற்கு வெளியே வைத்துக்கொள்ள வேண்டும். நான் தோளில் அணிந்துள்ள காவி துண்டை பறிக்க முயன்றதையும், என் மீது தாக்குதல் நடத்த முயன்றதையும் வன்மையாக கண்டிப்பதாகவும், சிலை சேதப்படுத்தியதற்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வோம் எனத் தெரிவித்தார்.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0