மயிலாடுதுறையில் ஆணவக் கொலை; போலீசார் குவிப்பு

Sep 16, 2025 - 17:56
Sep 16, 2025 - 18:33
 0  6
மயிலாடுதுறையில் ஆணவக் கொலை; போலீசார் குவிப்பு

மயிலாடுதுறையில் ஆணவக் கொலை; போலீசார் குவிப்பு

 மயிலாடுதுறை மாவட்டம் அடியாமங்கலம் கிராமத்தில் பெரிய தெருவைச் சேர்ந்த குமார் - ராஜலட்சுமி தம்பதியினரின் மகன் வைரமுத்து. மெக்கானிக் வேலை செய்து வருகிறார். அவர் அதே பகுதியில் வசித்து வரும் 26 வயதுடைய மாலினி என்ற பெண்ணை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். மாலினி சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உறவினர் திருமணத்திற்காக மாலினி தமது சொந்த ஊருக்கு வந்தபோது, அவருக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்துள்ளனர். அதற்கு மாலினி மறுப்பு தெரிவித்து, தான் வைரமுத்துவைக் காதலிப்பதாகவும் அவரைத்தான் திருமணம் செய்துகொள்வதாகவும்

 கூறியுள்ளார். இதனால் மாலினிக்கும் பெண்ணின் தாயார், சகோதரர்கள் குகன், குணால் அகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே மாலினி, வைரமுத்துவின் வீட்டிற்கு வந்ததாகவும், இருவருக்கும் திருமணம் செய்துவைப்பதாக வைரமுத்துவின் பெற்றோர் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் சமாதானமடைந்த மாலினி, சென்னைக்குத் திரும்ப முடிவெடுத்து ரயில் நிலையம் சென்றுள்ளார். அங்கே வைரமுத்துவை வரச் சொல்லியிருக்கிறார். தகவலறிந்த பெண்ணின் சகோதரர் குணால், அந்த பெண்ணை கடுமையாகத் தாக்கியதுடன் 'என் அக்காவுடன் பழகினால் உன்னை கொலை செய்துவிடுவேன்' என்று வைரமுத்துவுக்கும் மிரட்டல் விடுத்துள்ளார். மாலினியின் தாயாரும் வைரமுத்து வேலை பார்க்கும் இடத்திற்கு சென்று கடுமையாக திட்டியுள்ளார். இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில், விசாரணையில் மாலினி தனது காதலில் உறுதியாக இருந்துள்ளார். மேலும், என் தாய், தந்தை மற்றும் சகோதரர்களுடன் என்னை அனுப்பி வைத்தால் அவர்கள் என்னை கொன்று விடுவார்கள் என்று காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் கடந்த செப்.12 அன்று காவல்துறை விசாரணைக்கு பிறகு வைரமுத்து மற்றும் அவரது பெற்றோருடன் மாலினியை அனுப்பி வைத்துள்ளனர் காவல்துறையினர். அப்போது பெண்ணின் தாய் மற்றும் சகோதர்கள், 'இனி எங்களுக்கும் அவளுக்கும் எந்த உறவும் இல்லை. எங்கள் வீட்டில் எந்த நிகழ்வுகளுக்கும் வரக் கூடாது' என்று தெரிவித்து எழுதிக் கொடுக்கும்படி கேட்டதோடு மட்டுமின்றி நீங்கள் எப்படி உயிரோடு வாழ்கிறீர்கள் என்று பார்க்கிறோம் என்று மிரட்டி விட்டுச் சென்றுள்ளனர். செப். 15 ஆம் தேதி இரவு சுமார் 10.30 மணி அளவில் வைரமுத்து வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது வழிமறித்த பெண்ணின் சகோதரர்கள் குகன், குணால் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வைரமுத்துவை வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளனர். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதும் பெண்ணின் தாயார் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தாகக் கூறப்படுகிறது. தனது மகளை தனது சொந்த சமூகத்தில் திருமணம் செய்து வைக்க நினைத்துள்ளார். தாயின் தூண்டுதலின் பேரிலேயே பெண்ணின் சகோதரர்கள் இந்த கொலையைச் செய்துள்ளதாக பேசப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மயிலாடுதுறை ஒன்றிய துணைத் தலைவராக இருந்துள்ளார் வைரமுத்து. இதையடுத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அப்பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு அமைப்புகள் இந்த படுகொலைக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றன. குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டுமெனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. பெண்ணின் தாயார், வைரமுத்துவை மிரட்டிய வீடியோ அடிப்படையில் காவல்துறையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து அசம்பாவிதம் ஏதும் ஏற்படாதவாறு 30க்கும் மேற்பட்ட போலீசார் கிராமத்தில் குவிக்கப்பட்டனர்.

க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0