பெரியார் பெயரைச் சொல்லிக் கொண்டு கொள்ளை அடிக்காதீர்கள்: திமுக தீய சக்தி - ஈரோட்டில் விஜய்

Dec 18, 2025 - 13:15
Dec 18, 2025 - 13:49
 0  41
பெரியார் பெயரைச் சொல்லிக் கொண்டு கொள்ளை அடிக்காதீர்கள்: திமுக தீய சக்தி - ஈரோட்டில் விஜய்

பெரியார் பெயரைச் சொல்லிக் கொண்டு கொள்ளை அடிக்காதீர்கள்: தவெக தூய சக்தி, திமுக தீய சக்தி - ஈரோட்டில் விஜய்

ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதற்காக 16 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மைதானம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக சென்னையில் இருந்து தனி விமானத்தில் காலை 10 மணி அளவில் கோவை விமான நிலையம் வந்தடைந்தார் விஜய். பின்னர் அங்கிருந்து கார் மூலம் நேராக விஜயமங்கலம் பொதுக்கூட்ட மைதானத்துக்கு வந்தார். வழி நெடுக அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விஜய்யின் வாகனத்தை இரு சக்கர வாகனத்தில் தொண்டர்கள் பின் தொடர்ந்து வந்தனர்.

இதனைத்தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்துக்கு விஜய் வருகை தந்தார். அவருக்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனிடையே த.வெ.க. பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானம் தொண்டர்களால் நிரம்பி வழிந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் , ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் ஆவேசமாக உரையாற்றினார். தவெக தலைவர் விஜய் பேசுகையில், “பொதுவாக நல்ல காரியங்கள் ஆரம்பிக்கும்முன் மஞ்சளைக் கொண்டுதான் ஆரம்பிப்பார்கள். நம் வீட்டில் கூட நம் குடும்பப் பெண்கள் நமக்காக மஞ்சள் புடவை கட்டிக்கொண்டுதான் வேண்டிக்கொள்வார்கள். நம் கொடியிலும் மஞ்சள் இருக்கிறது. அப்படி மஞ்சள் விளையும் பூமிதான் ஈரோடு. இங்கு வந்து மஞ்சளை பற்றி பேசாமல் வேறு எங்கு பேசுவது. ஈரோடு விவசாயத்திற்கு பெயர்போன மண். விவசாயத்திற்கு கவசமாக இருப்பது காளிங்கராயன் அணை. காளிங்கராயன் கால்வாய். அந்தப் பணிகளில் அவர் ஈடுபட்டுக்கொண்டு இருந்தபோது அவர் சோர்வடைந்தாராம். அப்போது அவரது தாய், மகனே காளிங்கா தயிர் விற்ற காசு தாழ்வாரம் வரை இருக்கிறது. மோர் விற்ற காசு இருக்கிறது. அதை எடுத்துக்கொண்டு சென்று கால்வாய் வெட்டு என்றாராம். பெற்ற தாய் கொடுக்கும் தைரியத்திற்கு இணையாக வேறு எதுவும் இல்லை. அதை வைத்துக்கொண்டு எதையும் சாதிக்க முடியும். அப்படி ஒரு தைரியம் தான் நீங்கள் கொடுக்கிறீர்கள்.

இதை எப்படி கெடுக்கலாம்,. எப்படி பிரிக்கலாம்.. விஜய் மேல் சூழ்ச்சிகளை செய்து எப்படி மக்களை நம்பவைக்கலாம் என சிலர் நினைக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியவில்லை. இது இன்று நேற்று வந்த உறவில்லை. இது கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கும் மேலான உறவு. அதனால் நீங்கள் என்ன செய்தாலும் இந்த விஜயை மக்கள் ஒருநாளும் கைவிட மாட்டார்கள்.

காளிங்கராயன் அணை கட்டுவதற்காக பவானி சென்று பார்க்கும்போது ஒரு பாம்பு அங்கு உட்கார்ந்ததாம். அந்த இடத்தில்தான் அணை கட்ட ஆரம்பித்தாராம். அந்த பாம்பு சென்ற இடத்தில்தான் கால்வாய் வெட்டினாராம். சில வாய்மொழிக் கதைகள் சொல்கிறார்கள். தண்ணீர் சேர்த்து வைத்து குடிப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் வழிவகுப்பது என்பது எவ்வளவு நல்ல விசயம். இவற்றையெல்லாம் செய்துவிட்டு கதை சொன்னால் பரவாயில்லை. ஆனால், எதையும் செய்யாமல் கதை மட்டும் சொல்கிறார்கள். அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை விரிவுபடுத்தினால் அந்த மாவட்டங்களில் இருக்கும் மக்களுக்கும் விவசாயத்திற்கும் எவ்வளவு உதவிகரமாக இருக்கும். வள்ளுவர் கோட்டத்தில் காட்டிய அக்கறையை மக்களின் வாழ்வாதாரத்திலும் காட்டலாமே. ஏன் காட்ட மாட்டேன் என்கிறீர்கள். அரசாங்கம் நடத்துகிறீர்களா கண்காட்சி நடத்துகிறீர்களா?

ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் திருப்பிப்போட்ட சீர்திருத்த நெம்புகோல் பெரியார். அரசியல் சட்டத்திருத்தை மேற்கொள்ள போராட்டம் நடத்தியவர். நம் கொள்கை தலைவர் தந்தை பெரியார். அப்போது அண்ணாவும் எம்ஜிஆரும் யார். பெரியாரிடம் இருந்து கொள்கைகளை எடுத்துக்கொண்டோம். பெரியாரை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட அண்ணா எம்ஜிஆரிடம் இருந்து தேர்தல் அணுகுமுறைகளை எடுத்துக்கொண்டோம். அண்ணாவும் எம் ஜி ஆரும் தமிழ்நாட்டின் சொத்து. அவர்களை யாரும் எடுக்கக்கூடாது என்றெல்லாம் சொல்லக்கூடாது. உங்களுக்குதான் தவெக ஒரு பொருட்டே இல்லை என்று சொல்லிக்கொண்டு ஏன் புலம்புகிறீர்கள்.

பெரியாரின் பெயரையும் அவரது கொள்கையையும் பின் தொடருவதாக சொல்லிக்கொண்டு கொள்ளை அடிக்கின்றனர். தயவு செய்து பெரியாரின் பெயரைப் பயன்படுத்தி கொள்ளை அடிக்காதீர்கள். பெரியாரின் பெயரை சொல்லி கொள்ளை அடிப்பவர்கள்தான் நம் அரசியல் எதிரி. எதிரிகள் யாரென்று சொல்லிவிட்டு களத்திற்கு வந்திருக்கிறோம். அதனால் அவர்களை மட்டும்தான் எதிர்ப்போம். 2026 தேர்தலில் களத்தில் இருப்பவர்களை மட்டும்தான் எதிர்க்க முடியும். சம்பந்தமில்லாதவர்களை எல்லாம் எதிர்க்க முடியாது.  

எத்தனை வாக்குறுதிகள் கொடுத்தார்கள். சொன்னார்களே செய்தார்களா? மஞ்சள் விவசாயத்திற்கு எதுவும் செய்யவில்லை. கரும்பு நெல்லுக்கு அரசு விலை நிர்ணயிக்கிறது. ஆனால், அதிலும் ஊழல். கொள்முதல் ஒழுங்காக நடப்பதில்லை. தவெகவை எப்படியெல்லாம் முடக்கலாம் என்றுதான் யோசிக்கிறார்கள்.

விஜய் அரசியல் பேசவில்லை என்கிறார்கள். 10 நிமிடம்தான் பேசுகிறார் என்கிறார்கள்., நான் எத்தனை நிமிடம் பேசினால் உங்களுக்கு என்ன? ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்களை சந்தித்து அவர்களது பிரச்னைகளை பேசுவது அரசியல் இல்லாமல் வேறு என்ன?

நான் சலுகைகளுக்கு எதிரானவன் இல்லை. மக்களுக்கான சலுகைகளை இலவசங்கள் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. மக்கள் காசில் மக்களுக்கு செய்வதை எப்படி இலவசம் என்பீர்கள்,. ஓசியில் போகிறீர்கள் என்று சொல்லி அசிங்கப்படுத்துகிறீர்கள். மக்களுக்கு ஒன்று என்றால் விஜய் வந்து நிற்பான். 

மக்களுக்கான வாழ்வாதரம் உயருவதற்கான திட்டங்களை அரசாங்கம் செய்துகொடுக்க வேண்டும். அப்படிப்பட்ட அரசாங்கம்தான் நல்ல அரசாங்கம். இதைத்தான் அன்று சொன்னோம். எப்படி செயல்படுத்துவீர்கள் என்று கேட்கிறார்கள், வாயிலேயே வடை சுடுவதற்கு நாங்கள் என்ன திமுகவா? எல்லோருக்கும் வீடு கட்டிக்கொடுப்போம் என்றோம். எங்கள் ஆட்சியிலேயே கொடுத்துவிட்டோம் என்கின்றனர். இந்த ஊரில் வாடகைக்கு இருப்பவர்களே இல்லையா? எல்லோரும் டிகிரி படிக்க வேண்டுமென்று சொன்னோம். நாங்களே படிக்கவைத்து விட்டோம் என்கின்றனர். அது உண்மையானால் பள்ளி அளவில் அதிக மாணவர்கள் இடைநிற்பது யாருடைய ஆட்சிக்காலத்தில். காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தீர்களே? எத்தனை பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. இந்த விஷயங்களை எல்லாம் மக்களிடம் எடுத்து சொன்னால், அவதூறு பரப்புகிறார்கள். 

ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். ஏன் திமுகவை இப்படி விமர்சிக்கிறார்கள் என்று நினைத்திருக்கிறேன். ஆனால் இப்போதுதான் புரிகிறது. அவர்கள் சொன்னதையே நானும் சொல்கிறேன். திமுக ஒரு தீய சக்தி, தீய சக்தி, தீய சக்தி.. தவெக ஒரு தூய சக்தி.. தீய சக்தி திமுகவுக்கும், தூய சக்தி தவெகவுக்கும் இடையே தான் போட்டியே. மக்கள் விரோத திமுக அரசை வீழ்த்த மக்கள் சக்திமிக்க நம்மால் தான் முடியும்.

செங்கோட்டையன் சேர்ந்ததுபோல் பலரும் வந்து சேர இருக்கிறார்கள். அவர்களுக்கும் உரிய அங்கீகாரம் வழங்கப்படும்" என்றார்.

ஈரோடு பிரச்சாரத்தில் விஜயின் பேச்சு நிதானமாகவும் கூர்மையாகவும் இருந்தது. கரூர் பிரச்சார சம்பவத்தில் கற்றுக்கொண்ட பாடத்திற்கு பிறகு இந்த பொதுக்கூட்டம் நிர்வாகிகளால் திறம்பட கையாளப்பட்டிருந்தது. திமுகவை எதிர்த்து விஜய் பேசி இருந்தாலும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் குறைந்தபட்சம் 20 பேரை கொண்ட அந்த பகுதியில் திமுக தவெக இருவருக்கு மட்டுமே போட்டி என்பதை மீண்டும் வலுமையாக எடுத்துரைத்து விடைபெற்றது அதிமுகவை ஒரு பொருட்டாகவே தவெக நினைக்கவில்லை என்பதை உணர்த்துகிறது 

க.சண்முகவடிவேல் 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 1
Wow Wow 0