திருச்சியில் விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம் ஒத்திவைப்பு ; போராட்டத்தில் பங்கேற்க வந்த விவசாயி உயிரிழப்பு: அரசு வேலை வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை  

Sep 19, 2026 - 18:13
 0  118
திருச்சியில் விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம் ஒத்திவைப்பு ; போராட்டத்தில் பங்கேற்க வந்த விவசாயி உயிரிழப்பு: அரசு வேலை வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை  

திருச்சியில் விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம் ஒத்திவைப்பு ; போராட்டத்தில் பங்கேற்க வந்த விவசாயி உயிரிழப்பு: அரசு வேலை வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை  

திருச்சி, சமயபுரம் அருகே 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தமிழக வெற்றிக்கழக அரசு தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் தொடர்ந்து 5-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

 போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகள் 11 பேரை நேற்று சென்னை தலைமைச் செயலகத்திற்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள் அமைச்சர்கள் புஸ்லி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, வினோத் ஆகியோருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை நடத்தினர். இடைத்தேர்தலை காரணம் காட்டி போராட்டத்தை கைவிடுமாறு அமைச்சர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு நாங்கள் இங்கே எதுக்கும் பதில் கூற முடியாது. துறை சார்ந்த அமைச்சர்கள் போராட்டக் களத்திற்கு வந்து பதில் சொல்லட்டும் என்று விவசாயிகள் போராட்டக் களத்திற்கு திரும்பினர் . 

இதனையடுத்து இன்று நண்பகல் அமைச்சர்கள் வினோத், ரமேஷ் மற்றும் காந்திராஜ் ஆகியோர் சமயபுரம் வந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தமிழகத்தில் இடைத்தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால் புதிய அறிவிப்புகளை வெளியிட இயலாது எனக் கூறிய அமைச்சர் ரமேஷ், 20 நாட்கள் அவகாசம் வழங்குமாறு கேட்டுக் கொண்டார். இந்த கோரிக்கையை ஏற்க மறுத்து விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்தனர். அதிகாரிகள் மீண்டும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதன் அடிப்படையில், வரும் அக்.22 வரை தங்களது காத்திருப்புப் போராட்டத்தை ஒத்தி வைப்பது எனவும், அதன் பிறகும் விவசாய கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யாவிட்டால் தொடர் காத்திருப்பு போராட்டத்துடன் உண்ணாவிரத போராட்டமும் இதே இடத்தில் நடத்தப்படும் என்ற அறிவிப்புடன் போராட்டத்தை விவசாயிகள் கைவிட்டனர்.

இந்நிலையில், இப்போராட்டத்தில் பங்கேற்பதற்காகக் கரூர் மாவட்டம், வாங்கல் அருகே உள்ள முனியப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி என்ற விவசாயி வாகனத்தில் திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே போராட்டக் களம் நோக்கி வந்துக்கொண்டிருந்தார். அப்போது, விவசாயிகளில் காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட அவருக்குத் திடீரெனக் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவரது உடல்நிலை மோசமடைந்ததால், மேல் சிகிச்சைக்காகத் திருச்சி பால்பண்ணை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சொல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது சக விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

விவசாயியின் மறைவு குறித்து அறிந்த விவசாய சங்கங்கள் தனியார் மருத்துவமனையில் திரண்டனர்.

பின்னர் விவசாயியின் இறப்புக்கு  தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் இரங்கல் அறிக்கையினை வெளியிட்டது. அதில் அடங்காப் போராளி, முனியப்பனூர் விவசாயி கந்தசாமியின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்!

விவசாயிகளின் வாழ்வாதாரக் கோரிக்கையான பயிர் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு நியாயமான கோரிக்கைகளுக்காக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று, திடீர் மூச்சுத்திணறல் காரணமாக திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கரூர் மாவட்டம், வாங்கல் அருகே உள்ள முனியப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பகவுண்டரின் அன்பு மகனும், நமது சங்கத்தின் தீவிரப் போராளியுமான கந்தசாமி சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து பேரதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரமும் அடைகிறோம்.

தன் வாழ்வாதார உரிமைக்காகவும், ஒட்டுமொத்த விவசாய சமூகத்தின் விடியலுக்காகவும் கடைசி மூச்சு வரை களத்தில் நின்று போராடிய ஒரு உண்மையான களப்பணியாளரை இன்று நாம் இழந்து நிற்கிறோம். போராட்டக் களத்திலேயே தன் உடல்நலனைப் பொருட்படுத்தாது மக்கள் நலனுக்காக உழைத்த அவரது தியாகம் என்றும் போற்றத்தக்கது. அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தோழர்களுக்கும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் எங்களது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழக அரசுக்குக் கோரிக்கை: தன் வாழ்வாதார உரிமைக்காகப் போராடி உயிர்நீத்த விவசாயி கந்தசாமியின் தியாகத்தைக் கருத்தில் கொண்டு, அவரது குடும்பத்திற்குத் தமிழக அரசு உடனடியாகக் குடும்ப நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். மேலும், அவர் எந்தக் கோரிக்கைக்காகத் தன் உயிரைத் தியாகம் செய்தாரோ, அந்த நியாயமான விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதே நாம் அவருக்குச் செய்யும் உண்மையான அஞ்சலியாகும். அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

மேற்கண்டவாறு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முன்னதாக, விவசாயிகள் போராட்டம் ஒத்திவைத்த நிலையில், போராட்டத்தில் பங்கேற்க வந்த விவசாயி போராட்டக் களத்தில் உயிரிழந்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0