டெல்டாவில் கனமழை; 5 லட்சம் ஏக்கருக்கு மேல் பாதிப்பு; ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வேண்டும் -பிஆர்.பாண்டியன்
டெல்டாவில் கனமழை; 5 லட்சம் ஏக்கருக்கு மேல் பாதிப்பு; ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வேண்டும் -பிஆர்.பாண்டியன்
தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி ஆர் பாண்டியன் திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் திருக்களர் கருப்பு கலர் அக்கரைக்கோட்டகம் புழுதுக்குடி கோட்டூர் இருணிக்கு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது திருக்களாரில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: காவிரி டெல்டாவில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் சுமார் 10 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. ஓரிரு வாரங்கள் பெய்ய வேண்டிய மழை ஓரிரு மணி நேரங்களில் கொட்டி தீர்க்கிறது.
இதனால் சுமார் 5 லட்சம் ஏக்கருக்குமேல் சம்பா தாளடி பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது. தொடர்ந்து மழை தீவிரமடைந்து பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் பேராபத்து ஏற்பட்டுள்ளது.
பாசன வடிகால் ஆறுகளில் ஆகாயத்தாமரை, வெங்காயத்தாமரை புதர் போல் மண்டிக்கிடக்கிறது. இதனால் பெய்யும் மழைநீர் வடியாமல் வயல்வெளிகள் கடல் போல் காட்சியளிக்கிறது. பொன்னுக்குமுன்டானாறு, சாளுவனாறு, வளவனாறு உள்ளிட்ட ஆறுகள் வெங்காய தாமரைகள் அடர்ந்து வளர்ந்து வெள்ள நீர் வடியாமல் முடங்கி உள்ளது.பயிர்கள் அழுகத் தொடங்கியுள்ளது.
எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக அமைச்சர்கள்,உயர் அதிகாரிகள் கொண்ட குழுவை அனுப்பி வைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வேண்டும்.பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். வெங்காய தாமரை செடிகளை அகற்றுவதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்றார்.
இந்த சந்திப்பின் போது, திருவாரூர் மாவட்ட செயலாளர் குடவாசல் சரவணன், கோட்டூர் தெற்கு ஒன்றிய தலைவர் ராஜகோபால், செயலாளர் எம் தெய்வமணி, கோட்டூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கே ராவணன், குடவாசல் கண்ணன், திருக்களார் பாரி உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் உடன் இருந்தனர்,
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0