நகராட்சி நிர்வாகத்துறையில் மெகா ஊழல்?அமைச்சர் நேருவை வளைக்கும் அமலாக்கத்துறை; சிபிஐ விசாரணை கோரும் எதிர்கட்சிகள்
நகராட்சி நிர்வாகத்துறையில் மெகா ஊழல்?அமைச்சர் நேருவை வளைக்கும் அமலாக்கத்துறை; சிபிஐ விசாரணை கோரும் எதிர்கட்சிகள்
தமிழகத்தில் புதிதாக 'வேலைக்கு பணம்' மோசடி நடந்திருப்பதாக கூறி, அதுகுறித்து உடனடியாக விசாரிக்குமாறு மாநில காவல்துறைக்கு, அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது. இந்த ஊழல் தொடர்பாக திரட்டப்பட்ட ஆதாரங்களையும் அமலாக்கத்துறை காவல்துறையிடம் சமர்ப்பித்துள்ளது.
இந்த மோசடி, மாநில நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (MAWS) துறையில் உதவிப் பொறியாளர்கள், நகரத் திட்டமிடல் அதிகாரிகள், இளநிலைப் பொறியாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் என மொத்தம் 2,538 பணியிடங்களுக்கான நியமனங்களில் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
ரியல் எஸ்டேட் நிறுவனமான டி.வி.ஹெச் மற்றும் திமுக அமைச்சர் கே.என். நேருவின் உறவினர் சம்பந்தப்பட்ட வங்கி மோசடி வழக்கு தொடர்பான சோதனையின்போது இந்த மோசடியை கண்டுபிடித்ததாக அமலாக்கத்துறை தெரிவித்திருக்கின்றது.
கடந்த 2024 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் நடந்த தேர்வு நடைமுறையை சாதகமாக்கி, குறைந்தது 150 விண்ணப்பதாரர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பதவிக்கும் இடைத்தரகர்கள் மூலம் ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட்டுள்ளது என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்த மோசடியில் 'சக்திவாய்ந்த அரசியல்வாதிகள்' மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் ஈடுபட்டுள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ், அமலாக்கத்துறை இந்த விவரங்களை மாநில காவல்துறை தலைவரிடம் (HoPF) சமர்ப்பித்து, வழக்குப் பதிவு செய்து விசாரிக்குமாறு கோரியுள்ளது.
ஆதாரங்கள்; அமலாக்கத்துறை சமர்ப்பித்த ஆதாரங்கள் மற்றும் துறையின் பதில் மோசடியின்போது 2024-2025 மற்றும் 2025-2026 ஆண்டுகளுக்கான ஆட்சேர்ப்பு செயல்முறை கையாளப்பட்டதாகவும், சில நபர்கள் தேர்வுத் தகவல்களை முன்கூட்டியே பெற்றிருந்ததாகவும் அமலாக்கத்துறை எழுதிய கடிதத்தில் இருப்பதாக கூறப்படுகின்றது.
இந்த மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் பெயர்கள், முறைகேடு நடந்த விதம் மற்றும் லஞ்ச பணம் பெற்றதற்கான தொடர் ஆதாரங்கள் அடங்கிய 232 பக்கங்கள் கொண்ட ஆவணத்தையும் அமலாக்கத்துறை வழங்கியுள்ளது. தேர்வு நடத்திய அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் மீதும் விசாரணை நடத்த அமலாக்கத்துறை கோரியுள்ளது.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறைச் செயலாளர் டி.கார்த்திகேயன் தெரிவிக்கையில், அமலாக்கத்துறையின் கடிதம் குறித்து தனக்குத் தெரியாது, அதேநேரம் இந்த ஆள்சேர்ப்பு செயல்முறை எந்த முறைகேடுகளும் இன்றி முறையாகவே நடைபெற்றதாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் சுமார் ரூ.888 கோடி அளவுக்குப் பெரும் மோசடி நடந்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், இந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் தகுதியற்ற நபர்களைப் பணியில் அமர்த்துவதற்காகப் பணம் பெற்றுக்கொண்டு ரூ.888 கோடி மோசடி நடந்துள்ளது, தி.மு.க. ஆட்சியில் ஊழல் எந்த அளவுக்கு வேரூன்றி இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.
கடந்த 2024-ம் ஆண்டு 2,538 காலிப் பணியிடங்களுக்கு 1.12 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1 காலிப் பணியிடத்திற்கு ரூ.35 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு, தகுதியற்ற நபர்களை நியமித்துள்ளனர். இதன் மூலம், பல்லாயிரக்கணக்கான தமிழகத் திறமையான இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறித்துள்ளது திராவிட மாடல் அரசு.
2 மாதங்களுக்கு முன், முதல்வர் ஸ்டாலினின் சொந்தக் கரங்களால் பணியாணை வழங்கப்பட்ட பணித்தேர்விலேயே இத்தகைய முறைகேடு நடந்திருப்பது, கடந்த நான்கரை ஆண்டுகளில் இதுபோன்று எத்தனை மோசடிகள் நடந்திருக்கும் என்ற கேள்வியை எழுப்புகிறது.
"காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல் செய்து தமிழகத்தின் கஜானாவைக் காலி செய்தது போதாதென்று, தற்போது நேர்மையான தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கி வரும் தி.மு.க. அரசின் ஊழல் மோகத்தை அடக்க சி.பி.ஐ விசாரணை வேண்டும்" எனத் தமிழக பா.ஜ.க. சார்பாக நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர், துப்புரவு ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வில் இடைத்தரகர்கள் மூலம் சிலரிடம் பணம் பெற்றுக் கொண்டு பணிநியமன ஆணை வழங்கப்பட்டிருப்பதாகவும், அதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் தமிழக காவல்துறைக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
2,538 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற தேர்வில், பணி நியமன உத்தரவுக்காக 25 லட்சம் முதல் 35 லட்சம் ரூபாய் வரை பணம் இடைத்தரகர்கள் மூலம் பெறப்பட்டதாகவும், குறைந்தபட்சம் 150 பேர் பணம் கொடுத்து வேலைவாய்ப்பு பெற்றிருப்பதாகவும் அமலாக்கத்துறை, தமிழக காவல்துறைக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாக இயக்குநரகம், பேரூராட்சிகளின் இயக்குநரகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சென்னை பெருநகர மாநகராட்சி என பல்வேறு துறைகளில் பணியாற்றுவதற்காக நடைபெற்ற தேர்வில், பணம் கொடுத்து முறைகேடாக நூற்றுக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பைப் பெற்றிருப்பதாக எழுந்திருக்கும் புகார், அத்தேர்வை நேர்மையாக எதிர்கொண்ட பிற தேர்வர்களைக் கொந்தளிப்பு அடையச் செய்திருக்கிறது.
எனவே, அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு மீதும், தேர்வு நடத்திய அண்ணா பல்கலைக்கழகத்தின் மீதும் தமிழகக் காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொண்டு வருவதோடு, தவறு நடைபெற்றிருக்கும் பட்சத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0