வெளிநாட்டவர் சட்டத்தின் கீழ் தண்டனையில் இருந்து இலங்கை தமிழர்களுக்கு விலக்கு; தமிழகத்திலிருந்து பிரதமருக்கு பறந்த 50,000 கடிதங்கள்
வெளிநாட்டவர் சட்டத்தின் கீழ் தண்டனையில் இருந்து இலங்கை தமிழர்களுக்கு விலக்கு; தமிழகத்திலிருந்து பிரதமருக்கு பறந்த 50,000 கடிதங்கள்
டிசம்பர் 10 மனித உரிமை தினம் என்பதால் அந்த தேதியை குறி வைத்து தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர் முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் சுமார் 50,000 பேர் மத்திய அரசுக்கும், மோடிக்கும் நன்றி தெரிவித்தும், கோரிக்கை விடுத்தும் கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். இது குறித்த விபரம் வருமாறு;
தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர் முகாம்களில் வசிப்பவர்கள், குடிவரவு மற்றும் வெளிநாட்டவர் சட்டத்தின் கீழ், தண்டனையில் இருந்து விலக்கு அளிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கு நன்றி தெரிவித்து, பிரதமர் மோடிக்கு தமிழகத்தின் மிகப்பெரிய இலங்கை தமிழர்கள் வசிக்கும் திருச்சி கொட்டப்பட்டு இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த இலங்கை தமிழர்கள் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பி இருந்தனர்.
இவர்கள் இலங்கையில் இருந்து, 2015, ஜனவரி 9க்கு முன், உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்து, அரசிடம் பதிவு செய்து சட்டபூர்வமாக தங்கி உள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள 103 முகாம்களில் சுமார் 58,000 பேர் வசிக்கின்றனர்.
இந்நிலையில், மத்திய அரசு, கடந்த, செப்டம்பர் 2ல், குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ், தண்டனையிலிருந்து இலங்கை தமிழர்களுக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது. அதையடுத்து, திருச்சி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை தமிழர் முகாமில் வசிப்பவர்கள், பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து, திருச்சி தலைமை தபால் நிலைய அலுவலகத்தில் இருந்து, மாதினி, நளினி உள்ளிட்ட இலங்கைத் தமிழர்கள் நூற்றுக்கணக்கான கடிதங்களை அனுப்பினர்.
அந்த கடிதத்தில், மாண்புமிகு இந்தியப் பிரதமருக்கு ஒரு வேண்டுகோள், உங்களுக்கு வணக்கம் ஐயா, உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட 01.09.2025 தேதியிட்ட S.O. 3997(E) உத்தரவின் மூலம் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம், 2025 இன் தண்டனை விதிகளிலிருந்து எங்களுக்கு விலக்கு அளித்ததற்கு எங்களது மனமார்ந்த நன்றியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகள் சமூகமான நாங்கள், நான்கு தசாப்தங்களாக ஏங்கி எங்களுக்கு நிவாரணம் வழங்கியதற்காக கருணையுடன் முடிவெடுத்ததற்காக மாண்புமிகு பிரதமருக்கும் இந்திய அரசுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த முடிவு "வசுதைவ குடும்பகம்" (உலகம் ஒரு குடும்பம்) என்ற கருத்தில் பொதிந்துள்ள இந்தியாவின் நீடித்த மதிப்புகளான இரக்கம், நீதி மற்றும் மனிதநேயத்தை பிரதிபலிக்கிறது.
நாங்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் அமைதியாக வாழ்ந்து வருகிறோம், சமூக வளர்ச்சிக்கு பங்களிக்கிறோம் மற்றும் நாட்டின் சட்டத்தை மிகுந்த மரியாதையுடன் மதிக்கிறோம்.
நாங்கள் இந்தியாவின் சமூக மற்றும் கலாச்சார கட்டமைப்பின் ஒரு பகுதியாக இருக்கிறோம். எங்களுக்கு இங்கே வலுவான பிணைப்பும் அன்பும் இருக்கிறது.
அதேநேரத்தில், எங்களை சட்ட விரோத குடியேறிகளாக வகைப்படுத்தியுள்ள இந்திய அரசு, எங்களுக்கு சட்டபூர்வமான குடியுரிமை வழங்கி, இந்திய குடியுரிமை பெற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை இந்தியப் பிரதமர் தயவுசெய்து பரிசீலிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தனர்.
முன்னதாக, தமிழகத்தில் உள்ள திருச்சி, நாமக்கல், ராமநாதபுரம், மண்டபம் என பல்வேறு முகாம்களில் இருந்து இலங்கைத் தமிழர்கள் சுமார் 50,000 பேர் 50000 கடிதங்களை ஒரே நேரத்தில் பிரதமருக்கு நன்றி தெரிவித்து அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
1
Dislike
1
Love
0
Funny
1
Angry
0
Sad
1
Wow
1