திருவாரூர் ரயில் மறியல் போராட்டம் ஒத்திவைப்பு- பிஆர் பாண்டியன்

Dec 6, 2025 - 13:22
 0  28
திருவாரூர் ரயில் மறியல் போராட்டம் ஒத்திவைப்பு- பிஆர் பாண்டியன்

திருவாரூர் ரயில் மறியல் போராட்டம் ஒத்திவைப்பு- பிஆர் பாண்டியன்

   

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இனி மேகதாட்டு குறித்து விவாதிப்பதற்கு வாய்ப்பு இல்லை என காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே. ஹால்தார் தெரிவித்ததை அடுத்து, நாளை நடைபெறவிருந்த திருவாரூர் ரயில் மறியல் போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது :

காவிரியின் குறுக்கே மேகதாட்டு அணை கட்டுவது குறித்து கர்நாடக அரசின் சட்டவிரோத வரைவு திட்ட அறிக்கையை வரும் டிசம்பர் 8ம் தேதி நடைபெற உள்ள காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்க கூடாது. ராசி மணல் அணைக்கட்ட ஆணையம் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தோம். 

இதற்கிடையே நேற்று 05.12.2025ல் கல்லணைக்கு வருகை தந்த காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே. ஹால்தாரை நேரில் சந்தித்து இது குறித்து கோரிக்கை மனு அளித்து விரிவாக எடுத்துரைத்தோம். அதனைப் பெற்றுக் கொண்ட ஆணைய தலைவர் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இனி மேகதாட்டு குறித்து விவாதிப்பதற்கு வாய்ப்பு இல்லை எனவும், முடிந்து போன ஒன்று என தெளிவு படுத்தினார். 

கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பி விட்டோம். அடர்ந்த வனப் பகுதி மட்டுமன்றி விலங்குகள் சரணாலயம் உள்ள பகுதி என்பதால் மத்திய அரசின் வனத்துறையும், சுற்றுச்சூழல் துறையும் அனுமதி வழங்க முடியாத நிலை உள்ளது. அந்த அணை கட்டப்படுவதற்கான வருவாய் குறித்தான எந்த விபரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை. எனவே, இது குறித்து வரும் 8ம் தேதி கூட்டத்தில் விவாதிப்பதற்கு வாய்ப்பு இல்லை. அது முடிந்து போன ஒன்று என்றார். 

மேலும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் குறித்த ஆணையத்திற்கு எந்த தகவலும் இதுவரையிலும் வரவில்லை எனவும் தெளிவுபடுத்தினார். மத்திய அரசின் நீர்வள ஆணையத்திற்கு மட்டுமே உச்ச நீதிமன்றம் வழிகாட்டி உள்ளது. எனவும், அது குறித்து ஆணையத்திற்கு சம்பந்தமில்லை எனவும் தெரிவித்தார். 

இனி மேகதாட்டு குறித்து ஆணையம் விவாதிப்பதற்கு வாய்ப்பு இல்லை என தெளிவாக உத்தரவாதப்படுத்தினார். இதனை அடுத்து அவரது கருத்துக்கு மதிப்பளித்து நாளை 07.12.2025ல் நடைபெற இருந்த திருவாரூர் ரயில் மறியல் போராட்டத்தை ஒத்திவைப்பது என மாநில மாவட்ட நிர்வாகிகள் கருத்தை ஏற்று ஒத்திவைக்கப்படுகிறது. அடுத்து அறிவிக்கப்படுகிற போராட்டங்களில் தொடர்ந்து ஆதரவு அளிக்க விவசாயிகள் முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

மேற்கண்டவாறு தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

க. சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0