திராவிட முன்னேற்ற கழகத்தை வீழ்த்தக்கூடிய ஒரே தளபதி நம்முடைய தளபதிதான்-செங்கோட்டையன்
திராவிட முன்னேற்ற கழகத்தை வீழ்த்தக்கூடிய
ஒரே தளபதி நம்முடைய தளபதிதான்-செங்கோட்டையன்
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலை எதிர்கொள்ள ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இடையே கடுமையான போட்டி இருக்கும் என்ற நிலையில் அதை மாற்றிடும் விதமாக விஜய் துவங்கிய தமிழக வெற்றிக்கழகம் தற்போது அனைவருக்குமே போட்டியாக அரசியல் பிரவேசம் செய்துள்ளது.
தமிழக வெற்றிக்கழகம் ஆரம்பித்து திருச்சியில் முதல் பிரச்சார கூட்டத்தை துவக்கி வீறுநடை போட்டுக்கொண்டிருந்தபோது கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் சற்று ப்ரேக் போட்டாலும், அதை கடந்து அரசியல் முன்னோடிகளை தவெகவுக்குள் கொண்டு வந்து மீண்டும் அரசியல் செயல்பாடுகளில் வேகமெடுத்திருக்கின்றது.
அந்தவகையில், இன்று சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் செயல் வீரர்கள் கூட்டம் நடந்து வருகின்றது. இதில் விஜய் பங்கேற்று தமிழகத்தின் முக்கிய நிர்வாகிகளிடையே உரையாற்றுகிறார். இந்த கூட்டத்தில் அரசியல் சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து விஜய் பேசுகிறார். மேலும் இக்கூட்டத்தில் பாஸ் வைத்திருக்கும் சுமார் 3,000 பேருக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் பங்கேற்போர் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே பங்கேற்க முடியும். டிஜிட்டல் அடையாள அட்டையில் உள்ள கியூஆர் கோர்டை ஸ்கேன் செய்த பிறகே கூட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தக்கூட்டத்தில் புஸ்லி ஆனந்த், நாஞ்சில் சம்பத், செங்கோட்டையன் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட முக்கிய முன்னணி பேச்சாளர்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசியதாவது;
அரசியல் வரலாற்றில் 50 ஆண்டு காலத்திற்கு பிறகு ஒரு புதிய முகத்தை எதிர்கால தமிழகத்தை ஆளப்போகிற வெற்றி கழகத்தின் தலைவருடன் இணைந்து பணிகளை ஆற்றக்கூடிய நல்ல வாய்ப்பை எனக்கு கொடுத்திருக்கிறார்கள். இங்கே எல்லோரும் கைகளில் விசிலை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் நாளை காவல்துறை கூட விசிலைப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்படும். அதைப்போல பேருந்தில் பயணம் செய்யும்போது நடத்துநர் விசல் அடிக்க மாட்டார் என்ற நிலையும் உருவாகும். இதனை ஏன் சொல்கிறேன் எனச் சொன்னால், தலைவரைப் பொறுத்தவரையிலும் திரைப்படத்தில் மட்டும்அவர் ஹீரோ அல்ல, தமிழ்நாட்டின் எதிர்காலத்தின் ஹீரோ என்பதை நாட்டு மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
இரண்டு நாட்களுக்கு முன்னால் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அங்கே ஒரு ஆளுக்கு ₹1000 ரூபாய், தொலைதூரத்தில் இருந்து வந்த தாய்மார்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள். திராவிட முன்னேற்ற கழகத்தை வீழ்த்துவோம் என்று குரல் கொடுத்தார்கள். ஒருவர்கூட கைதட்டவில்லை. ஆனால் திராவிட முன்னேற்ற கழகத்தை வீழ்த்தக்கூடிய ஒரே தளபதி நம்முடைய தளபதிதான். ஏன் இதை சொல்கிறேன் என்று சொன்னால், பத்து கூட்டணி, எட்டு கூட்டணி என இவற்றையெல்லாம் தூள் தூளாக்குகிற சக்தி வெற்றி கழகத்தினுடைய தலைவராக மட்டுமல்ல எதிர்கால தமிழகத்தை ஆளப்போகிற நம்முடைய தமிழக முதலமைச்சருக்குதான் அந்த சக்தி இருக்கிறது. நான் பல தலைவர்களை பார்த்துவிட்டு இங்கே வந்திருக்கிறேன். அதன் அடிப்படையில்தான் கூறுகிறேன். புரட்சித்தலைவரை பார்த்தேன். அப்போது எனக்கு சிறுவயது, 26 வயதிலேயே சட்டமன்ற உறுப்பினர். அப்போது உங்களைப் போலதான் நானும் இருந்தேன்.
ஆனால் நம்முடைய தலைவரோடு இணைந்ததற்கு பிறகு எங்கு சென்றாலும் உங்களை பார்க்கும்போது ஆளை விட்டால் போதும் எனத் தோன்றுகிறது. ஒரு பக்கம் செல்பி எடுக்கிறார்கள், இன்னொரு பக்கம் பெண்களும் ஓடி வந்து படம் எடுக்கிற காட்சியையும் பார்த்தேன். இது இந்திய வரலாற்றில் யாருக்குமே இல்லாத ஒரு புகழ் தளபதிக்கு இருக்கிறது என்ற வரலாறு படைக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய நோக்கம் தமிழ்நாடு மக்களை வாழ வைப்பதுதான் நம்முடைய நோக்கம். ஏறத்தால ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை வேண்டியதில்லை என்று சொல்லிவிட்டு மக்களை காப்பதற்காக ஒரு தலைவர் இங்கே வந்திருக்கிறார். அவருடைய ஆற்றலும் சிந்தனையும் தொலைநோக்கு பார்வையும் மக்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இங்கே எந்த வீட்டை எடுத்துக் கொண்டாலும் நமக்குத்தான் ஓட்டு. திமுகவினர் வீட்டில் கேட்டல்கூட நமக்குதான் ஓட்டு என கூறுகிறார்கள். வேற கட்சி யாரை கேட்டாலும் நமக்குதான் ஓட்டு என்கிறார்கள். இதில் ஒரு அதிசயம் எங்கே இருக்கிறது என்று சொன்னால் இந்தியாவிலே இருக்கின்ற அத்தனை பேரும் இதனைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.டெல்லியில் இருப்பவர்கள் விமானத்தில் சென்னைக்கு வருகிறார்கள். டெல்லியில் இருந்து துரித ரயிலும் சென்னைக்கு வர முடியும், காரிலும் வர முடியும். ஆனால் செல்லும் பாதை எதுவாக இருந்தாலும் சென்னை என்ற இடத்தை நோக்கி மக்கள் வரக்கூடிய வரலாறு தமிழ்நாட்டிலே படைக்கப்படுகிற ஒரே தலைவர் நம்முடைய தளபதி என்பதை நான் கோடிட்டு காட்ட விரும்புகிறேன்.
இஸ்லாமிய பெருமக்கள், இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்வதில்லை எனக் கூறுவார்கள். கேற்பதை கொடுப்பவனே கிருஷ்ணா, கிருஷ்ணா என இந்து மதம் சொல்கிறது. அதேபோல கிறிஸ்துவ மதத்தில், தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும் என்று கூறுகிறது. ஆனால் கேட்காமலே கொடுக்கக்கூடிய ஒரு தலைவர் தமிழ்நாட்டில் தோன்றப்போகிறார். அவர்தான் தமிழ் மண்ணிலே முதலமைச்சர் ஆகப்போகிறார். பத்து கட்சி கூட்டணியை அசைத்துவிட முடியுமா என நினைத்தார்கள். ஆனால் எல்லோரும் ஆடிப்போய் நிற்கிறார்கள். அந்த இரு கட்சியிலும் இருக்கின்ற தலைவர்கள், தலைவர்களே அல்ல. ஏனென்று சொன்னால் தலைமை என்பது வேறு. ஆனால் இன்று இருக்கக்கூடிய தலைமை ஆடிப்போய் இருக்கிறது. இவர் எப்போது வெளிவந்தாலும் சரி, தமிழ்நாடு மக்கள் இவரை முதலமைச்சராக மாற்றியே தீருவோம் எனச் சூழரை ஏற்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இங்கே வந்திருக்கிற செயல்வீர்களுக்கு தெரியும்.
நாளை தமிழகத்தில் நல்லாட்சியை நடத்தக்கூடிய ஆற்றலும் சிந்தனையும் தொலைநோக்கு பார்வையும் மனிதநேயமும் ஜாதி மத பேரமற்ற சமுதாயத்தை தமிழகத்திலே உருவாக்கக்கூடிய ஒரே தலைவர் நம்முடைய தளபதி மட்டும்தான். நாட்டு மக்களுக்கு இது நன்றாகவே தெரியும். ஆகவே நீங்கள் கவலைப்பட தேவையில்லை. எந்த சக்தியாலும் தமிழ்நாட்டிலே இனி நம்மை தடுத்து நிறுத்த முடியாது. தமிழ்நாட்டின் மண்ணிலே அவர் முதலமைச்சராவதை எந்த சக்தியாலும் தடுத்து விட முடியாது, நமக்கு விசில் சின்னம் கிடைத்திருக்கிறது. நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தூங்கிக் கொண்டிருப்பவர் காதிலே சென்று விசிலை அடித்து விடாதீர்கள். ஓட்டு போய்விடும். பஸ் ஸ்டாண்டில் வயதாக தடுமாறிக் கொண்டிருக்கிற பெரியவர் அருகே திடீரென்று விசில் அடித்தால் அவர் தடுமாறி போய்விடுவார். ஆகவே நம்முடைய விசிலை பொறுத்தவரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஏனென்று சொன்னால் நாம் அளிக்கக்கூடிய வாக்கில்தான் நம்முடைய வெற்றி வரலாறு இருக்கிறது என்பதை மறக்காமல் நம் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இங்கே வந்திருக்கிற நீங்கள் அத்தனை பேரையும் உணர்ச்சிப்பூர்வமாக இருக்கிறீர்கள். ஆயிரம் ரூபாய் கொடுத்து அங்கே கூட்டுகிறார்கள். ஒரு ரூபாய் கூட இல்லாமல் இங்கே மக்கள் கூட்டம் கூடுகிறது. இந்தக் கூட்டத்தை பார்க்கும்போது நம்மை வெல்வதற்கு எந்த சக்தியும் இனி தமிழகத்தில் இல்லை என்ற வரலாறு படைக்கின்ற காலம் அமையும். நிகழ்வை துவக்கி வைக்கக்கூடிய வாய்ப்பினை உருவாக்கி தந்திருக்கிற நம்முடைய தளபதிக்கு மீண்டும் என்றும் கோடான கோடி நன்றிகளை தெரிவித்து விடைபெறுகிறேன் என அரங்கம் அதிரும் விசில் சத்தத்துடன் விடைபெற்றார்.
முன்னதாக, அரங்கத்திற்கு உள்ளே நுழைந்த தவெக தலைவர் விஜய்யை நிர்வாகிகள் விசில் அடித்து வரவேற்றனர். மண்டபமே அதிரும் வகையில் விசில் சத்தம் எதிரொலித்தது. பின்னர் மொழிப்போர் தீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் தவெக தலைவர் விஜய்.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0