அம்பிகாபுரத்தில் அன்பில் அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ முகாம்; பொதுமக்களுக்கு முதலுதவி பெட்டகம் வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்
அம்பிகாபுரத்தில் அன்பில் அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ முகாம்; அமைச்சர் அன்பில் மகேஷ் துவக்கி வைப்பு
திருச்சி திருவெறும்பூர் அடுத்துள்ள அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் பகுதியில் இன்று அன்பில் அறக்கட்டளை மற்றும் அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி துவக்கி வைத்தார். இதுகுறித்த விபரம் வருமாறு;
அன்பில் அறக்கட்டளை என்பது அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியால் தனது தந்தையின் நினைவாக உருவாக்கப்பட்ட ஒரு சமூக சேவை அமைப்பு ஆகும். இது மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, வேலைவாய்ப்பு முகாம்கள், இலவச மருத்துவ முகாம்கள், அன்னதானம் போன்ற பல்வேறு சமூக நலத் திட்டங்களைச் செயல்படுத்துகிறது. சமூகத்தின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுவதே இந்த அறக்கட்டளையின் முக்கிய நோக்கமாகும்.
அந்தவகையில், திருச்சி மாநகராட்சி 36-வது வார்டுக்குட்பட்ட அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் பிரதான சாலையில் அமைந்துள்ள செல்வ மஹாலில் இன்று அன்பில் அறக்கட்டளை மற்றும் அப்போலோ மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாமினை நடத்தியது. இந்த முகாமினை திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநகர திமுக செயலாளர் மு.மதிவாணன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
இந்த முகாமில் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 36-வது வார்டு, 44-வது வார்டுகளுக்குட்பட்ட மேல அம்பிகாபுரம், கீழ அம்பிகாபுரம், ரயில் நகர், திடீர் நகர், அண்ணாநகர், நேருஜி நகர், காமராஜர் நகர், காட்டூர், மாஜி ராணுவ காலனி, தங்கேஸ்வரி நகர், ஆயில்மில் பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர்.
மருத்துவர்கள் சுரேஷ், தமிழரசன் கலந்துக்கொண்டு பொதுமக்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்தம் சரிபார்த்தல், இசிஜி எடுத்தல், நுரையீரல் பரிசோதனை, கண் பார்வை குறைபாடு கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகளை வழங்கினர். பொதுமக்களின் நோய் தன்மைகளுக்கேற்ப பொது மருத்துவரின் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. பின்னர், மருத்துவ முகாமில் பங்கேற்ற பொதுமக்கள் அனைவருக்கும் அன்பில் அறக்கட்டளையின் சார்பாக முதலுதவி பெட்டகம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாநகர திமுக செயலாளர் மு.மதிவாணன், பகுதி கழகச் செயலாளர் நீலமேகம் மாமன்ற உறுப்பினர் கே.கே.கே.கார்த்திக், வட்டக்கழகச் செயலாளர்கள் சுரேஷ், ஆனந்த், விஸ்வநாதன், தவசீலன், தமிழ்மணி, மன்சூர், முருகானந்தம், கார்த்திக் மற்றும் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
1
Sad
0
Wow
0