தமிழகத்தில் 25 அன்புச் சோலை மையங்கள்; திருச்சியில் முதல்வர் திறந்து வைத்து கேரம் விளையாடி மகிழ்வு

Nov 10, 2025 - 17:07
 0  62
தமிழகத்தில் 25 அன்புச் சோலை மையங்கள்; திருச்சியில் முதல்வர் திறந்து வைத்து கேரம் விளையாடி மகிழ்வு

தமிழகத்தில் 25 அன்புச் சோலை மையங்கள்; திருச்சியில் முதல்வர் திறந்து வைத்து கேரம் விளையாடி மகிழ்வு

மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவற்காகவும், வீடுகளில் உள்ள முதியவா்கள் மனம் சோா்வடையாமல் ஊக்கம் பெற உதவும் வகையிலும் தமிழக அரசால் ‘அன்புச் சோலை திட்டம்’ உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திருச்சி பொன்மலைப்பட்டியில் இன்று தொடங்கி வைத்தார்.

பின்னர் முதியவர்களுடன் கேரம் போர்டு விளையாடியும், கலந்துரையாடியும் அவர்களை மகிழ்வித்து தாமும் மகிழ்ந்தார்.

இந்தத் திட்டத்தின்கீழ் அமைக்கப்படும் அன்புச்சோலை - முதியோா் மனமகிழ் மையங்கள், மூத்த குடிமக்களின் ஆரோக்கியமான வளா்ச்சியில் கவனம் செலுத்தும் வகையில் சமூக மையங்களாகச் செயல்படும்.

மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருப்பூா், ஈரோடு, தூத்துக்குடி, வேலூா், தஞ்சாவூா், திண்டுக்கல் ஆகிய 10 மாநகராட்சிகளில் தலா இரு அன்புச் சோலை மையங்கள், தொழில் மாவட்டங்களான ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரியில் தலா ஒரு மையம், சென்னை மாநகராட்சியில் தண்டையாா்பேட்டை, சோழிங்கநல்லூா், விருகம்பாக்கம் ஆகிய இடங்களில் தலா ஒரு மையம் என மொத்தம் 25 அன்புச் சோலை மையங்கள் ரூ.10 கோடியில் தொடங்கப்பட்டுள்ளன. திருச்சியைத் தவிர மற்ற மையங்கள் காணொளி காட்சிகள் மூலமாக தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த அன்புச்சோலை மையங்களில் பொழுதுபோக்கு அம்சங்கள், யோகா, நூலகம் மற்றும் தேவையான திறன் மேம்பாடு சேவைகள் வழங்கப்படும் எனவும், ஒவ்வொரு மையமும் குறைந்தபட்சம் 50 மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் போதிய இடவசதி, போதுமான உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருக்கும் எனவும், பகல் நேரங்களில் மட்டும் செயல்படும் இந்த மையங்களில், முதியவா்கள் தோழமை மற்றும் அா்த்தமுள்ள செயல்பாடுகளில் ஈடுபடலாம் எனவும் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். 

முதியோா் எளிதில் சென்றும் வகையில் போக்குவரத்து வசதியுள்ள இடங்களில் அன்புச் சோலை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அன்புச் சோலை மையங்களுக்கு வரும் முதியவா்களுக்கு, தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களின் ஆதரவுடன் மதிய உணவு மற்றும் சிற்றுண்டி வழங்கப்படுகிறது. தகுதி வாய்ந்த பராமரிப்பாளா்கள் மற்றும் இயன்முறை சிகிச்சையாளா்கள் பணியமா்த்தப்பட்டு முதியோரின் விரிவான பராமரிப்பு உறுதி செய்யப்படும்.

அன்புச் சோலை மூலமாக, முதியோா் குடும்பப் பிணைப்பைத் தொடா்ந்தே, பாதுகாப்பான சூழலில், அா்த்தமுள்ளதாக பகல் நேரங்களைக் கழிக்க முடியும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக திருச்சியில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில், 25 அன்புச் சோலை மையங்களை காணொலி வாயிலாக முதல்வர் தொடங்கி வைத்து, மூத்த குடிமக்களுக்கு மகளிர் சுய உதவிக் குழுவினரால் தயாரிக்கப்பட்ட சிறு தானிய உணவு வகைகள் மற்றும் சத்துமாவு கொண்ட பெட்டகங்களை வழங்கி, அவர்களுடன் கலந்துரையாடி, கேரம் விளையாடினார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, கீதா ஜீவன், எஸ்.எஸ்.சிவசங்கர், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, துரை வைகோ, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, தமிழ்நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட மக்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. வேலை வாய்ப்பு முடிந்த பின்னர், பலர் குடும்பங்களில் புறக்கணிப்பு, தனிமை, மனச்சோர்வு போன்றவற்றை எதிர்கொள்கின்றனர்.அத்தகைய சூழலில், "அன்புச் சோலை" மையங்கள் மனநல நம்பிக்கையையும், சமூக ஒற்றுமையையும் மீட்டெடுக்கும் முக்கியமான தளமாக அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0