கருப்புக்கொடி: கைதுசெய்யப்பட்ட விவசாயிகளை உடனே விடுதலை செய்க-பி.ஆர்.பாண்டியன்

Jan 28, 2026 - 18:33
 0  23
கருப்புக்கொடி: கைதுசெய்யப்பட்ட விவசாயிகளை உடனே விடுதலை செய்க-பி.ஆர்.பாண்டியன்

கருப்புக்கொடி: கைதுசெய்யப்பட்ட விவசாயிகளை உடனே விடுதலை செய்க-பி.ஆர்.பாண்டியன்

 தமிழக முதல்வர் தஞ்சை பயணத்தின்போது விவசாயிகள் கருப்புக்கொடி காட்ட முற்பட்டபோது கைது செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;
   திருமண்டங்குடி சர்க்கரை ஆலை விவசாயிகள் 1150 நாட்களை கடந்து காத்திருப்பு போராட்டம் மேற்கொண்டு வருகிறார்கள். விவசாயிகளை கண்டுகொள்ளாத முதலமைச்சருக்கு எதிராக தஞ்சாவூர் அய்யம்பேட்டை அருகே டோல்கேட்டில் விவசாயிகள் கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது ஒரு அடையாளப் பூர்வமான ஆர்ப்பாட்டம். முதலமைச்சரின் கவனத்தை ஈர்த்து விவசாயிகளுடைய நியாயமான கோரிக்கைக்கு தீர்வு காண்பதற்கான போராட்டமாக நடைபெற்றுள்ளது.
   கருப்புக்கொடி காட்டிய விவசாயிகளை போலீஸார் கைது செய்து அடைத்து வைத்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே திமுக எதிர்கட்சியாக இருந்தபோது இந்த விவசாயிகளை ஒருங்கிணைத்து தீவிரமான போராட்டத்தை நடத்தி வந்தது. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அதிகாரமிக்கவர்களால் திருமண்டங்குடி சர்க்கரை ஆலையை விலைக்கு வாங்கி தற்போது அங்கே மது உற்பத்தி செய்யப்படுகிறது. 
   கரும்பு ஆலை முன் ஒரு நுழைவாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 
மறு நுழைவாயில் வழியாக மது உற்பத்தி செய்து சந்தைப்படுத்தப்படுகிறது. இந்த துரோக செயலை விவசாயிகள் அன்றாடம் கண்டு கழித்து வருகிறார்கள். கரும்பு பயிரிட்ட விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை. ஏற்கனவே ஆலையை நடத்தி வந்த ராம் வி தியாகராஜன் விவசாயிகள்  பெயரில் தவறான வகையில் பல்வேறு வங்கிகளில் சுமார் ரூ.400 கோடிக்கு மேல் கடன் பெற்று விவசாயிகளை கருப்பு பட்டியலில் இணைத்து வைத்துள்ளார். 
   தேனி மாவட்ட மாநில வங்கியாளர் கூட்டங்களில் உறுதி செய்து தமிழக முதலமைச்சருக்கும் எடுத்துரைத்துள்ளனர். ஆனால், மத்திய அரசுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழக அரசு, இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து  முதலமைச்சர் மௌனம் காப்பது ஏற்க முடியாது. இதற்கு உரிய தீர்வு காண வேண்டும். உடனடியாக கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என  வலியுறுத்துகிறேன்.
  மேற்கண்டவாறு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 1
Wow Wow 0