மழை வெயிலில் பொதுமக்கள் அவதி: நூறாண்டு காணும் பொன்மலை வாரச்சந்தையை மேம்படுத்த மக்கள் சக்தி இயக்கம் கோரிக்கை
மழை வெயிலில் பொதுமக்கள் அவதி: நூறாண்டு காணும் பொன்மலை வாரச்சந்தையை மேம்படுத்த மக்கள் சக்தி இயக்கம் கோரிக்கை
ஆங்கிலேயர்கள் ஆட்சிகாலத்தில் திருச்சி பொன்மலை முக்கிய நகரமாக இருந்தது. பிரிட்டீஷாரால் உருவாக்கப்பட்ட இந்திய ரயில்வேயின் ஒரு பகுதியான தெற்கு ரயில்வேயின் தலைமை இடமும் திருச்சியை மையமாக கொண்டே செயல்பட்டு வந்தது. பொன்மலையில் தான் ரயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் வசித்து வந்தனர்.
மேலும் ரயில்வே பணிமனையிலும் ஆங்கிலேயர்கள் அதிக அளவில் பணியாற்றி வந்தனர். அவர்களின் தேவைக்காக கடந்த 1926-ம் ஆண்டு உருவாக் கப்பட்டது தான் பொன்மலை சந்தை.
அந்த கால கட்டத்தில் பிரிட்டீஷ் அரசு ரயில்வே ஊழியர்களுக்கு மாதம் இருமுறை சம்பளம் வழங்கியதால் ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறையும், ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை முதல் இரவு வரையிலும் சந்தை பரபரப்பாக செயல்பட்டது.
15- நாள் சம்பளமுறை ரத்து செய்யப்பட்டு, ஒவ்வொரு மாதமும் 3-ந் தேதி ரொக்கமாக சம்பளம் வழங்கப்பட்ட பின்னர் இது வார சந்தையாக அதாவது விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மட்டும் செயல்படும் வகையில் மாற்றம் செய்யப்பட்டது.
பொன்மலை ரயில்வே பணிமனை ஆர்மரிகேட்டிற்கு அருகே உள்ள ரயில்வே இடத்தில் இந்த வாரச்சந்தை நூற்றாண்டை நோக்கி தனது பயணத்தை தொடர்கிறது.
இந்த வார சந்தையில் பொன்மலை மற்றும் அதனை சார்ந்துள்ள பொன்மலைப்பட்டி, கல்கண்டார்கோட்டை, நத்தமாடிப்பட்டி, ஆலத்தூர், கிழக்குறிச்சி, காட்டூர், பாப்பா குறிச்சி, அரியமங்கலம், திருவெறும்பூர் உள்ளிட்ட கிராமங்கள் இருப்பதால் அப்பகுதி மக்கள் நீண்ட தொலைவில் உள்ள காந்திமார்க்கெட்டிற்கு செல்வதை தவிர்த்து, பொன்மலை வாரச்சந்தையை பயன்படுத்த தொடங்கினார்கள்.
கிளி முதல் எலி வரை; பறந்து விரிந்த மைதானத்தில் சில ஓட்டு கட்டிடங்கள், தென்னங்கீற்றால் வேயப்பட்ட கடைகள், திறந்தவெளி கடைகள் என இங்கு காலை முதல் இரவு வரை வியாபாரம் களை கட்டும்.
காய்கறிகள், மளிகை பொருட்கள், தானியங்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், பானை, சட்டி, பாத்திரங்கள் உள்பட தளவாட பொருட்கள், துணி வகைகள், நாய், பூனை, நாட்டுக்கோழிகள், கலர்மீன்கள், தொட்டிகள், பூச்செடிகள், கோழிக்குஞ்சுகள், ஆட்டுக் குட்டிகள், எலி, பலவண்ணகிளி, மைனா, வண்ணப்பறவைகள், விலங்குகளும், பறவைகளும் மற்றும் சைனா பொருட்கள் உள்பட அனைத்து விதமான பொருட்கள் மற்றும் உயிரினங்கள் இங்கு விற்பனை செய்யப்படுவது தான் பொன்மலை வாரச்சந்தையின் சிறப்பாக இருந்து வருகிறது. சுற்று வட்டார கிராமங்களில் விளைவித்த காய்கறிகள் மற்றும் உணவு பொருட்களை இங்கு உள்ள விவசாயிகள் தாங்கள் நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்வதால், இது ஒரு அறிவிக்கப்படாத உழவர் சந்தையாகவும் செயல்பட்டு வருகிறது. காய்கறிகள், பறவைகள், விலங்குகள் உள்பட அனைத்தும் ஒரே இடத்தில் அதுவும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் கிடைப்பதால், திருச்சிநகரின் பல பகுதிகளிலும் உள்ள மக்கள் மற்றும் நகரை தாண்டி புறநகர் பகுதிகளில் உள்ளவர்களும் வந்து செல்லும் ஒரு பெரிய வர்த்தக மையமாக இந்த வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது.
தற்போது தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியால் வியாபார உத்திகளில் எத்தனையோ மாற்றங்கள் வந்துவிட்ட போதிலும் பொன்மலை வாரச்சந்தையின் மவுசு இன்னும் குறையாமல் தான் உள்ளது.
எனவே, பொன்மலை வாரச்சந்தையில் தற்பொழுது உள்ள குறைகளாக பார்க்கப்படுவது யாதெனில், இங்கு 1000-க்கும் மேற்பட்ட கடைகள் சந்தை உள்ளேயும் பல நூறு கடைகள் சாலைகளை ஆக்கிரமித்து செயல்பட்டு வருகிறது. இதனால் போக்குவரத்து பாதிப்புகள் அதிகமாகிறது.
ரயில்வே மருத்துவமனை அருகில் உள்ளதால் வாகனங்கள் வர மிகவும் அவதிபடுகிறார்கள். இங்கு உள்ள கடைகள் அனைத்திற்கும் குத்தகைகாரர்கள் வரி வசூல் செய்கிறார்கள், ஆனால் கடைகளுக்கும், கடைகாரர்களுக்கு எந்த ஒரு வசதியும் செய்து தருவது இல்லை. காய்கறிகள், இதர பொருட்கள் உள்ளிட்டவைகளை கொண்டு வரும் வாகனங்களுக்கு வரியும் வசூலிக்கப்படுகிறது.
அதேநேரம் ஆயிரக்கணக்கானோர் கூடும் பொது இடத்தில் கழிவறைகள் இல்லை, கடைகளுக்கு கட்டிடம் மற்றும் மேற்கூரைகள் இல்லை, தரைக் கடைகளுக்கு சரியான கான்கிரீட் தளம் இல்லை, வண்டிகள் நிறுத்த சரியான இடவசதி செய்து தரவில்லை. தாகத்திற்கு தண்ணீர் வசதி கூட இங்கு இல்லை. மாடுகள், நாய்கள் போன்றவைகளால் தொல்லைகள் அதிகம். மழை பெய்யும் நேரத்தில் வியாபாரிகளுக்கும், பொது மக்களும் நடக்க முடியாத அளவிற்கு சேறும், சகதிகள் நிறைந்த பகுதிகளாக இந்த சந்தை செயல்படுவதால் சுகாதார சீர்கேடும் அந்தப் பகுதியில் நிலவுகிறது.
இந்த நிலையில் வரும் ஆண்டிலிருந்து பொன்மலை பணிமனை மற்றும் அதன் அருகில் உள்ள இந்த வாரச்சந்தையும் நூற்றாண்டு விழா கொண்டாடும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், பொன்மலை வாரச்சந்தையை வேறு இடத்திற்கு மாற்றியோ அல்லது அதே இடத்தில் அத்தியாவசிய தேவைகள் உள்ளடக்கிய ஒரு வாரச்சந்தையாக செயல்பட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தியோ தருமாறு மக்கள் சக்தி இயக்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் ரயில்வே நிர்வாகத்தையும், மாவட்ட நிர்வாகத்தையும் கேட்டுக்கொள்வதாக சமூக ஆர்வலர் நீலமேகம் தெரிவித்துள்ளார் .
முன்னதாக, பொன்மலை மஞ்சத்திடல் ரயில் நிலையங்களுக்கு இடையே மெமு ரெயில் பராமரிப்பு பணிமனை ரூ.50 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு இது பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதன் விரிவாக்க பணிகளுக்காக தற்போது வாரச்சந்தையாக செயல்பட்டு வரும் இடமும் பயன்படுத்தப்படும் பட்சத்தில், வாரச்சந்தையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டலாம். எனவே, பொன்மலைப்பட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள வ.உ.சி திடல் பகுதியில் இந்த வாரச்சந்தையை அனைத்து அத்தியாவசிய அடிப்படை வசதியுடன் கூடிய, புதுப்பிக்கப்பட்ட பிரம்மாண்ட வார சந்தையை உருவாக்கித் தருமாறு ரயில்வே நிர்வாகத்தை கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0