உழவர் நலத்துறை நாகை மாவட்டத்தில் ஊழல் துறையாக மாறிவிட்டது-பி ஆர் பாண்டியன்
உழவர் நலத்துறை நாகை மாவட்டத்தில் ஊழல் துறையாக மாறிவிட்டது; உர உற்பத்தி நிறுவனங்களோடு கூட்டு சேர்ந்து இணை இடுபொருள் என்கிற பெயரால் விவசாயிகளை வஞ்சிக்கிறது தமிழக அரசு - பி.ஆர்.பாண்டியன்
தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருமருகல் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் முன் மாவட்ட துணைச் செயலாளர் ஆர் சேகர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பொதுச்செயலாளர் பி ஆர் பாண்டியன் கண்டன உரையாற்றிய பின்செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
நாகை மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் பெய்த பேரழிவு பெருமழையால் சுமார் 10,000 ஏக்கர் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவைப்பயிர்கள் அழிந்து உள்ளது. சம்பா பயிர்களும் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு குறித்து வேளாண்மை துறை இணை இயக்குனர் நேரில் பார்வையிட்டு தீர்வு காண முன் வரவில்லை.மாறாக விவசாயிகளை சந்தித்து பேசாமல் பாதிக்கப்பட்ட வயல்களில் விவசாயிகளை நிறுத்தி படம் எடுக்காமல் தன் விருப்பத்திற்கு பட்டியலை தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஒட்டுமொத்தமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ஒதுக்கப்படுகிற நலத்திட்டங்கள் முழுமையும் ஊழல் முறைகேடு செய்கிறார்கள். பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரிந்து வரும் வேளாண் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யாததால் ஒட்டுமொத்த நலத்திட்ட உதவிகளும் ஊழல் முறைகேடுகளுக்கு வழிவகுக்கிறது.
மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு விரோதமாக செயல்படுகிறார். விவசாயி குறைதீர் நாள் கூட்டங்களை கூட சடங்குத்தனமாக நடத்துகிறார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் விவசாயிகளுக்கு காப்பீட்டு திட்டத்தில் ஆண்டுக்கு ரூ 5000 ம் கோடி விவசாயிகள் பேரில் காப்பீட்டு நிறுவனங்கள் முறைகேடு செய்கின்றனர். இதற்கு உழவர் நலத்துறை துணை போகிறது. பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்று தர மறுக்கிறது. கூட்டுக் கொள்ளை நடைபெறுகிறதே? என அஞ்சத் தோன்றுகிறது .
எனவே தமிழக முதலமைச்சர் 2016 முதல் 21 வரை அதிமுக ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையையும், தற்போது திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 2021 முதல் 2025 வரை வழங்கப்பட்டுள்ள இழப்பீடு தொகை குறித்தான முழு விவரங்களை வெளியிட்டு விவாதிக்க முன்வர வேண்டும்.
உரம் மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சம்பா தாளடி பயிர்களுக்கு உரமிட முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். உழவர் நலத்துறை தட்டிக் கேட்க மறுக்கிறது. குறிப்பாக உர உற்பத்தி நிறுவனங்கள் இணை இடுபொருள் பெற்றுக் கொள்ளும் விநியோகஸ்தர்களுக்கும்,சில்லறை விற்பனையாளர்களுக்கு மட்டுமே டி ஏ பி , யூரியா,பொட்டாஷ் போன்ற உரங்களை அனுப்பி வைக்கிறார்கள். விற்பனைக்கு மறுக்கும் விநியோகஸ்தர்களுக்கு உரம் விநியோகிக்க மறுக்கிறது. இதனை முழுமையும் உணர்ந்திருக்கிற உழவர் நல்த்துறை அமைச்சர் உற்பத்தி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக சில்லறை விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது முரணாக உள்ளது. உற்பத்தி நிறுவனங்களோடு கூட்டு சேர்ந்து மூடி மறைக்க முயற்சிப்பது மட்டுமன்றி முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று மத்திய உரத்துறை அமைச்சர் மூலம் நடவடிக்கை எடுக்க உழவர் நலத்துறை மறுப்பது சந்தேகம் அளிக்கிறது. சிறு வணிகர்களை காட்டி தப்பித்துக் கொள்ள முயற்சிக்கிறது.
இதனால் விவசாயிகள் ரூபாய் 270 கொடுத்து ஒரு மூட்டை யூரியா வாங்க வேண்டும். ஆனால் இணை இடுபொருள் உற்பத்தி நிறுவனங்கள் தன் விருப்பத்திற்கு நிர்ணயிக்கும் விலையில் ரூ.400 முதல் 700 வரை கூடுதல் விலை கொடுத்து இணை இடுபொருட்களை பெற்றுக்கொண்டு யூரியா வாங்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இதனால் ஒரு முட்டை யூரியாவிற்கு ரூபாய் 700 வரையிலும் கூடுதல் செலவு செய்ய வேண்டிய நெருக்கடிக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
குறுவை, சம்பா பயிர்கள் பாதிப்பு குறித்து வெளிப்படையான கணக்கெடுப்பு நடத்தி கிராமங்கள் தோறும் பயனாளி பட்டியலை வெளியிட வேண்டும். ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
காப்பீடு செய்த விவசாயிகளுக்கு 100 சதவீதம் இழப்பீடு பெற்று தர வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டி வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறோம். உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க மறுத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தீவிரப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
போராட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட செயலாளர் கருணநாதன், மாவட்ட பொருளாளர் சபாநாதன், மாவட்ட துணைச் செயலாளர் வெங்கடேசன், ஒன்றிய தலைவர் அறிவொளி, செயலாளர் பரமசிவம், பொருளாளர் குமார், மயிலாடுதுறை மாவட்ட தலைவர் முருகன், துணைச் செயலாளர் பன்னீர்செல்வம் , குடவாசல் கண்ணன் உள்ளிட்ட 25 பெண் விவசாயிகள் உட்பட 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
முன்னதாக, பேருந்து நிலையம் முதல் வேளாண்மை அலுவலகம் வரை இரண்டு கிலோமீட்டர் தூரம் விவசாயிகள் பேரணி நடைபெற்றது.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0