பெல் நிறுவன ஒப்பந்த தொழிலாளர்களை 4 மாதத்திற்குள் நிரந்தரமாக்க நீதிமன்றம் உத்தரவு : தொடர் சட்டப் போராட்டம் நடத்திய ஒப்பந்த தொழிலாளர் சங்கங்களுக்கு ஊழியர்கள் பாராட்டு
பெல் நிறுவன ஒப்பந்த தொழிலாளர்களை நான்கு மாதத்திற்குள் நிரந்தரமாக நீதிமன்றம் உத்தரவு : தொடர் சட்டப் போராட்டம் நடத்திய ஒப்பந்த தொழிலாளர் சங்கங்களுக்கு ஊழியர்கள் பாராட்டு
திருச்சியில் பெல் நிறுவனத்தில் கடந்த 40 ஆண்டு காலமாக ஒப்பந்த தொழிலாளர் சங்கங்கள் நடத்திய பல்வேறு கட்ட போராட்டத்திற்கு விடிவுகாலம் பிறந்திருக்கின்றது. ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (பெல்) நிறுவனம் தனது செலவினங்களை குறைப்பதற்காகவே ஒரு சங்கத்தை உருவாக்கி, சொந்த ஊழியர்களையே அவுட்சோர்சிங் செய்தது தெளிவாகிறது. அத்தகைய நடைமுறை நியாயமானது அல்ல என நீதிபதி தெரிவித்ததோடு, பெல் நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை 4 மாதத்தில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்த விபரம் வருமாறு ;
திருச்சி, திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் உள்ள பெல் வளாக ஒப்பந்த தொழிலாளர் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த எம்.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "பெல் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் 1121 பணியாளர்கள் பணிபுரிந்து வந்த நிலையில் செலவினங்களை குறைப்பதற்காக, பெல் காம்ப்ளக்ஸ் கூட்டுறவு தொழிலாளர் ஒப்பந்த சங்கத்தை பெல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.
இந்த பெல் காம்ப்ளக்ஸ் சங்கம் நியாயமான அமைப்பு அல்ல என்றும், தொழிலாளர் சேர்ப்பு, வேலைவாய்ப்பு பறிப்பு, நிதி சலுகைகள் பறிப்பு ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்ட போலியான பெயரளவிற்கான ஓர் அமைப்பு என்றும், அதன் கட்டுப்பாடு முழுவதும் பெல் நிறுவனத்திடமே உள்ளது.
எனவே, தங்கள் தற்காலிக பணியை வரன்முறைபடுத்தி, நிரந்தர ஊழியர்களாக நியமனம் செய்ய கோரிய மனுவை மத்திய தொழிற்துறை தீர்ப்பாய தொழிலாளர் நீதிமன்றம் நிராகரித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவானது, நீதிபதி ஹேமந்த் சந்திரகௌடர் முன்பாக விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் யூனியன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.விடுதலை, வழக்கறிஞர் டி.வீரசேகரன் ஆகியோர் ஆஜராகி, தங்கள் உறுப்பினர்களுக்கு பணி வழங்கியது, ஊதியம் வழங்குவது, சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கியது, நிரந்தர ஊழியர்களுக்கு இணையாக, ஓய்வுபெறும் வயதை 58லிருந்து 60ஆக உயர்த்தியது என அனைத்தையும் பெல் நிறுவனம் மேற்கொண்டதாகவும், இதுதொடர்பான ஆவணங்களை தொழிலாளர் நீதிமன்றம் பரிசீலிக்க தவறிவிட்டதாக வாதங்களை முன்வைத்தனர்.
பெல் காம்ப்ளக்ஸ் கூட்டுறவு தொழிலாளர் ஒப்பந்த சங்கம் மற்றும் பெல் நிறுவனம் இடையேயான எவ்வித ஒப்பந்தமும் நிரூபிக்கப்படவில்லை எனவும் வாதிடப்பட்டது. எதிர்மனுதாரர்கள் தரப்பில் பெல் காம்ப்ளக்ஸ் சங்கத்தை பெல் நிறுவனம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவில்லை என்றும், அவுட்சோர்சிங் அடிப்படையில் பணி மேற்கொள்ளப்பட்டதாகவும், தேர்தல் நடத்த தவறிய நிலையிலேயே பெல் நிறுவனத்தின் அதிகாரியை சங்கத்தை நிர்வகிப்பதற்காக தனி அலுவலராக தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு பிறப்பித்த உத்தரவில் நீதிபதி ஹேமந்த் சந்திரகௌடர், பெல் மற்றும் பிற அரசு அல்லது பொது அமைப்புகளிடமிருந்தும் பெறப்பட்ட ஒப்பந்தங்கள் மூலம் அதன் உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெறுவதை முதன்மை நோக்கமாக கொண்ட பெல் காம்ப்ளக்ஸ் சங்கத்தின் மீது அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் வைத்திருந்தது ஆவணங்களிலிருந்து தெளிவாக தெரிவதாக கூறியுள்ளார். ஆதாரங்களையும் பதிவுகளையும் தவறாக புரிந்துகொண்டு, தன்னிச்சையாகவும், விபரீதமாகவும் தொழிலாளர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்வதாக உத்தரவிட்டதுடன், மனுதாரர் சங்கத்தின் உறுப்பினர்கள் பெல் நிறுவனத்தின் ஊழியர்களாகத்தான் கருதப்பட வேண்டும் எனவும், ஓராண்டில் 240 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த அனைவரையும் நிரந்தர ஊழியர்களுக்கு இணையான அனைத்து சலுகைகளுடன் அவர்களின் பணியை வரன்முறைப்படுத்த வேண்டும் என்றும், இந்த பணிகளை 4 மாதங்களில் முடிக்க வேண்டுமென தீர்ப்பளித்துள்ளார்.
மேலும், பெல் நிறுவனம் தனது செலவினங்களை குறைப்பதற்காகவே ஒரு சங்கத்தை உருவாக்கி, சொந்த ஊழியர்களையே அவுட்சோர்சிங் செய்தது என்பது தெளிவாகிறது. அத்தகைய நடைமுறை நியாயமானது அல்ல என்றும், சட்டப்பூர்வ கடமைகளை தவிர்ப்பதற்கான தந்திரம் என்றும், நியாயமற்ற தொழிலாளர் நடைமுறைக்கு சமமானது என்றும் நீதிபதி தனது உத்தரவில் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்கு இயங்கி வரும் பெல் நிறுவனத்திற்கு சம்மட்டி அடித்தது போல் வழங்கப்பட்டிருக்கும் இந்த தீர்ப்பு, நாடு முழுவதும் பொதுத்துறை நிறுவனங்களில் நிரந்தர ஆள் சேர்ப்பை தவிர்த்து ஒப்பந்த தொழிலாளர்களை நீண்ட காலத்திற்கு பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு வலுவான சட்ட பதிலடியாக பார்க்கப்படுகிறது. பெல் நிறுவனம் செய்த நிழல் ஒப்பந்தம் போல் நாடு முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் செய்த ஒப்பந்தங்களுக்கு இந்த வழக்கின் தீர்ப்பு முன் உதாரணமாக அமைய பெற்றுள்ளது என தொழிலாளர் சங்கத்தினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சோர்ந்து போகாமல் திராவிடர் கழகம் சார்ந்த பெல் ஒப்பந்த தொழிலாளர் நல சங்கத்தினர் தொடர்ந்து நடத்திய போராட்டங்களுக்கு மிகப்பெரும் வெற்றி என அந்த சங்கத்தின் நிர்வாகிகள் சேகர், காமராஜ் ஆகியோர் தெரிவித்ததோடு, திராவிடர் கழகத் தலைவர் வீரமணியையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து அவரிடம் வாழ்த்து பெற்றனர்.
திராவிடர் தொழிலாளர் கழகம் தொடுத்த சட்டப் போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து, திருவெறும்பூரில் இந்தத் தீர்ப்பை விளக்கி விரைவில் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெறும் என்று திராவிடர் தொழிலாளர் கழக மாநிலச் செயலாளர் மு.சேகர் தெரிவித்ததோடு சட்டப் போராட்டத்திற்கு துணை நின்ற திருச்சி அமைச்சர்கள் மற்றும் சமூகநல ஆர்வலர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி என தெரிவித்தார்.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0