கோவையில் ரூ.208 கோடியில் பிரம்மாண்ட செம்மொழி பூங்கா; கலைஞர் அறிவித்ததை மு.க.ஸ்டாலின் செயல்படுத்தினார்

Nov 25, 2025 - 13:51
Nov 25, 2025 - 14:05
 0  15
கோவையில் ரூ.208 கோடியில் பிரம்மாண்ட செம்மொழி பூங்கா;  கலைஞர் அறிவித்ததை மு.க.ஸ்டாலின் செயல்படுத்தினார்

கோவையில் ரூ.208 கோடியில் பிரம்மாண்ட செம்மொழி பூங்கா; கலைஞர் அறிவித்ததை மு.க.ஸ்டாலின் செயல்படுத்தினார் 

 

கோவையில் ரூபாய் 208.50 கோடியில் பிரம்மாண்டமாக உருவான செம்மொழி பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.

கோவையில் கடந்த 2010 ஆம் ஆண்டு நடந்த உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் அப்போது முதலமைச்சராக இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, கோவை காந்திபுரம் மத்திய சிறை வளாகத்தில் 165 ஏக்கரில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என்றும் அறிவித்தார். 2011 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை, 2021 ஆம் ஆண்டு தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் செம்மொழி பூங்கா திட்டத்திற்கு புத்துயிர் கொடுக்கப்பட்டது.

முதல் கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 208.50 கோடியில் செம்மொழிப் பூங்கா அமைக்கும் பணியை மாநகராட்சி மேற்கொண்டது. இந்த பணிகளை கடந்த 2023 ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டில் தொடங்கி வைத்தார். தற்பொழுது அந்த பணிகள் நிறைவு அடைந்துள்ளன. இதைத் தொடர்ந்து கோவை மக்களின் பொழுதுபோக்கு தளமாக விளங்க உள்ள செம்மொழிப் பூங்காவை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.

முன்னதாக, கோவை விமான நிலையத்துக்கு வருகை புரிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, டி.ஆர்.பி ராஜா, சாமிநாதன், கோவை எம்.பி கணபதி ராஜ்குமார், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன் குமார் உள்ளிட்டோர் முதல்வரை வரவேற்றனர்.

 செம்மொழிப் பூங்கா சிறப்புகள் செம்மொழி வனம், மூலிகை வனம், மகரந்த தோட்டம், பாலைவனத்தோட்டம், மூங்கில் தோட்டம், ரோஜா தோட்டம் என, 23 விதமான தோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழை நீர் வடிகால் அமைப்பு 2 கி.மீ., நீளத்துக்கு அமைக்கப்பட்டிருக்கிறது.

சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள செண்பக மரம், கல் இலவு, மிளகு மரம், கடல் திராட்சை,திருவோட்டு மரம், கலிபுடா, வரிகமுகு, மலைபூவரசு எலிச்சுழி, குங்குமம் மரம் ஆகியவை உள்ளன.மரங்கள் மற்றும் செடிகளுடன், 2000-க்கும் மேற்பட்ட ரோஜா வகைகள் ரோஜா தோட்டத்தில் நடப்பட்டுள்ளன. கடையேழு வள்ளல்களின் கற்சிலைகளும் நிறுவப்பட்டுள்ளன.

மரங்கள் மற்றும் தாவரங்களை பற்றி அறியும் வகையில், 'க்யூஆர்' கோடு மற்றும் 'பார்' கோடு வசதியுடன் கூடிய பெயர் பலகை வைக்கப்படும். 'க்யூஆர்' கோடு ஸ்கேன் செய்தால், அதன் சிறப்பை ஒலி வடிவில் கேட்கலாம்.

நுழைவுச்சீட்டு வழங்குமிடம் மற்றும் அனுபவ மைய கட்டடம். 500 பேர் அமரக்கூடிய திறந்தவெளி அரங்கம், பணியாளர் அறை. உணவகம். ஒப்பனை அறை. சில்லறை விற்பனை நிலையம், செயற்கை நீர்வீழ்ச்சி ஆகியவையும் அமைந்துள்ளன.

பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய பொருள்களுடன் கூடிய அருங்காட்சியகம் மற்றும் தாவரவியல் அருங்காட்சியகம், படிப்பகம், சக்கர நாற்காலிகள், பேட்டரி வாகனங்கள் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

உலகத் தர உடற்பயிற்சி கருவிகளுடன் கூடிய திறந்தவெளி உடற்பயிற்சி கூடம். 4,000 சதுர அடி பரப்பளவில் டெராரியம் என்ற உள்வன மாதிரி காட்சியமைப்பு , குழந்தைகளுக்கு 14,000 சதுர அடி விளையாட்டு திடல். உள்விளையாட்டு அறை. மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு திடல் போன்ற பொழுதுபோக்கு வசதிகளும் அமையப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

க.சண்முகவடிவேல் 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0