திருச்சியில் தொடரும் நேரு, மகேஷ் டீம் உட்கச்சி பூசல்: கல்வெட்டிலும் அரசியல்: அந்தோ பிரதாபத்தில் திருச்சி எம்பி

Jan 7, 2026 - 22:03
Jan 7, 2026 - 22:18
 0  264
திருச்சியில் தொடரும் நேரு, மகேஷ் டீம் உட்கச்சி பூசல்: கல்வெட்டிலும் அரசியல்: அந்தோ பிரதாபத்தில் திருச்சி எம்பி

திருச்சியில் தொடரும் நேரு மகேஷ் டீம் உட்கச்சி பூசல்: கல்வெட்டிலும் அரசியல்: அந்தோ பிரதாபத்தில் திருச்சி எம்பி  

 

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், திருவானைக்காவல், அம்மா மண்டபம் படித்துறை என முக்கிய ஆன்மீக சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தளங்களைக் கொண்ட ஸ்ரீரங்கத்தில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்வர். ஆனால் பொது பேருந்து நிறுத்தம் என்ற பேருந்து நிறுத்த வசதி பல ஆண்டுகளாக கனவாக இருந்த நிலையில், இதற்கு தீா்வு காணும் வகையில் தமிழக அரசின் மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.11.10 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டு, கடந்த 2024-ஆம் ஆண்டு ஜனவரியில் பணிகள் தொடங்கின. 

ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே, காந்தி சாலையில் 1.08 ஏக்கா் பரப்பளவில் ரூ11.10 கோடி செலவில், கடைகள், உணவுக்கூடம், பேருந்துகள் நிறுத்த விசாலமான இடம் என பல்வேறு வசதிகளுடன், இதில், ரூ.7.77 கோடி மூலதன மானிய நிதியிலிருந்தும், ரூ.3.33 கோடி மாநகராட்சி நிதியிலிருந்தும் ஒதுக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்து நாளை காலை 7 40 மணிக்கு பேருந்து நிலையம் திறப்பு விழா விமர்சையாக நடைபெறவிருக்கின்றது.

திருச்சி ஸ்ரீரங்கம் பேருந்து நிலையத்தை நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைக்கிறார். இது தொடர்பான கல்வெட்டில் கே.என்.நேரு பெயருக்கு அடுத்து மாநகராட்சி மேயர் அன்பழகன், ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி, மாநகராட்சி ஆணையர் மதுபாலன் பெயர்கள் இருக்கிறது. ஆனால் திமுகவின் துணைமேயரான திவ்யா தனக்கோடி பெயர் இல்லை. 

நீண்ட காலமாகவே திருச்சி வடக்கு மற்றும் மத்திய மாவட்ட அரசு நிகழ்ச்சி, அரசியல் நிகழ்ச்சிகளில் அமைச்சர் நேரு தரப்பினரின் பெயர்கள் மட்டுமே இடம் பெறுவதும், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரான அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தரப்பினர் புறக்கணிக்கப்படுவதும் தொடர்கதையாகவே இருக்கிறது 

அதே போல் தெற்கு மாவட்டத்தில் நடக்கக்கூடிய நிகழ்ச்சிகளில் நேரு தரப்பினர் புறக்கணிக்கப்படுவார்கள். இதை மீறுவோர்கள் மீது, என்று கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். 

அதேபோல் கட்சி தொடர்பாக நடக்கக்கூடிய நிகழ்ச்சிகள் எல்லாமே வடக்கு, மத்திய மாவட்ட நிகழ்ச்சிகள் தனியாகவும் தெற்கு மாவட்ட நிகழ்ச்சிகள் தனியாகவும் நடக்கும். அது குறித்த பத்திரிகை செய்திகளும் அறிக்கைகளும் படங்களும் தனித்தனியாகத்தான் வரும். 

கட்சியை கட்டுக்கோப்பாக நடத்த வேண்டிய கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு இருக்கும் இடத்திலேயே இப்படி என்றால் இன்னும் மற்ற மாவட்டத்தில் உள்ள நிலைமைகளை சொல்ல வேண்டியதில்லை.

ஒரு அமைச்சரின் முகாமில் இருந்து இன்னொரு அமைச்சரின் முகாமில் உள்ள கட்சியினருக்கு கல்யாணத்துக்கு பத்திரிகை கொடுத்ததற்காக கடுமையாக கண்டிக்கப்பட்டு கந்தலாகி நொந்து நூலாகிப் போனவர்கள் பட்டியல் ஏராளம் ஏராளம்.

தற்போது இந்த மனநிலை அரசு அதிகாரிகளுக்கும் தொத்திக் கொண்டு விட்டது. நீண்ட நாட்களாகவே அரசு நிகழ்ச்சிகளிலும் இதே பிரிவினையை அதிகாரிகள் பின்பற்றுகிறார்கள். திருச்சி மாவட்டத்திற்கு என ஒரு எம்பி இருக்கிறார். திமுக தரப்பினர் நடத்தும் நிகழ்ச்சியில் அவர் பெயர் விட்டு போகலாம், ஆனால் திருச்சி மாநகராட்சி சார்பில் நடக்கக்கூடிய அதுவும் ஒரு எம்பி தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் பேருந்து நிலைய திறப்பு விழாவில் அவரது பெயரைக் கூட அதிகாரிகள் தவிர்த்து விட்டனர். தப்பித்தவறி இதை மறந்து செயல்படும் அதிகாரிகள் அமைச்சர்களின் அக்னி பார்வையில் சிக்கி அல்லல்பட்ட சம்பவங்களும் உண்டு. 

அப்படியே பெயர் போட்டாலும் அமைச்சர் நேரு தரப்பினர் நடத்தும் நிகழ்ச்சிகளில் அமைச்சர் மகேஷ் தரப்பினர் என்று கருதப்படுகிற துணை மேயர் திவ்யா தனக்கோடி வந்து கலந்து கொள்ள மாட்டார் என்பதே நடைமுறையாக இருக்கிறது. அதனால் அவரது பெயரை தவிர்த்து விட்டே நிகழ்ச்சிகள் நடக்கிறது என்கின்றனர் கரை வேட்டிக்காரர்கள்.

இப்படி மக்கள் வரிப்பணத்தில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளில் கூட உட்கட்சி அரசியல் செய்துவிட்டு, இன்னும் சில மாதங்களில் வரப்போகும் தேர்தலில் எப்படி ஒற்றுமையாக செயல்பட்டு ஓட்டு கேட்கப்போகிறார்கள் என்று உண்மையான திமுக தொண்டர்கள் வருத்தப்படுகிறார்கள்.

இதில் பெரிய பரிதாபம், திமுக கூட்டணியில் திருச்சி நாடாளுமன்றத்தில் போட்டியிட்டு மக்கள் வாக்களித்து ஜெயித்த மதிமுக வின் "துரை வைகோ" வின் பெயரும் இடம் பெறவில்லை என்பதுதான் உச்சகட்ட பரிதாபம்.

க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0