நெல் நிலுவையில் இல்லை; உதயநிதி ஸ்டாலின் பேச்சு கண்டிக்கத்தக்கது- பி.ஆர்.பாண்டியன்

Oct 24, 2025 - 17:05
 0  44
நெல் நிலுவையில் இல்லை;  உதயநிதி ஸ்டாலின் பேச்சு கண்டிக்கத்தக்கது-  பி.ஆர்.பாண்டியன்

நெல் நிலுவையில் இல்லை என உதயநிதி ஸ்டாலின் பேசி, விவசாயிகளை கொச்சைப்படுத்துவது கண்டிக்கத்தக்கது- பி.ஆர்.பாண்டியன்

பின்னையூரில் சுமார் 50,000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்வதற்காக கொட்டி வைத்து காத்துக்கிடக்கும் விவசாயிகளை கொச்சைப்படுத்தும் விதமாக துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் நெல் நிலுவையில் இல்லை என தெரிவித்து வருவது வேதனை அளிப்பதாக விவசாயிகள் சங்க தலைவர் பி ஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார். இது குறித்த விபரம் வருமாறு;

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் ஒரத்தநாடு பகுதிகளில் வடக்கூர், செல்லம்பட்டி, பின்னையூர், நெடுவாக்கோட்டை, கண்ணந்தங்குடி, கக்கரை ஒரத்தநாடு புதூர் உள்ளிட்ட பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நேரில் ஆய்வு செய்து விவசாயிகளிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் ஒரத்தநாட்டில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை அறுவடை தீவிர அடைந்திருக்கிறது. கொள்முததை தீவிரப்படுத்த பல்வேறு அவசர நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இருப்பினும் ஒரத்தநாடு புதூர், பின்னையூர், கண்ணத்தங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 2 லட்சத்திற்கு மேல் நெல் மூட்டைகள் கொட்டி வைக்கப்பட்டிருக்கிறது.

இதுபோல காவிரி டெல்டாவில் பல்வேறு மாவட்டங்களிலும் நெல் இருப்பில் உள்ளது.சில கிராமங்களில் கொள்முதல் நிறைவு பெற்றுள்ளது. அந்தப் பகுதிகளில் உள்ள கொள்முதல் பணியாளர்கள் சுமைதூக்கும் தொழிலாளர்களைக் கொண்டு தேவையான நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதலை தீவிர படுத்த வேண்டுகிறேன். 

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் தஞ்சையில் ரயில் வேகன்களில் நெல் மூட்டை ஏற்றுவதை பார்வையிட்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் இருப்பு இல்லை என தவறான தகவலை கூறி விவசாயிகளை கொச்சைப்படுத்த வேண்டாம். வீதியில் கிடந்து கதறுகிற விவசாயிகளை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து விட்டு, கொள்முதலை தீவிரப்படுத்துவதற்கு பதிலாக, உண்மைக்கு புறம்பான தகவல்களை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்க்காமலேயே உண்மையை மூடி மறைக்க முயற்சிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தற்போது தான் அரசியலில் பயணிக்க தொடங்கி இருக்கிறார். துவங்கும் போதே உண்மைக்கு புறம்பாக பேசி விவசாயிகளுடைய தவறான பார்வையை உருவாக்கிக் கொள்ளக் கூடாது.  கொள்முதலை தீவிரப்படுத்துவதற்கு என்னென்ன வகையில் செயல்பட முடியுமோ, அதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுகிறேன்.

இந்த ஆய்வின்போது மாநிலத் தலைவர் திருப்பதி வாண்டையார், மாவட்டத் தலைவர் ஊரணிபுரம் ரவிச்சந்திரன், செயலாளர் ஒரத்தநாடு பிரபாகரன்,மாநில இளைஞரணி செயலாளர் ஒக்கநாடு மகேஸ்வரன், கோவிலூர் சதீஷ், ஒரத்தநாடு மேற்கு ஒன்றிய செயலாளர் ரகுநாதன், ரெத்தினவேலு உள்ளிட்ட விவசாயிகள் ஏராளமானோர் பங்கு கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0