ரூ. 1000 லஞ்சம் பெற்ற வீட்டு வசதித்துறை வாட்ச்மேன்க்கு இரண்டு ஆண்டு சிறை-திருச்சி நீதிமன்றம்

Oct 25, 2025 - 22:38
Oct 25, 2025 - 22:51
 0  37
ரூ. 1000 லஞ்சம் பெற்ற வீட்டு வசதித்துறை வாட்ச்மேன்க்கு இரண்டு ஆண்டு சிறை-திருச்சி நீதிமன்றம்

ரூ 1000 லஞ்சம் பெற்ற வீட்டு வசதித்துறை வாட்ச்மேன்க்கு இரண்டு ஆண்டு சிறை

திருச்சி, தென்னூர், சங்கீதபுரத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் கடந்த 1995 ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி மற்றும் மகள் பெயர்களிலும், திருச்சி நவல்பட்டில் வீட்டு மனைகள் வாங்க மனு செய்துள்ளார். ஒரு மனையின் விலை ரூ.5,234/- நிர்ணயம் செய்யப்பட்டு, அதன்படி மூன்று மனைகளுக்கு முன் வைப்பு தொகையாக தலா 1100/- செலுத்தியுள்ளார். பின்னர், ராமலிங்கத்திற்கு நவம்பர்-1995 ஆம் ஆண்டு தலா 32 சதுர மீட்டர் வீதம் முறையே வீட்டு மனை எண். 58, 65, 67 என மூன்று மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

நவம்பர்-2010 ஆம் ஆண்டு மேற்படி மனைகளுக்குரிய மீதத்தொகையை ராமலிங்கம் தமிழ்நாடு வீட்டு வசதி துறைக்கு செலுத்தியுள்ளார். இந்நிலையில் 07-01-2011 ராமலிங்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகம் சென்று அவருடைய மனைக்குரிய பத்திரத்தையும் பெற்றுக்கொண்டு, அவரது மனைவி மற்றும் மகளுக்குரிய பத்திரங்களை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் உதவியாளர் மாரிமுத்து என்பவரிடம் கேட்டபோது, அவர் இரண்டு மாதத்திற்கு பிறகு வரும்படி தெரிவித்துள்ளார். 

அதன்படி ராமலிங்கம் கடந்த 24-03-2011 அன்று தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்திற்கு சென்று உதவியாளர் மாரிமுத்துவை சந்தித்து அவருடைய மனைவி மற்றும் மகளுக்குரிய பத்திரங்களை கேட்டுள்ளார். 

அப்போது உதவியாளர் மாரிமுத்து என்பவர் ராமலிங்கத்திடம் பத்திரங்களை விடுவிக்கவும், ஏற்கனவே ராமலிங்கத்திற்கு கொடுத்த பத்திரத்திற்காகவும் ரூ.3,000/- கையூட்டு கேட்டுள்ளார். அதற்கு ராமலிங்கம் லஞ்ச பணத்தை கொடுக்க இயலாது என்றார். கொடுத்தால் தான் பத்திரம் கொடுக்கப்படும் என தரராக மாரிமுத்து சொன்னதால், கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள் என்றார். அதற்கு அலுவலக உதவியாளர் மாரிமுத்து ரூபாய் 500 குறைத்துக்கொண்டு ரூ.2,500/- கையூட்டாக கேட்டுள்ளார். 

இந்த லஞ்சம் பணத்தை கொடுக்க விருப்பம் இல்லாத ராமலிங்கம் கடந்த 24.03.2011 அன்று திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையில் புகார் கொடுத்ததன்படி, அலுவலக உதவியாளர் மாரிமுத்து மீது திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதன்தொடர்ச்சியாக கடந்த 25.03.2011 ஆம் தேதி ராசயனம் தடவப்பட்ட லஞ்சப்பணத்தை ராமலிங்கத்திடம் கொடுத்து, பொறிவைப்பு நடவடிக்கை

மேற்கொள்ளப்பட்டது. 

ராமலிங்கத்திடம் அலுவலக உதவியாளர் மாரிமுத்து கையூட்டாக பெற்ற ரூ.2,500/-ல் தனக்கு ரூ.1,500/-ம், மேற்படி அலுவலகத்தில் கிரைய பத்திரம் தயார் செய்ய உதவியாக இருந்த திருச்சி செங்குளம் காலனி சேர்ந்த வாட்ச்மேன் பெர்னத் ஐசக் என்பவருக்கு ரூ.1,000/-மும் லஞ்சமாக பெற்றபோது, அப்போதைய திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துணைக் கண்காணிப்பாளர் இரா.அம்பிகாபதி என்பவரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டனர்.

மேற்படி வழக்கானது திருச்சி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் முதல் குற்றவாளியான அலுவலக உதவியாளராக பணியாற்றிய மாரிமுத்து என்பவர் கடந்த 10.04.2024 அன்று இறந்து விட்டபடியால், அவர் மீதான குற்றம் கனம் நீதிமன்றத்தால் வழக்கறவு (Charge Abate) செய்யப்பட்டது. 

பின்னர் இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக கைது செய்யப்பட்ட திருச்சி செங்குளம் காலனியைச் சேர்ந்த பெர்னத் ஐசக் மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.

விசாரணையின் முடிவில், பெர்னத் ஐசக், வாட்ச்மேன் என்பவர் மீதான குற்றம் அரசு தரப்பில் நிரூபிக்கப்பட்டு இன்று 25.10.2025 ஆம் தேதி திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி புவியரசு பெர்னத் ஐசக் என்பவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் ரூ.1,000/- அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் மூன்று மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேற்படி, வழக்கினை திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் கோ.மணிகண்டன், திறம்பட சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தது மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞராக கோபிகண்ணன் திறம்பட வழக்கை நடத்தியும் குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத்தந்துள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது.

க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0