நான்கு மாதமாக எந்த வளர்ச்சிப் பணிகளும் இல்லை : கருப்பு உடையுடன் திமுக கவுன்சிலர்கள்: அதிமுக புறக்கணிப்பு: மாமன்ற கூட்டத்தில் சலசலப்பு 

Sep 29, 2026 - 14:51
 0  58
நான்கு மாதமாக எந்த வளர்ச்சிப் பணிகளும் இல்லை : கருப்பு உடையுடன் திமுக கவுன்சிலர்கள்: அதிமுக புறக்கணிப்பு: மாமன்ற கூட்டத்தில் சலசலப்பு 

நான்கு மாதமாக எந்த வளர்ச்சிப் பணிகளும் இல்லை : கருப்பு உடையுடன் திமுக கவுன்சிலர்கள்: அதிமுக புறக்கணிப்பு: மாமன்ற கூட்டத்தில் சலசலப்பு 

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில், ஆணையர் நே.பென்மணி, துணை மேயர் ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன், பி. ஜெயா நிர்மலா, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் துணை ஆணையர், நகர பொறியாளர், நகர் நல அலுவலர், செயற்பொறியாளர்கள், மாநகராட்சி உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் 65 வார்டுக்குட்பட்ட பகுதிகளில் நிலவும் அடிப்படை பிரச்சனைகளை மாமன்ற உறுப்பினர்கள் மேயர் முன் கவனத்திற்கு கொண்டு வந்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

முன்னதாக, இன்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் திமுக மாமன்ற பெண் உறுப்பினர்கள் கருப்பு சேலை அணிந்தும், ஆண் உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்தும் வந்திருந்தனர். பின்னர், சிறிது நேரம் விவாதத்தில் ஈடுபட்ட மண்டல குழு தலைவர்கள் துர்கா தேவி, விஜயலட்சுமி கண்ணன், ஜெயநிர்மலா, திமுக கவுன்சிலர்கள் முத்துச்செல்வம், ராமதாஸ், கலைச்செல்வி லீலாவேலு கே.கே.கே.கார்த்திக், சீதாலட்சுமி முருகானந்தம், கமால் முஸ்தபா, புஷ்பராஜ் உள்ளிட்ட திமுக கவுன்சிலர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக  வெளிநடப்பு செய்தனர். திமுக கவுன்சிலர்களுடன் மனிதநேய மக்கள் கட்சி கவுன்சிலர் பைஸ் அகமதுவும் வெளிநடப்பு செய்தார். 

பின்னர் திமுக கவுன்சிலர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; ஆட்சி மாற்றத்துக்கு பின் கடந்த 4 மாதங்களாக மாநகராட்சியில் எந்த பணியும் நடைபெறவில்லை. குடிநீர், சாக்கடை, மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை போன்ற பிரச்சனைகளில் கவனம் செலுத்தவில்லை. அதிகாரிகள் கவுன்சிலர்களை மதிப்பதில்லை. அமைச்சர் தன்னிச்சையாக ஆய்வு செய்கிறார்.

அடிப்படைத் தேவைகளுக்கு கூட கடந்த நான்கு மாதங்களாக எந்த நிதியும் வார்டுகளுக்கு ஒதுக்கப்படவில்லை. கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்க ரூ.6 கோடி ரூபாய் நிதி அரசால் ஒதுக்கப்பட்ட நிலையில் அந்த நிதி தேவை இல்லை என மாநகராட்சி நிர்வாகம் திருப்பி அனுப்பியது கண்டிக்கத்தக்கது.

மேற்கண்ட அடிப்படை பிரச்சனைகளுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு நல்காததை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம் என்றனர். இதேபோல் அதிமுக கவுன்சிலர்களும் மாமன்ற கூட்டத்தை புறக்கணித்தனர். 

இதற்கிடையே, நான்கு மாதமாக எந்த பணிகளும் நடைபெறவில்லை என கூறி வெளிநடப்பு செய்த திமுக கவுன்சிலர்கள் மீண்டும் மாமன்ற கூட்டத்தில் பங்கேற்றத்தை  கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள்  மாநகராட்சி அதிமுக தலைவர் கோ.கு. அம்பிகாபதி தலைமையில் கவுன்சிலர்கள் அரவிந்தன், அனுசியா ஆகிய மூன்று பேரும் கூட்டத்தை புறக்கணித்து சென்றனர்.

இதற்கிடையில் திருச்சி மாநகராட்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 17-வது வார்டு மாமன்ற உறுப்பினர்  ந.பிரபாகரன், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சட்ட மாமேதை அம்பேத்கர் சிலையை அகற்றியதை கண்டித்தும், மீண்டும் அதே இடத்தில் சிலையை வைக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பியவாறு சென்னை மாநகராட்சியை கண்டித்து வெளிநடப்பு செய்தார். 

இதற்கிடையே வெளிநடப்பு செய்த திமுக கவுன்சிலர்கள் மீண்டும் வந்த அரங்கத்துக்குள் சென்று, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கவுன்சிலர்களை வைத்து பெரும்பான்மை இல்லாமல் எப்படி கூட்டத்தை நடத்துவீர்கள் கூட்டத்தை ஒத்தி வையுங்கள் என கூறினர்.

அதைத்தொடர்ந்து மேயர் அன்பழகன் தேதி குறிப்பிடாமல் கூட்டத்தை ஒத்தி வைத்தார். இதனால் மாநகராட்சி கூட்டத்தில் சலசலப்பும், பரபரப்பும் நிலவியது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0