அதிமுக அலுவலக கட்டடம் இங்குதான் உள்ளது; ஆனால், அலுவலகத்தின் அதிகாரம் டெல்லியின் கையில்: கனிமொழி எம்.பி.,

Sep 24, 2025 - 09:53
 0  14
அதிமுக அலுவலக கட்டடம் இங்குதான் உள்ளது; ஆனால், அலுவலகத்தின் அதிகாரம் டெல்லியின் கையில்: கனிமொழி எம்.பி.,

அதிமுக அலுவலக கட்டடம் இங்குதான் உள்ளது; ஆனால், அலுவலகத்தின் அதிகாரம் டெல்லியின் கையில் : கனிமொழி எம்.பி.,

சென்னை எழும்பூரில், சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட "முன்னேற்றப் பாதையில் முப்பெரும் விழா" நிகழ்வில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு, பெண்களுக்கு பெருமை சேர்க்கும் கழகத்தின் சாதனைகளையும், தமிழ்நாட்டை உயர்த்தும் சமூகநலத் திட்டங்களையும், முன்னெடுப்புகளையும் குறித்து சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி, பேசியதாவது; முன்னேற்றப் பாதையில் முப்பெரும் விழா, பெண்களுக்கு செல்வம் பெருகும் பெருமையை வழங்கும் கழகம் என்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, உங்களையெல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்

இன்று ஏனோ தெரியவில்லை, வழக்கத்தை விட அதிக அளவில் வந்திருக்கும் ஊடகத் துறையைச் சேர்ந்த என்னுடைய நண்பர்களுக்கும், என் வணக்கத்தையும் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஊடகத் துறையிலிருந்து நண்பர்கள் இவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள் என்றால், அதற்குக் கண்டிப்பாக ஏதோ ஒரு காரணம் இருக்கும். தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ‘ஏதாவது சூடான செய்தி கிடைக்குமா?’ என்ற எதிர்பார்ப்புடன் அவர்கள் வந்திருக்கக் கூடும்.

"இந்த நிகழ்ச்சியில் பெண்கள் மிக அதிக அளவில் கலந்து கொண்டுள்ளீர்கள். அரங்கம் முழுவதும் பெண்களால் நிரம்பி இருப்பதை பார்க்கிறேன். இப்படிப்பட்ட மேடையை நாம் அடிக்கடி பார்க்க முடியாது. பொதுவாக மேடையை பார்த்தீங்கன்னா, ஒரு பெண் கூட இருக்கமாட்டார்கள்; இருந்தாலும், பெயருக்கு ஒரு பெண் இருக்க வேண்டும் என்பதற்காக ஒருவரை வைத்திருப்பார்கள். ஆனால் இன்றைய இந்த காட்சி, பெண்கள் முழுமையாக நிரம்பியிருக்கும் காட்சி, இதை பார்க்கும்போதே எனக்கும் மகிழ்ச்சியை அளிக்கும் ஒரு சிறப்பான தருணமாக இருக்கிறது.

ஒரு காலகட்டத்தில், பெண் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, படிக்கக்கூடாது, வேலைக்குச் செல்லக்கூடாது, சமையல் அறையைத் தாண்டி வேறு எதையும் சிந்திக்கக்கூடாது என்று கட்டுப்படுத்தப்பட்டார். வீட்டில் இருப்பவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டு, வாழ்க்கை முழுவதும் அடிமையாக மட்டுமே வாழ வேண்டும் என்ற நிலை அந்தக் காலத்தில் இருந்தது.

ஆனால் அந்த காலகட்டத்தைத் தாண்டி, இன்று கல்வியில் சாதித்தவர்கள், அரசியல் அதிகாரம் பெற்றவர்கள், பல பொறுப்புகளை வகிக்கும் ஆற்றல் பெற்றவர்கள், தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் முன்னே வந்து நிற்பவர்கள், இப்படி பல பெண்கள் இந்த அரங்கில் நிரம்பியிருக்கிறீர்கள்.

அடுத்த தலைமுறையை படிக்கவைத்து, தன்னம்பிக்கையுடன் சொந்தக் காலில் நிற்கச் செய்பவர்கள் நீங்கள். இன்று உங்களைப் பார்க்கும்போது, பெண்களின் வளர்ச்சியின் பெருமையை உணர்கிறேன். அதற்கு காரணம் திராவிட இயக்கம்; அதற்கு காரணம் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெருமையோடு நாம் இன்று இந்த மேடையில் நிற்கிறோம்.

ஒருமுறை ஒன்றியத்தில் இருக்கக்கூடிய அமைச்சர் ஒருவர், தந்தை பெரியாரை சந்தித்து, இந்த நாட்டில் அதிகமாக மக்கள் தொகை பெருகிக் கொண்டே இருக்கிறது. அதை எப்படி குறைப்பது என்று தெரியவில்லை. இவ்வளவு மக்கள் தொகை பெருகிக் கொண்டே சென்றால், மக்களுக்கான திட்டங்களும் செலவுகளும் பெருகும். மக்களுடைய வாழ்க்கை வளம்பெற மிகப் பெரிய சவாலாக மாறிவிடும் என்று கூறினார். 

அதற்கு தந்தை பெரியார், ‘பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கிடைத்துவிட்டால், மக்கள் தொகை குறைந்து விடும்’ என்றார். அந்த ஒன்றிய அமைச்சருக்கு ஒன்றும் புரியவில்லை. இதற்கும், அதற்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?’ என்று கேட்டார். 

அதற்கு பெரியார், ‘ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று காத்திருக்க வேண்டியதில்லை. பெண் குழந்தை பிறந்தாலே போதும்; ஒரு பிள்ளை அல்லது இரண்டு பிள்ளைகளில் நிறுத்திக் கொள்வார்கள். ஏனெனில், அந்தப் பெண்ணுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு. அதனால் குடும்பங்கள் அதிகமான குழந்தைகள் பெறுவதை நிறுத்திக் கொள்வார்கள்’ என்று விளக்கினார். அதை சட்டமாக்கியது கலைஞர் . 

இன்று தமிழ்நாட்டு உடைய மக்கள் தொகை குறைந்து இருக்கிறது. அதை பயன்படுத்திக் கொண்டு நம்முடைய மக்கள் பிரதிநிதிகளை குறைத்துவிட வேண்டும் என்று ஒன்றிய பாஜக கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், அதை எந்த காலத்திலும் நடக்க விடமாட்டேன் என்று சூளுரைத்து இருக்கக்கூடிய ஆட்சி திராவிட முன்னேற்றக் கழகம். இப்படி ஒரு தொலைநோக்குப் பார்வையோடு சிந்திக்க தெரியும்.

தந்தை பெரியாரின் வழியில், அவரது கனவுகளையும் லட்சியங்களையும் கருத்துகளையும் மனதில் சுமந்து கொண்டு ஆட்சி நடத்திக் கொண்டிருப்பவர்கள் நாம் என்ற பெருமையோடு, இன்று இந்த மேடையில் நின்று கொண்டிருக்கிறோம்.

வீட்டிலேயே இருந்த பெண்களையும், எங்களாலும் சம்பாதிக்க முடியும் என்று உருவாக்கப்பட்ட திட்டம் தான் மகளிர் சுய உதவிக் குழு திட்டம். அந்த திட்டத்தின் வழியாக தன்னம்பிக்கை பெற்ற பெண்களே, உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்டவர்கள்.

இந்த சுய உதவிக் குழுக்களுக்கு, அமைச்சராக இருந்த பொழுது மு.க.ஸ்டாலின் சுழல் நிதியை வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி வந்த பிறகு, நிலுவையில் இருந்த இந்த சுய உதவிக் குழுக்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 2,018 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, கடன் உச்சவரம்பு 20 லட்சத்தில் இருந்து 30 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டது. மொத்தம் கிட்டத்தட்ட 11,000 கோடி கடன் வழங்கப்பட்டு இருக்கிறது. சுய உதவிக் குழுக்களில் இருக்கக்கூடிய சகோதரிகளுக்கு, இத்தனை சாதனைகளை செய்திருக்கக்கூடிய ஆட்சி நம்முடைய ஆட்சி.

42% சதவீதம் இந்தியாவிலேயே பெண்கள் உழைக்கக்கூடிய மாநிலம், பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தந்து இருக்கக் கூடிய மாநிலம் தமிழ்நாடு என்று அந்தப் பெருமை நமக்கு இருக்கிறது.  

நாங்கள் கொடுத்த வாக்குறுதியை முக்கால்வாசி நிறைவேத்தியச்சி. கொடுக்காத வாக்குறுதிகளையும் நிறைவெற்றி கொண்டிருக்கக்கூடிய ஆட்சி, அது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. காலை உணவு திட்டம் தேர்தல் வாக்குறுதியில் இல்லை. ஆனால், அந்தப் பிள்ளைகள் மதியம் வரை பசியோடு இருக்கக்கூடாது. ஒரு தாயாக நின்று, காலை உணவு திட்டத்தை நமக்காக உருவாக்கி வழங்கிய முதலமைச்சர்.  

எதிர்கட்சியில் இழக்கக்கூடியவர்கள், இனிமேல் என்ன காலகட்டத்திலும் பாஜகவோடு ஓட்டும் இல்லை, உறவும் இல்லை, எதுவும் இல்லையென்று சொல்லிவிட்டு, தேர்தல் வந்தவுடன், மறுபடியும் ஸ்டிக்கர் ஒட்டிக்கிச்சி.

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கடந்த நான்கு ஆண்டுகளாக எங்கு இருந்தார் என்று தெரியவில்லை. திடீர்னு தேர்தல் வந்தவுடன், பஸ்சில் பயணம் செய்கிறார். அந்த பஸ்ஸுக்கும், முதலமைச்சர் ஒருவர் பெயர் வைத்துள்ளார்!

அந்தப் பேருந்தில் ஏறிக் கொண்டு வருகிறார். நீங்க என்ன பண்ணுவீங்க? என்று கேள்வி கேட்க்கிறார். நீங்கள் நாலு வருஷமா ஆள காணோம், நாங்கள் என்ன செய்தோம் என்றுகூட உங்களுக்கு தெரியவில்லை.

உங்கள் கட்சி அலுவலகத்தை டெல்லிக்கு மாற்றிவிட்டேர்கள் என்று கவலையோடு சொல்கிறோம். அதுக்கு, அவர் எனக்கு பதில் சொல்லி இருக்கிறார்.

அதிமுக அலுவலகம் சென்னையில் தான் இருக்கிறது, வந்து பாருங்கள் என்று சொல்கிறார்.

கட்டிடம் அங்கு தான் இருக்கிறது என்று எனக்கு தெளிவாக தெரியும். கட்டடத்தை டெல்லிக்கு எடுத்துச் செல்ல முடியுமா? ஒருவேளை, முடியுமானால் பிரித்து கொண்டு போவீர்கள்.

கைக்குட்டையை வைத்துக் கொண்டு முகத்தை தொடச்சிகிட்டு வெளியில் வந்தாலும், நீங்கள் என்று தெளிவாக தெரிகிறது. உங்களுக்கு அவமானமா இருக்கலாம், உண்மையாகவே கட்டடம் அங்கே இருக்கிறது. ஆனால், அலுவலகத்தின் அதிகாரம் டெல்லியின் கைகளில் உள்ளது. அதுதான் உண்மை.

நாங்கள் தான் அறிவாலயத்தை காப்பாற்றினோம் என்று எதிர்கட்சியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். ஆனால் அறிவாலயத்தை காப்பாற்ற யாரும் வர வேண்டியதில்லை; கழகத்தின் உடன்பிறப்புகளே இருக்கிறார்கள். அவர்கள் அறிவாலயத்தை காப்பாற்றுவார்கள்

ஒரு கட்சியை எப்படி நடத்த வேண்டும் என்று திமுக கிட்ட இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று வழக்கறிஞர் கப்பில் சிபில் சொன்னார். கலைஞர் அவர்களிடம் கட்சியை எப்படி நடத்த வேண்டும் என்று ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சொன்னார். கம்பராமாயணத்தை யார் எழுதினார் என்று மாத்திட்டீங்க, அதுமாதிரி, இதையும் மாற்ற முடியாது.   

சரித்திரம் உங்களுக்கு மறந்து போயிருக்கலாம். ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர்களுக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு அது என்றும் மறக்காது என்று பேசினார்.

இந்நிகழ்வில், சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், திமுக மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், திமுக மகளிர் அணி இணைச் செயலாளர் குமரி விஜயகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ரவிச்சந்திரன், தமிழன் பிரசன்னா, மகளிர் அணி நிர்வாகிகள் சுதா தீனதயாளன் மற்றும் இராஜேஸ்வரி ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0