திருச்சியில் பலியான துப்புரவுத் தொழிலாளர்கள் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வேண்டும்; கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்

Sep 23, 2025 - 14:11
 0  9
திருச்சியில் பலியான துப்புரவுத் தொழிலாளர்கள் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வேண்டும்; கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்

திருச்சியில் பலியான துப்புரவுத் தொழிலாளர்கள் குடும்பத்திற்கு
ரூ.30 லட்சம் இழப்பீடு வேண்டும்; கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்

 


     திருச்சியில் புதை சாக்கடை அடைப்பை அகற்றும் பணியி்ல் ஈடுபட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் 2 பேர், விஷவாயு தாக்கி நேற்று உயிரிழந்தனர். திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட திருவெறும்பூர் பிரகாஷ் நகர் விரிவாக்கப் பகுதியில் புதை சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பகுதியில் புதை சாக்கடை குழாயின் சில இடங்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
     அடைப்பை அப்புறப்படுத்துவதற்காக மாநகராட்சியில் தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளர்களான கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் பிரபு(32), புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் ரவி(38) ஆகியோர் சாக்கடைக்குள் இறங்கியபோது, புதை சாக்கடையில் உருவாகியிருந்த விஷவாயு தாக்கி இருவரும் பலியாகினர். துப்புரவுத் தொழிலாளர்கள் இருவரும் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணியில் ஈடுபட்டதாலேயே விஷவாயு தாக்கி உயிரிழந்ததாக அப்பகுதி மக்கள் கூறினர்.


   இந்தநிலையில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரக்குழுவினர் தெரிவிக்கையில்; மனிதக் கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் மறுவாழ்வு சட்டம் 2013-ன் படி கழிப்பறைகள், வடிகால்கள், கழிவுநீர் குழாய்கள், செப்டிக் டாங்கிகள் போன்ற இடங்களில் மனிதக் கழிவுகளை கைகளால்  சுத்தம் செய்வது குற்றமாக அறிவிக்கப்பட்ட நிலையிலும். திருச்சி மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களை, எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல், பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தி உள்ளனர். இதனால், தூய்மை பணியாளர்களான ரவி(38), பிரபு(32) என 2 உயிர்கள் பறிபோகி இருக்கிறது. சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய அரசு அமைப்புகளே,  அதனை மீறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.
    மக்களின் சுகாதாரத்தை காக்கக்கூடிய தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்தி, அவர்களுடைய வாழ்க்கை மேம்பாட்டுக்கான பணிகளை அரசு உறுதி செய்ய வேண்டும். அவர்களை ஒப்பந்ததாரரிடம் ஒப்படைத்து, அவர்களுடைய வாழ்க்கையை பின்னோக்கி இழுத்துச் செல்கிற நிலை, உழைப்பாளர்களை ஆண்டேக்களிடம் ஒப்படைக்கும் நிலையாகி விட்டது.
   தமிழ்நாடு அரசு இறந்தவர்களின் குடும்பங்களுக்கு, 2023 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி,  தலா ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவர்களுடைய குடும்பத்தார்களில் யாருக்கேனும் ஒருவருக்கு தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்கிட வேண்டும். படித்திடும் குழந்தைகளாக இருந்தால் அவர்களின் படிப்புச் செலவையும் ஏற்று, அவர்களுக்கான அரசு வேலையை வழங்கிட வேண்டும். எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி பணியில் ஈடுபடச் செய்த  ஒப்பந்ததாரரை கைது செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி திருச்சி மாநகர் மாவட்ட குழுவினர் அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

  முன்னதாக, பாதாள சாக்கடையில்  விஷ வாயு தாக்கியத்தில் உயிரிழந்த 2 தொழிலாளர்களின் மரணத்திற்கு நியாயம் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் துவாக்குடி அரசு மருந்துவமனையின் முன்பு போராட்டம் நடைபெற்றது. இந்தப்போராட்டத்தில் லெனின், கார்த்தி, மாறன் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர்.
க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0