மயிலாடுதுறை கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்க கூடாது - பி.ஆர். பாண்டியன்

Sep 16, 2026 - 00:21
 0  7
மயிலாடுதுறை கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்க கூடாது - பி.ஆர். பாண்டியன்

மயிலாடுதுறை கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்க கூடாது - பி.ஆர். பாண்டியன்

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஒரத்தநாட்டில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் திருப்பதி வாண்டையார் தலைமையேற்றார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் பங்கேற்று பேசியதாவது:

தமிழக முதலமைச்சர் தனது தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் கூட்டுறவு கடன்களை நிபந்தனையின்றி முழுமையாக தள்ளுபடி செய்ய முன்வர வேண்டும்.கூட்டுறவு வங்கிகளுக்கு மாவட்டங்களின் சாகுபடி பரப்பளவிற்க்கு ஏற்ப கடனுக்கான நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும்.

நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3500 விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்திட வேண்டும். கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4500 விலை நிர்ணயம் செய்திட வேண்டும், புதிய விலையில் தடையின்றி நெல் கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முன்வர வேண்டும், தரமான முறையில் அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல் தடையால் பல்வேறு இடங்களில் கோடை மழையில் நனைந்து சேதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது, இதற்கு தமிழக அரசே பொறுப்பு ஏற்க வேண்டும். 

மயிலாடுதுறை மாவட்ட கடல் பகுதியில் ஐந்து இடங்களில் அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்டி எக்ஸ்ப்ளரேஷன் அண்ட் ப்ரொடக்ஷன் நிறுவனம் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறைக்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. இதனை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். தமிழக அரசு அதற்கான அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

காவிரியின் குறுக்கே சட்டவிரோதமாக மேகதாட்டு அணை கட்ட கர்நாடக அரசு எடுக்கும் முயற்சியை தடுத்து நிறுத்திடவும், பெருந்தலைவர் காமராஜர் அடிக்கல் நாட்டிய ராசி மணலில் புதிய அணை கட்ட திட்டமிடவும் அனைத்து அரசியல் கட்சிகள், விவசாயிகள் இடையே ஒத்த கருத்தை உருவாக்கும் வகையில் பிரச்சாரப் பயணம் வரும் செப்டம்பர் 21ஆம் தேதி காலை 9 மணிக்கு தஞ்சாவூர் ராஜராஜ சோழன் சிலை அருகே வருகை தர உள்ளது. பிறகு அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகில் பிரச்சாரம் நடைபெறும் அனைவரும் பங்கேற்க வேண்டுகிறேன் என்றார்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட பொருளாளராக வடக்கூர் உரக்கடை மணிவண்ணன், ஒரத்தநாடு மேற்கு ஒன்றிய செயலாளராக வடக்கூர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 

கூட்டத்தில் மாநில இளைஞரணி செயலாளர் ஒரத்தநாடு மகேஸ்வரன், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பத்மநாபன், ஒரத்தநாடு கிழக்கு ஒன்றிய தலைவர் ரவி, மேற்கு ஒன்றிய தலைவர் ரெகுநாதன், திருவோணம் ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி, பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் மாணிக்கவாசகம், பட்டுக்கோட்டை நகர செயலாளர் செல்வம் உள்ளிட்ட அனைத்து ஒன்றிய நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.

முன்னதாக மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் பிரபாகரன் நன்றி கூறினார். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0