ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் கடும் கெடுபிடி; முன்னாள் அரசு கொறடா ஆர்.மனோகரன் தவிப்பு

Dec 21, 2025 - 18:17
Dec 22, 2025 - 18:43
 0  48
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் கடும் கெடுபிடி; முன்னாள் அரசு கொறடா ஆர்.மனோகரன் தவிப்பு

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் கடும் கெடுபிடி;
முன்னாள் அரசு கொறடா ஆர்.மனோகரன் தவிப்பு

   108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் நடைபெறும் வைகுந்த ஏகாதசி பெருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். பகல் பத்து, இராப்பத்து என 21 நாட்கள் நடைபெறும் இந்த விழா இந்த ஆண்டு நேற்று முன்தினம் திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.
   திருமொழித்திருநாள் எனப்படும் பகல் பத்து உற்சவம் தற்போது நடந்து வருகின்றது. இதனை முன்னிட்டு திருச்சி மட்டுமல்லாது பிறமாநிலங்களில் இருந்தும், பல நாடுகளில் இருந்தும் தினம் தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலுக்கு வந்து அரங்கனை தரிசித்து வருகின்றனர். இந்த விழாக்காலங்களில் உள்ளூர் முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகளுக்கு கோயிலில் ரெங்கநாதரை தரிசிக்க சிறப்பு அனுமதி கொடுக்கப்பட்டு வருவது வழக்கமாக இருக்கும் நிலையில் தற்போது கோயிலில் பெரும் கெடுபிடிகளால் உள்ளூர் பிரமுகர்கள் மட்டுமல்லாது பக்தர்களும் பெரும் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர். மீடியக்களுக்கும் பெரும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றது.
  பகல்பத்து உற்சவத்திற்காக உற்சவர் ரெங்கநாதர் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி அர்ஜூன மண்டபத்தில் எழுந்தருள்வார். அந்தவகையில், பகல் பத்து திருநாளின் முதல் நாளான நேற்று, திருச்சியை பூர்விகமாக கொண்ட தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமை கொறடாவும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.மனோகரன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை தரிசிக்க கோயிலுக்கு வந்திருந்தார். அவருக்கு வாசல் திறக்கப்படாமல் நீண்ட நேரம் ரெங்கநாதரை வழிபாடு செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. நீண்ட நேரம் காத்திருந்த அவருக்கு காலதாமதமாகத்தான் கதவு திறக்கப்பட்டு ரெங்கனை வழிபட அனுமதிக்கப்பட்டார். இதனால் அவர் கூனிக்குறுகி நின்ற சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்களுக்கும், முக்கிய பிரமுகர்களுக்கும் பெருத்த அனுதாபத்தை அவர்மேல் உருவாக்கியது.
   அதேபோல், இன்று திருச்சி மாநகராட்சி துணை மேயரின் கணவர் தனக்கோடி ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை வழிபாடு செய்ய கோயிலுக்கு வந்திருந்தார். அவரையும் கோயில் ஊழியர்கள் உதாசீனப்படுத்தினர். அதேநேரம் ராம்குமார் மற்றும் அவருக்கு வேண்டியப்பட்டவர்கள் மட்டுமே மூலஸ்தான மண்டபத்திற்கு எளிதில் செல்லும் நிலை காணப்பட்டது.
\   ஸ்ரீரங்கத்தைப் பொறுத்தவரை தற்போது ஆளும் கட்சி பிரமுகரான ராம்குமார் என்பவர் முழு ஆளுமை செலுத்தி வருகின்றார். அமைச்சர் சேகர்பாபுவின் ஆதரவாளராக செயல்பட்டுக்கொண்டிருக்கும் ராம்குமார், திருச்சி அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் இருவரையுமே உதாசீனப்படுத்தி அவ்வப்போது திமுக உள்ளூர் பிரமுகர்களின் கோபத்தைப் பெற்றவர். ஸ்ரீரங்கம் கோயிலில் ராம்குமாரின் முழுஆளுமை செலுத்தும் நிலை தொடர்வதால் ஆளும்கட்சியை சார்ந்தவர்களே ராம்குமாருக்கு எதிராக குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0