சபரிமலையில் இன்று மகர ஜோதி: லட்சக்கணக்கான பக்தர்கள் சரண கோஷத்துடன் தரிசனம்
சபரிமலையில் இன்று மகர ஜோதி தரிசனம்: லட்சக்கணக்கான பக்தர்கள் சரண கோஷத்துடன் தரிசனம்
சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடைபெற்றது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், மாலையில் திருவாபரணங்கள் அணிவித்து தீபாராதனையும்,ஜோதி தரிசனமும் நடைபெற்றது . சபரிமலையில் மகர விளக்கு காலத்தின் முக்கிய நிகழ்வாக மகரஜோதி தரிசனம் இன்று மாலை நடைபெற்றது. இதற்கு முன்பாக மகர சங்கரம பூஜை இன்று மாலை 3:08 மணிக்கு நடந்தது. சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு கடக்கும் நேரத்தில் திருவிதாங்கூர் அரண்மனையிலிருந்து தூதர் மூலம் கொடுத்து விடப்படும் நெய் தேங்காய் உடைக்கப்பட்டு ஐயப்பன் விக்ரகத்தில் நேரடியாக அபிஷேகம் செய்யப்பட்டது. இதற்காக இன்று மதியம் ஒரு மணிக்கு நடை அடைக்கப்பட்ட பின்னர் மீண்டும் 2:45 மணிக்கு திறக்கப்பட்டது. 3:08 மணிக்கு மகர சங்கரம நெய்யபிஷேகம் நடைபெற்றது . அபிஷேகத்துக்கு பின்னர் நடை அடைக்கப்படாது. எனினும் பக்தர்களுக்கு தரிசனம் இல்லை.
திருவாபரணங்கள் வந்த பின்பு தீபாராதனையும், ஜோதி தரிசனமும் முடிந்த பின்னரே பக்தர்கள் 18 படிகளில் ஏற அனுமதிக்கப்பட்டனர். பந்தளத்திலிருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட திருவாபரண பவனி இன்று மாலை 5:30 மணிக்கு சரங்குத்தி வந்தடைந்தது. அங்கு தேவசம்போர்டு அதிகாரிகளின் வரவேற்புக்கு பின்னர் பெரிய நடைப் பந்தல் வழியாக 6:30 மணிக்கு சன்னிதானம் வந்தடைய, தந்திரியும் மேல் சாந்தியும் திருவாபரண பெட்டியை வாங்கி நடை அடைத்து ஆபரணங்கள் அணிவித்து 6.40 மணிக்கு நடை திறந்து தீபாராதனை நடத்தினார்.
அதே நேரத்தில் கோயில் நேர் எதிரே கிழக்கு பக்கத்தில் மகர நட்சத்திரம் ஒளிவிட்டு பிரகாசித்தது. இதனை தொடர்ந்து பொன்னம்பலமேட்டில் மூன்று முறை ஜோதி காட்சி தென்பட்டது.
ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் நடைபெறும் மகரஜோதி தரிசனத்தில் பங்கேற்க லட்சக்கணக்கான ஐயப்பன் பக்தர்கள் சபரிமலைக் கோயிலில் திரண்டனர்.
ஜோதி வடிவில் காட்சியளித்த ஐயப்பனை லட்சக்கணக்கான பக்தர்கள் சரண கோஷம் முழங்க மனம் உருக வடிவட்டனர்.
ஜோதி தரிசனத்தை கண்டு தரிசிப்பதற்காக கடந்த ஐந்து நாட்களாகவே சன்னிதானத்தில் இலட்சக்கணக்கான பக்தர்கள் முகாமிட்டிருந்தனர். பாண்டித்தாவளம், கொப்பரை களம், மாளிகைபுறம், இன்சினேட்டர், வாட்டர் டேங்க் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காடுகளில் செடி கொடி, இலைகள், துணிகள், போன்றவற்றால் தற்காலிக ஷெட்டுகள் அமைத்து அதில் பக்தர்கள் தங்கி இருந்தனர். ஷெட்டுகளில் தீ விபத்தை தவிர்க்க சமையல் செய்ய தடை விதிக்கப்பட்டது. மகரஜோதி தரிசனம் முடிந்த பின்னர் பக்தர்கள் திருவாபரணங்கள் அணிந்த ஐயப்பனை தரிசிக்க முண்டியடிக்கும் போது நெரிசல் ஏற்பட்டு விடாமல் தடுக்க போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக பல்வேறு பாதைகளை தேர்வு செய்து திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
நாளை (ஜன.,15) அதிகாலை 3:00 முதல் 6:00 மணி வரை ஆன்லைன் முன்பதிவு செய்த பக்தர்கள் காலை 6:00 மணிக்கு பின்னர் பம்பைக்கு வந்தால் போதுமானது என்று தேவசம்போர்டு அறிவித்துள்ளது. அதுபோல நாளை அதிகாலை வரை பத்தனம் திட்டா மற்றும் நிலக்கல்லிருந்து பம்பைக்கு தனியார் வாகனங்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரள அரசு பஸ்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சன்னிதானம் மற்றும் பம்பையில் 5500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜோதி தரிசனம் முடிந்ததும் பக்தர்கள் ஊர் திரும்புவதற்காக கேரள அரசு போக்குவரத்து கழகம் ஆயிரம் பஸ்களை தயார் நிலையில் நிறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0