காவல்துறை கஸ்டடியில் இருந்த பிரபல ரவுடி மீது நாட்டு வெடிகுண்டு தாக்குதல்; சினிமா பாணியில் பெரம்பலூரில் துணிகரம்: எடப்பாடி கடும் கண்டனம்
காவல்துறை அழைத்துச் சென்ற பிரபல ரவுடி மீது நாட்டு வெடிகுண்டு தாக்குதல்; சினிமா பாணியில் பெரம்பலூரில் துணிகரம்
பெரம்பலூரில் ரவுடியை அழைத்துச் சென்ற போலீஸ் வாகனத்தின் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி காளி என்கிற வெள்ளகாளி. இவரை புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, சென்னை புழல் சிறைக்கு போலீஸ் ஜீப்பில் அழைத்துச் சென்றனர். பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே ஹோட்டலில் போலீசார் உணவருந்தி கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த 15 பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடி குண்டு வீசி கைதி காளியை வெட்ட முயன்றனர். இதனை தடுக்க போலீசார் முற்பட்டுள்ளனர். அப்போது போலீஸ் ஜீப் டிரைவருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. காயமடைந்த போலீசார் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “தமிழக சட்டமன்றத்தில் இன்று பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் தன் முதுகை தானே தட்டிக்கொண்டு பெருமை பேசி வந்த நேரத்தில், திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பெரம்பலூர் சுங்கச்சாவடி அருகே காவல்துறை வாகனம் ஒன்றின் மீது மர்ம நபர்கள் சிலர் நாட்டு வெடிகுண்டுகளை வீசியிருக்கிறார்கள்.
பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட மதுரையைச் சார்ந்த வெள்ளை காளி என்ற ரவுடியை காவலர்கள் விசாரணைக்காக அழைத்து செல்லும்போது இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
இந்த வெடிகுண்டு வீச்சில் ரவுடியின் பாதுகாப்பிற்காக வந்த 4 காவலர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு காவல்துறையை பார்த்தோ, இந்த அரசை பார்த்தோ கிஞ்சித்தும் அச்சமில்லை என்ற நிலைதான் நிலவுகிறது. சட்டம் ஒழுங்கை சந்தி சிரிக்க வைக்கும் நிலையில், ஆட்சி சக்கரத்தை ஏனோ தானோ என்று சுழற்றி வரும் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த சம்பவத்திற்கு யார்மீது பழிபோடப் போகிறார் என்று தெரியவில்லை. காவல்துறையை தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்காத முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வன்மையாக கண்டிக்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தாக்குதல் நடத்தியவர்களை பிடிக்க மாவட்டம் முழுவதும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரவுடி வெள்ளைக்காளியை காப்பாற்றுவதற்காக போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய் நிலையில், சினிமா பாணியில் தோட்டாக்கள் படாமல் 2 கார்களில் கொலைக் கும்பல் தப்பியோடியுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
1
Sad
0
Wow
0