மரணத்திலும் மனிதாபிமானம்: ஆதரவற்ற உடல்களுக்கு உற்ற துணையாகி ஆளுநர் விருது பெற்ற விஜயகுமார்

Jan 27, 2026 - 18:02
 0  21
மரணத்திலும் மனிதாபிமானம்: ஆதரவற்ற உடல்களுக்கு உற்ற துணையாகி ஆளுநர் விருது பெற்ற விஜயகுமார்

மரணத்திலும் மனிதாபிமானம்: ஆதரவற்ற உடல்களுக்கு உற்ற துணையாகி ஆளுநர் விருது பெற்ற விஜயகுமார்

திருச்சியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் விஜயகுமார், தனது மனைவி மற்றும் மகளுடன் இணைந்து ஆதரவற்ற உடல்களை நல்லடக்கம் செய்து வருவதற்காக 2025-ஆம் ஆண்டின் ஆளுநர் விருதைப் பெற்றுள்ளார்.

வாழும் காலத்தில் உறவுகளால் கைவிடப்பட்டவர்களுக்கும், அடையாளம் தெரியாத நிலையில் சாலைகளிலும் பொது இடங்களிலும் இறந்து கிடப்பவர்களுக்கும் இறுதிப் பயணத்தில் கண்ணியமான விடைபெறுதலை உறுதி செய்வது ஒரு மகத்தான அறப்பணி. இந்தப் புனிதமான பணியைத் தனது குடும்பத்தோடு முன்னெடுத்து வரும் திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 'ஆளுநர் விருது' வழங்கி கௌரவித்துள்ளார்.

சென்னை மக்கள் மாளிகை சுதந்திரப் பொன்விழா அரங்கில் நடைபெற்ற 2025-ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழாவில், சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்து விளங்குபவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது. இதில், சமூக சேவை தனிநபர் பிரிவில் விஜயகுமார் இந்த விருதினைப் பெற்றார்.

விஜயகுமாரின் பணி வெறும் தனிப்பட்ட சேவை மட்டுமல்ல, அது சமூகத்தில் வேரூன்றியிருக்கும் சில கட்டுப்பாடுகளை உடைக்கும் ஒரு புரட்சியும் கூட. புராண காலந்தொட்டு மயானங்களுக்குச் செல்ல பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படும் சூழலில், விஜயகுமார் தனது மனைவி சித்ரா (வழக்கறிஞர்) மற்றும் மகள் கீர்த்தனா (வழக்கறிஞர் பட்டதாரி) ஆகியோருடன் இணைந்து ஆதரவற்ற பிரேதங்களை நல்லடக்கம் செய்து வருகிறார். சொந்த பந்தங்கள் இன்றி, ஒரு மலர்மாலை கூட சூட்டப்படாமல் கிடக்கும் உடல்களுக்கு ஒரு மகனாக, ஒரு சகோதரனாக நின்று இறுதிச் சடங்குகளைச் செய்து வருகிறார்.

"மரணமானது துயரத்தின் உச்சம். விபத்தில் சிதைந்து வருபவர்கள் முதல், ஆற்று மதகுகளில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்படும் உடல்கள் வரை அனைத்தையும் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்கிறோம். ஒரு மகனோ, மகளோ தன் பெற்றோருக்குச் செய்யும் கடமைகளை, இந்த ஆதரவற்ற ஆன்மாக்களுக்கு நாங்கள் செய்து வருகிறோம்" என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார்.

விஜயகுமாரின் 'அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை' உடல்களை அடக்கம் செய்வதுடன் தனது பணியை நிறுத்திக் கொள்ளவில்லை. தெருவோரம் வசிக்கும் வீடற்றவர்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் துயரங்களை இவர் கள ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளார். வறுமை, மனநல பாதிப்பு மற்றும் போதைப்பழக்கம் போன்றவற்றால் உறவுகளால் கைவிடப்பட்டவர்கள் படும் வேதனைகளை மாற்ற, உணவகங்களில் மீதமாகும் உபரி உணவுகளைச் சேகரித்து வறியவர்களுக்கு வழங்கி பசிப் போக்கி வருகிறார்.

மேலும், அறிவுசார் சமூகத்தை உருவாக்கும் நோக்கில் இலவச நூலகம் மற்றும் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் புழங்கு பொருட்கள் காட்சியகம் போன்றவற்றை அமைத்து பன்முகத்தன்மையுடன் இயங்கி வருகிறார். கொரோனா பேரிடர் காலத்தில் உயிரைப் பணையம் வைத்து பல உடல்களை நல்லடக்கம் செய்த விஜயகுமார், இதுவரை 25 முறைக்கும் மேலாக ரத்த தானம் செய்துள்ளார். 40-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவர், "வாழ்நாளிற்குப் பிறகு படமாய் இருப்பதை விட பாடமாய் இருப்போம்" என்ற உயரிய சிந்தனையுடன், தனது உடலை திருச்சி அரசு மருத்துவக் கல்லூரிக்குத் தானமாக வழங்க ஏற்கனவே பதிவு செய்துள்ளார்.

குடும்பத்தாரே முன்வந்து செய்த எதிர்ப்புக்களையும் மீறி, மனிதாபிமானமே முதன்மை எனத் தொடரும் இவரது பயணம், இன்றைய சமூகத்திற்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது. ஆளுநர் விருது வழங்கப்பட்டிருப்பது, இவரைப் போன்ற தன்னலமற்ற மனிதர்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமாகும்.

 க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0