“ஒரு ஒளி பிறக்கும்; அது நம்மை வழிநடத்தும்” - கிறிஸ்துமஸ் விழாவில் விஜய்
“ஒரு ஒளி பிறக்கும்; அது நம்மை வழிநடத்தும்” -
கிறிஸ்துமஸ் விழாவில் விஜய்
தவெக சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள சொகுசு விடுதியில் இன்று (திங்கட்கிழமை) சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. அந்நிகழ்வில் விஜய் பேசும்போது, “இது ஒரு அன்பான தருணம், அழகான தருணம், அன்பும், கருணையும் தானே எல்லாம். தமிழ்நாட்டு மண், தாயன்பு கொண்ட மண். ஒரு தாய்க்கு எல்லா பிள்ளைகளும் ஒன்றுதானே. அதுபோல பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் என எல்லா பண்டிகைகளையும் பகிர்ந்துகொள்ளக் கூடிய ஊர்தான் நமது ஊர்.
இங்கு வாழ்க்கை முறையும், வழிபாட்டு முறையும் வேறு வேறென்றாலும்;நாம எல்லோரும் சகோதரர்கள்தானே. அதனால்தான், நாம அரசியலுக்கு வந்ததுக்கு அப்புறம், கடவுள் நம்பிக்கை உண்டுன்னு அறிவித்தது ஏன் தெரியுமா?
உண்மையான நம்பிக்கைதான் நல்லிணக்கத்தை விதைக்கும். மற்றவர்களின் நம்பிக்கையை மதிக்க சொல்லித்தரும். அப்படிப்பட்ட நம்பிக்கை இருந்தாலே போதும், எப்பேர்பட்ட பிரச்சனைகளையும் ஜெயிக்கும்.
அதுமட்டுமில்ல, அப்படிப்பட்ட நம்பிக்கையோட வலிமையை பற்றி சொல்றதுக்கு பைபிளில் நிறைய கதைகள் இருக்கு. ஒன்றை பற்றி சொல்ல வேண்டும் என்றால், ஒரு இளைஞனுக்கு எதிரா தனது சொந்த சகோதரர்களே பொறாமைப்பட்டு, அவனை பாழுங்கிணற்றில் தள்ளிவிட்டு, அதிலிருந்து அவன் மீண்டு வந்து நாட்டுக்கே அரசனாகி, தனக்கு துரோகம் செய்த சகோதரர்களை மட்டுமில்ல நாட்டையே எப்படி காப்பாற்றுனாருன்னு கதைகள் பைபிளில் இருக்கு.
அந்த குறிப்பிட்ட கதை யாரைப்பற்றிய கதைன்னு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லைன்னு நினைக்கிறேன். அது உங்களுக்கு நல்லா தெரியும். இப்படிப்பட்ட கதைகள் எல்லாம் எதை உணர்த்துகிறது என்றால், கடவுள் அருளும், மக்களை மானசீகமாக நேசிக்கிற அந்த அன்பும், அதீத வலிமையும், அதுக்கான உழைப்பும் இருந்தாலே போதும், எவ்வளவு பெரிய எதிரிகளையும் ஜெயிக்கலாம்.
இந்த விழாவில் நான் உறுதி ஒன்றைக் கொடுக்கிறேன். சமூக, சமய, நல்லிணக்கத்தை பாதுகாப்பதில் தவெக 100% உறுதியாக இருக்கும். அதில் எந்தவிதமான சமரசமும் கிடையாது. நமது கொள்கைகளுக்கு மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகள் எனப் பெயர் வைத்ததே இந்த உறுதியினால் தான். கண்டிப்பாக ஒரு ஒளி பிறக்கும். அந்த ஒளி நம்மை வழிநடத்தும். அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். அனைத்துப் புகழும் எல்லாம் வல்ல இறைவனுக்கே.. Praise the Lord. நம்பிக்கையுடன் இருங்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்” என அவர் பேசினார்.
முன்னதாக இந்த நிகழ்ச்சியில் தவெக நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் திரளாக கலந்துக்கொண்டு குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
1
Funny
0
Angry
0
Sad
0
Wow
0