லஞ்சம்; முன்னாள் காவல் ஆய்வாளர் மற்றும் உதவியாளருக்கு சிறை- திருச்சி ஊழல் தடுப்பு நீதிமன்றம்

Jan 28, 2026 - 17:44
 0  69
லஞ்சம்; முன்னாள் காவல் ஆய்வாளர் மற்றும் உதவியாளருக்கு சிறை- திருச்சி ஊழல் தடுப்பு நீதிமன்றம்

லஞ்சம்; முன்னாள் காவல் ஆய்வாளர் மற்றும் உதவியாளருக்கு சிறை-
திருச்சி ஊழல் தடுப்பு நீதிமன்றம்


   கடந்த 2011 நவம்பர் மாதத்தில் திருச்சி மாவட்டம், ஜீயபுரம் உட்கோட்டம், சோமரசம்பேட்டை காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த சாமுவேல்ஞானம் என்பவர், திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், சோமரசம்பேட்டை, வீரங்கிநல்லுாரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் ஆ.துரைபாண்டியன் என்பவர் மீது குண்டர்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்காமலிருக்க, ரூ.50,000/- லஞ்சமாக கேட்டது தொடர்பாக சாமுவேல்ஞானம் என்பவர் மீது திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் கடந்த 24.11.2011-ம் தேதி குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது.
   அதனைத்தொடர்ந்து 25.11.2011-ம் தேதி மேற்கொண்ட பொறிவைப்பு நடவடிக்கையில், புகார்தாரர் துரைபாண்டியன் என்பவரிடம் லஞ்சப்பணம் ரூ.50,000/-த்தை கேட்டு, அவரது தனிப்பட்ட உதவியாளர் சதீஷ் என்பவர் மூலம் லஞ்ச பணத்தை பெற்றபோது, சாமுவேல்ஞானம் மற்றும் சதீஷ் ஆகிய இருவரையும் திருச்சி லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கானது திருச்சி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
கடந்த சில வருடங்களாக நடைபெற்று விந்த இந்த விசாரணை முடிவுற்று இன்று 28.01.2026-ம் தேதி திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி புவியரசு தீர்ப்பு வழங்கினார். குற்றம் சாட்டப்பட்ட மேற்படி இருவர் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில், லஞ்சம் வாங்கிய முன்னாள் காவல் ஆய்வாளர் சாமுவேல் ஞானம், சோமரசம்பேட்டை காவல்நிலையம், திருச்சி மாவட்டம் (தற்போது நாகப்பட்டிணம் தலைஞாயிறு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர்) என்பவருக்கு லஞ்சப்பணம் கேட்ட குற்றத்திற்காக மூன்றாண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.10,000/- அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் 3 மாதம் சிறை தண்டனையும், அரசு பதவியை தவறாக பயன்படுத்தி கையூட்டு கேட்டுப்பெற்ற குற்றத்திற்காக 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ.10,000/- அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் 3 மாதம் சிறை தண்டனையும் மற்றும் சாமுவேல்ஞானம் என்பவருக்காக புகார்தாரரிடமிருந்து லஞ்சப்பணத்தை வாங்கி வைத்திருந்த குற்றத்திற்காக சதீஷ் என்பவருக்கு இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ.5,000/- அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்ததோடு, மேற்கண்ட தண்டனைகளை இருவரும் ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.
   மேற்படி, வழக்கினை திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை காவல் துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டன், ஆய்வாளர் ஞா.சக்திவேல் ஆகியோர் திறம்பட சாட்சிகளை ஆஜர் செய்து ஒத்துழைப்பு வழங்கியும், அரசு தரப்பு வழக்கறிஞராக கோபிகண்ணன் என்பவர் திறம்பட வழக்கை நடத்தியும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0