மது போதையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்: பொதுமக்கள் அதிர்ச்சி

Dec 24, 2025 - 17:07
 0  125
மது போதையில் பாதுகாப்பு பணியில்  ஈடுபட்ட காவலர்: பொதுமக்கள் அதிர்ச்சி

பாதுகாப்புக்கு வந்த காவலர் மது போதையில் தள்ளாடிய சம்பவம்; திருச்சியில் பரபரப்பு 

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக கூட்டணி சார்பில் மத்திய அரசை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பாதுகாப்புக்காக வந்த காவலர் ஒருவர் பணியின் போது உச்சபட்ச மதுபோதையில் தள்ளாடிக் கொண்டே பாதுகாப்பு பணியில் இருந்தது சக காவலர்கள் மத்தியிலும், ஆட்சியர் அலுவலகத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்த விபரம் வருமாறு ;

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றி அதன் நோக்கத்தை சிதைக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் இன்று தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சியினரால் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 அந்த வகையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக கூட்டணி கட்சியினரான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியினர், திராவிடர் கழகத்தினர் உள்ளிட்ட தோழமைக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக கன்டோன்மென்ட் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் பணியில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாதுகாப்பு பணிக்காக வந்த ஆயுதப்படை காவலர் சதிஷ் என்பவர் மது போதையில் தள்ளாடிக் கொண்டு இருந்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சக கட்சியினர் மற்றும் காவலர்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதனை பார்த்த மீடியாக்கள் அவரை ரகசியமாக படம் எடுக்கத் துவங்கினர். இதனை அறிந்து கொண்ட சக போலீசார் சதீஷை பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்துக் கொண்டு சென்று அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தினர். இதனை அடுத்து காவல்துறை உயர் அதிகாரிகள் மீடியாக்களிடம் சமரசம் பேசினர். அதே நேரம் ஆர்ப்பாட்டத்திற்கு வந்த பொதுமக்கள் சக அரசியல் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

பாதுகாப்பு பணிக்காக வந்த காவலர் மது போதையில் இருந்த சம்பவம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

க.சண்முகவடிவேல் 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 1
Sad Sad 0
Wow Wow 0