ஜெம் வீரமணி வழக்கு: பெண்கள் பாதுகாப்பில் மிக சிறப்பு கவனம்: குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ரமேஷ்

Sep 25, 2026 - 16:22
 0  20
ஜெம் வீரமணி வழக்கு: பெண்கள் பாதுகாப்பில் மிக சிறப்பு கவனம்: குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ரமேஷ்

ஜெம் வீரமணி வழக்கு: பெண்கள் பாதுகாப்பில் மிக சிறப்பு கவனம்: குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ரமேஷ்

கிரடாய் (இந்திய கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பு) சார்பில், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் மனைகளுக்கான விற்பனை கண்காட்சி, திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;

ஜெம் வீரமணி வழக்கைப் பொறுத்தவரை, கடந்த கால ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். தமிழக முதலமைச்சர் பொறுப்பேற்ற உடனே, உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆரம்பித்து, விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த கால ஆட்சியில் குற்றவாளிகள் எப்படி தப்பித்தார்கள், எப்படி விடுவிக்கப்பட்டார்கள் என்பதை அனைவரும் பார்த்தோம். 

கடந்த ஐந்து ஆண்டுகளாக சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள், பாலியல் குற்றங்கள், அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் போன்றவை நடந்தன. 

மக்களுக்கு யார் சிறப்பாக செயல்படுகிறார்கள் என தெரியும். நமது முதலமைச்சர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். 

ஜெம் வீரமணி வழக்கில் யாராக இருந்தாலும், எப்பேர்பட்ட ஆளாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் அண்ணனாக, அரணாக என்றைக்கும் கூட இருப்போம் என்று முதலமைச்சர் விஜய், அனைத்து மாணவிகளுக்கும் கடிதம் எழுதினார்கள். பெண்கள் பாதுகாப்பில் மிக சிறப்பாக கவனம் செலுத்தி குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்.

ஜெம் வீரமணி வழக்கில், ஸ்டாலின் சார் பேசவில்லை என்று கூறிக்கொண்டு இருந்த நிலையில், திடீரென்று உறக்கத்திலிருந்து எழும்பி இப்போது அறிக்கை கொடுத்திருக்கிறார்.

இடைத்தேர்தல் பிரச்சாரங்கள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மக்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்து வருகிறார்கள். வேட்பாளர்கள் கட்சிகள் மாறிவிட்டதாக ஒரு பொய்யான பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் வைத்து குழப்பம் ஏற்படுத்த முயல்கிறார்கள்.

மக்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். இரண்டு இடைத்தேர்தலிலும் தமிழக வெற்றிக் கழகம் மாபெரும் வெற்றியை அடையும். டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அனைத்து மருத்துவமனைகளிலும் சிறப்பான வசதிகளை தயார்படுத்த சொல்லியிருக்கிறோம் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் திருச்சி கிரடாய் சேர்மன் மனோகரன், கிரடாய் தலைவர் நசுருதீன், செயலாளர் முகமது இப்ராஹிம், பொருளாளர் கார்த்திக், கண்காட்சி பேர்புரோ சேர்மன் இளமுருகன், கண்காட்சி செயலாளர் அலாவுதீன் தமிழ்நாடு க்ரடாய் துணை தலைவர் கோபிநாதன், ஸ்டேட் பேங்க் சென்னை சர்க்கிள் பொது மேலாளர் சஞ்சீவ் குமார், துணைப் பொது மேலாளர் சந்தீப் குமார் நாயக், பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரி ராஜ்குமார், எச்டிஎப்சி வங்கி பால முரளி கிருஷ்ணன் சின்கா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கண்காட்சியில் 32 கட்டுமான நிறு வனங்கள், உள் அலங்கார நிறுவனங்கள், கட்டுமான பொருட்கள் நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, எச்டி எப்சி வங்கி உள்ளிட்ட 48 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது. வீடு வாங்க, வீட்டுக் கடன், நிதி ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த கண்காட்சியில் ரூ.30 லட்சம் முதல் ரூ.6 கோடி வரையிலான தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வீட்டுமனைகள் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும், இந்த கண்காட்சியில் கட்டுமான நிறுவனங்கள் மற்றும் அலங்கார நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளனர். இது வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்தது. நிகழ்வில் ஆலோசகர் ரவி, இணை செயலாளர் முருகானந்தம், பொருளாளர் கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0