நடைபெறவுள்ள தேர்தல் ஒரு ஜனநாயகப் போர்-தவெக தலைவர் விஜய்
நடைபெறவுள்ள தேர்தல் ஒரு ஜனநாயகப் போர்; இந்த ஜனநாயகப் போரில் முன்னணியில் நிற்கக் கூடிய நீங்கள்தான் தளபதிகள்- மாமல்லபுரத்தில் விஜய்
ஊழலற்ற ஆட்சி, அண்ணாவின் கொள்கை, மக்களுடன் கூட்டணி என 2026 தேர்தலை 'ஜனநாயகப் போராக' சந்திக்கத் தயாராகும் தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என விஜய் நிர்வாகிகள் மத்தியில் முழங்கினார்.
தமிழக வெற்றி கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் விஜய், "நாம் அரசியலில் மிக முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம். எனக்கு ஏதோ அழுத்தம் இருப்பதாகச் சிலர் நினைக்கிறார்கள். அழுத்தத்திற்கெல்லாம் அடங்கிப் போகிற ஆள் இந்த விஜய் கிடையாது. இந்த முகத்தைப் பார்த்தால் அப்படித் தெரிகிறதா?" உண்மையான அழுத்தம் மக்களிடம்தான் இருக்கிறது.
முந்தைய அதிமுக அரசு பாஜகவிற்கு அடிமையாக இருந்தது, தற்போது ஆட்சி செய்யும் திமுக அரசு நேரடியாக இல்லாமல் மறைமுகமாகச் சரணடைந்து நாடகமாடி வருகிறது.
மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு வருவதாகச் சாடிய விஜய், மாற்றி மாற்றி ஓட்டுப் போட்டு ஏமாந்த மக்கள், தற்போது தன்னையும் தனது கழகத்தையும் ஒரு நம்பிக்கையாகப் பார்ப்பதாகத் தெரிவித்தார்.
கடந்த 30 ஆண்டுகளாகத் தன்னை 'அண்டர் எஸ்டிமேட்' (Underestimate) செய்பவர்களுக்குப் பழக்கப்பட்டவன் நான் என்று குறிப்பிட்ட விஜய், மக்கள் தன்னைச் சரியாக 'எஸ்டிமேட்' செய்து, தனது திரைத்துறை பயணத்தில் ஒரு உச்சாணிக் கொம்பில் அமர வைத்துள்ளதாக நெகிழ்ச்சியுடன் கூறினார். "வீட்டுப் பிள்ளையாகவும், அண்ணன்-தம்பியாகவும் மக்கள் என்னைக் கருதுகிறார்கள். மக்கள் வைத்திருக்கும் அந்த நம்பிக்கைக்கு நான் உண்மையாக இருப்பேன். ஆட்சி அதிகாரத்திற்கு வந்தாலும் ஒரு துளி ஊழல் கூட என் மீது படியாது. ஊழல் செய்ய வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை" என அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
ஒரே நாளில் மாற்றத்தைக் கொண்டு வருவது சாத்தியமில்லை என்றாலும், இது ஒரு தொடர் செயல்முறை (Process) என்று குறிப்பிட்ட அவர், தீய சக்தியாக விளங்கும் ஊழல் கட்சிகள் இனி தமிழ்நாட்டை ஆளவே கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார்.
பேரறிஞர் அண்ணா தொடங்கிய கட்சியும், அவர் பெயரில் இருக்கும் கட்சியும் இன்று அண்ணாவின் கொள்கைகளை மறந்துவிட்டதாகக் குறிப்பிட்ட விஜய், மற்ற கட்சிகளுக்கு 'பூத்' என்பது கள்ள ஓட்டு போடும் இடம், ஆனால் டிவிகே-விற்கு (TVK) அது ஒரு 'ஜனநாயகக் கூடம்' என்றார்.
தமிழகத்தில் உள்ள சுமார் இரண்டரை கோடி குடும்பங்களில் ஒருவராகத் தான் வாழ்ந்து கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், கட்சிப் பாகுபாடின்றி மக்கள் தனக்கு வாக்களிக்கத் தயாராக இருப்பதாகவும், அவர்களைப் பாதுகாப்பாக வாக்குச் சாவடிக்கு அழைத்து வந்து 'விசில்' சின்னத்திற்கு வாக்களிக்க வைக்க வேண்டியது நிர்வாகிகளின் கடமை என்றும் கூறினார். வரவிருக்கும் தேர்தலை ஒரு தேர்தலாகப் பார்க்காமல், 'ஜனநாயகப் போர்' என்று குறிப்பிட்ட அவர், அதில் களமாடும் கமாண்டர்களாகத் தனது கட்சித் தொண்டர்களை முன்னிறுத்தினார்.
ஒன்றியம், நகரம், ஊராட்சி என இங்கு வந்துள்ள நிர்வாகிகளான நீங்கள்தான் நமது கட்சியின் ஆணிவேர். நீங்கள் எல்லோரும் சுதந்திரமாக செயல்பட வேண்டும். சுதந்திரமாக செயல்பட விட வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் எனக்கு முக்கியம். நீங்கள்தான் தேர்தலில் முன்கள வீரர்கள். இது வெறும் தேர்தல் அல்ல. இது ஜனநாயகப் போர். நீங்கள்தான் இதன் தளபதிகள்.
தேர்தலுக்கு இன்னும் மூன்று மாத காலம்தான் உள்ளது. உங்களது களப்பணியில் தான் நமது வெற்றி உள்ளது. உங்களுக்கு இந்த விஜய்யை பிடிக்கும் என்றால் உங்களது உழைப்பில் அதை வெளிக்காட்டுங்கள். நாம் அறிவிக்கின்ற வேட்பாளர்களுக்கு நீங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
“சொந்த நாட்டை ஒரு கூட்டம் அபகரிக்கிறது. அதனால் வேறு வழி இல்லாமல் அந்த நாட்டை விட்டு வெளியேறி மறைந்து வாழ வேண்டி உள்ளது. அதன் பின்னர் தன்னுடைய நட்பு சக்திகளுடன் பேசி அந்த நாட்டை மீட்டெடுத்தவர் யார் தெரியுமா? நம் கட்சியின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான ராணி வேலுநாச்சியார். அவர்களுக்கு அந்த நட்பு சக்தியாக இருந்து உழைத்தது சின்ன மருது, பெரிய மருது மற்றும் சையது ஆகிய மூன்று பேரும்தான். அன்று ஆங்கிலேயர் படை, ஆற்காட்டு படையை அடித்து துவம்சம் செய்து, நாட்டை மீட்டெடுத்தவர் வேலுநாச்சியார். அன்று இருந்த படைகள் போல் இன்று என்னென்ன படைகள் உள்ளன என்பதை நீங்கள் அறிவீர்கள். அப்படி எத்தனை படைகள் வந்தாலும் எதிர்த்து நிற்கும் தலைமையும், சக்தியும் நம் உடன் இருக்கும் போது நம் நாட்டை நம்மால் மீட்டெடுக்க முடியாதா என்ன?
தவெகவின் இந்தப் படை நட்பு சக்தி இருந்தாலும், இல்லையென்றாலும் தனியாக நின்று வெல்லும் மிகப்பெரிய படை நம்முடன் உள்ளது. முக்கியமாக தீரம் மிக்க பெண்கள் படை நம்முடன் உள்ளது. அதை பார்த்துதான் அரசியல் அரங்கமே அதிர்ந்து போயுள்ளது.
நான் ஏற்கனவே சொன்னது போல எதிர்வரும் தேர்தல் வித்தியாசமான ஒன்று. நமது படை அதிசக்தி வாய்ந்த படை. இவ்வளவு நாளாக இதை நாம் மட்டும்தான் சொல்லி வந்தோம். இப்போது இந்த பேச்சு வெளியிலும் எழுந்துள்ளது. அதனால் நம்மோடு இருப்பவர்களை கணிக்க முடியவில்லை என சொல்கிறார்கள். ஆனால் மக்கள் ஏற்கெனவே கணித்து விட்டனர். அதை நாம் அறிவோம்.
ஆளுங்கட்சிக்கும் மற்றும் ஆண்ட கட்சிக்கும் பூத் என்றால் என்ன தெரியுமா? கள்ள ஓட்டு போடும் இடம். நடைபெறவுள்ள தேர்தல் ஒரு ஜனநாயகப் போர், இந்த ஜனநாயகப் போரில் முன்னணியில் நிற்கக் கூடிய நீங்கள்தான் தளபதிகள்.
முழித்துக் கொண்டிருக்கும் போதே முழியை தோண்டி எடுத்துச் செல்லக்கூடியது இந்த தீய சக்தி, தீய சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை மீட்பது உறுதி. நான் உங்களுடன் இருக்கிறேன், மக்கள் நம்மோடு இருக்கிறார்கள்.
தேர்தல் முடிவுக்கு பிறகு இந்த தீய சக்தி மற்றும் ஊழல்வாத சக்தி இடமிருந்து தமிழகத்தை மீட்டு விட்டோம் என உறுதியாக அறிவிப்போம். அதில் மாற்றுக் கருத்து கிடையாது. அதனால் என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, நான் உங்களுடன் இருக்கிறேன், மக்கள் நம்மோடு இருக்கிறார்கள். வெற்றி நிச்சயம்! எனத் தனது பாணியில் விசில் அடித்து உரையை நிறைவு செய்தார்.
முன்னதாக, கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவனான செங்கோட்டையன் பேசியபோது, விசில் சின்னத்தை கவனமாக கையாள வேண்டும் எனவும் தேவையில்லாத இடங்களில் இதை பயன்படுத்தினால் ஓட்டுப் போய்விடும் எனவும் கலகலப்பாக பேசினார். அவரைத் தொடர்ந்து, நாஞ்சில் சம்பத், பொதுச் செயலாளர் என்.ஆனந்த், ஆதவ் ஆதார்ஜுனா உள்ளிட்ட பலரும் பேசினர்.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0