ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுந்த ஏகாதசி விழா நிறைவு

Jan 9, 2026 - 10:37
 0  27
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுந்த ஏகாதசி விழா நிறைவு

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுந்த ஏகாதசி விழா நிறைவு 

 

பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழா திருநெடுந்தாண்டகத்துடன், பகல் பத்து, இராப்பத்து என 21 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

 

அதன்படி டிசம்பர் 20ம் தேதியன்று பகல்பத்து திருவிழா தொடங்கியது. முக்கிய திருநாளான சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பு டிசம்பர் 30ம்தேதி அதிகாலை நடைபெற்றது.

அன்று முதல் நடைபெற்று வந்த இராப்பத்து உற்சவத்தில் நம்பெருமாள் கைத்தல சேவை, வேடுபறி உற்சவம் மற்றும் நேற்றைய தினம் நம்பெருமாள் தீர்த்தவாரி வைபவமும் வெகுசிறப்புடன் நடைபெற்றதுடன், இராப்பத்து திருநாளின்போது தினசரி திறக்கப்பட்டு வந்த பரமபதவாசலும் நேற்று இரவு 8 மணியுடன் மூடப்பட்டது.

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் 21 நாள் நடைபெற்று வந்த வைகுந்த ஏகாதசி பெருவிழாவில் நிறைவு நாளான இன்று ஆயிரங்கால் மண்டபத்தில் நம்மாழ்வார் மோட்சம் காலை நடைபெற்றது. காலை நம்பெருமாள் நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் வைபவத்தை முன்னிட்டு நம்மாழ்வார் நம்பெருமாளின் திருவடிகளில் சரணடந்தார். அவரது விக்ரஹம் முழுவதும் திருத்துழாய் எனப்படும் துளசி மூலம் மறைக்கப்பட்டு மோட்சம் அளிக்கப்பட்டது.

நம்பெருமாள் தனது மாலையை நம்மாழ்வாருக்கு அணிவித்து சகல மரியாதையுடன் நம்மாழ்வாருக்கு மோட்சம் அளித்ததை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோவிந்தா கோவிந்தா, ரங்கா ரங்கா என கோசமிட்டவாரு தரிசனம் செய்தனர். இதையடுத்து நம்பெருமாள் காலை 10மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இன்று காலை உடன் ஸ்ரீரங்கத்தில் நடைபெற்று வந்த வைகுந்த ஏகாதசி திருவிழா நிறைவு பெற்றது. 

இதனை அடுத்து மூலவர் பெரிய பெருமாள் தரிசனம் இன்று மாலை 3 மணி வரை கிடையாது. மூன்று மணி முதல் 6:00 மணி வரை மட்டுமே ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் மூலவர் பெரிய பெருமாள் தரிசனம் பக்தர்களுக்கு கிடைக்கப்பெறும். ஆறு மணிக்கு மேல் ஸ்ரீரங்கம் ஆரியபட்டாள் வாயிலில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 21 நாட்களாக நடைபெற்று வந்த சொர்க்கவாசல் திருவிழாவின் நிறைவு நாளில் மனமுருக ஸ்ரீநம்பெருமாளை வழிபட்டனர்.

 

108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்கவாசல் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம், காவல்துறை இணைந்து எந்தவித அசம்பாவிதமும் இன்றி இலட்சக்கணக்கான பக்தர்களை கையாண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

க.சண்முகவடிவேல் 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0