மாநகராட்சி பொறியாளர்கள் பதவி உயர்வுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

Aug 11, 2026 - 09:08
Aug 11, 2026 - 09:10
 0  100
மாநகராட்சி பொறியாளர்கள் பதவி உயர்வுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

மாநகராட்சி பொறியாளர்கள் பதவி உயர்வுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

தமிழக அரசு வெளியிட்ட அரசாணை 57-ன் கீழ் மாநகராட்சி பொறியாளர்கள் 116 பேருக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பாதிக்கப்பட்ட பொறியாளர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆஷா இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி, பிற 21 மாநகராட்சிகள், 143 நகராட்சிகள் இவை மூன்றும் முன்பு தனித்தனி விதிகளின் கீழ் இயங்கின. இதில் பொறியாளர்களுக்கு அந்தந்த அமைப்புகளுக்குள்ளேயே பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தது.

பின்னர் கடந்த 2023-ல் உருவாக்கப்பட்ட புதிய விதிகள், 2024 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்தன. புதிய விதிகளின்படி, காலிப்பணியிடங்கள் மூன்று அமைப்புகளையும் ஒருங்கிணைத்து விகிதாச்சார அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு நிரப்பப்பட வேண்டும்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 4 அன்று தமிழக அரசு 116 பேருக்குப் பதவி உயர்வு வழங்கியது. 

மாநகராட்சிகளில் உதவி செயற்பொறியாளா்களாக இருப்பவா்கள் (ஏ2), 5 ஆண்டுகள் பணி முடித்த நிலையில், அவா்களுக்கு பதவி உயா்வு அளிக்கப்பட்டது. கடந்த 2024-25 ஆம் ஆண்டின் நிலைப்படி மாநில அளவில் மாநகராட்சிகளில் 103 செயற்பொறியாளா்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதும் தெரிய வந்துள்ளது. அதையடுத்து அவற்றை நிரப்பும் வகையில் தற்போது மதுரை, திருச்சி ஆகிய மாநகராட்சிகளில் பணியாற்றிய 16 உதவி செயற்பொறியாளா்கள், சென்னை மாநகராட்சியில் பணிபுரிந்து வரும் 100 போ் என மொத்தம் 116 பேருக்கு நகராட்சி நிா்வாகத்துறை சாா்பில் செயற்பொறியாளா்களாக பதவி உயா்வு அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஒப்பீட்டளவில் சென்னையில் 15 ஆண்டுகள் பணியாற்றியவருக்கு 3வது பதவி உயர்வும், பிற பகுதிகளில் 15 ஆண்டுகள் பணியாற்றியவருக்கு முதல் முறை பதவி உயர்வும் கிடைத்துள்ளது.

இதில் விகிதாச்சார முறை பின்பற்றப்படாததால், பாதிக்கப்பட்ட பொறியாளர்கள் தொடர்ந்த வழக்கை ஏற்று நீதிமன்றம் இந்த பதவி உயர்வுகளுக்கு நேற்று இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பொறியாளர்கள், நகராட்சி நிர்வாக இயக்குநர் மதுசூதன் ரெட்டி மற்றும் நகராட்சி நிர்வாக அரசுச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆகிய இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடமும் பலமுறை கோரிக்கை வைத்தும் பலன் ஏற்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்கள் தற்பொழுது நீதிமன்றம் சென்று இடைக்காலத் தடையாணை பெற்றுள்ளனர்.

இதில், தமிழக முதல்வர் விஜய் தலையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கான நியாயமான பதவி உயர்வு உத்தரவை வெளியிடுவார் என்று அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள செயற்பொறியாளா்கள் பதவி இடங்களில் 45 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளதால், தற்போது பதவி உயா்வு பெற்றவா்களில் 55 போ் வெளி மாவட்டங்களுக்கு, வேலூா், திருப்பூா், மயிலாடுதுறை, திருசெங்கோடு, தருமபுரி, திருவேற்காடு உள்ளிட்ட இடங்களுக்கு நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன், பொதுச் செயலாளர் சுஜாத் அலி ஆகியோர் தெரிவித்திருப்பதாவது; சென்னை முழுமையாக கட்டமைக்கப்பட்ட மாநகராட்சியாக இருந்தாலும், பிற மாநகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டும் அதற்கேற்ப பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை. கடந்த ஆட்சியில் மக்கள் தொகைக்கேற்ப பணியிடங்களை முறைப்படுத்தியதில் 35 ஆயிரம் நிரந்தர பணியிடங்கள் 3,417 ஆக குறைக்கப்பட்டதுடன், துப்புரவு பணியாளர் உள்ளிட்ட 21 வகை பணியிடங்கள் தனியார்மயமாக்கப்பட்டன. இதே நிலை நகராட்சிகளிலும் நீடிக்கிறது. சென்னை மாநகராட்சி ஊழியர்களின் பணியிட மாற்றத்துக்காக கொண்டுவரப்பட்ட 1998-ம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புச் சட்டம், 2023-ல் அமல்படுத்தப்பட்டு, சென்னை, பிற மாநகராட்சிகள், நகராட்சி, பேரூராட்சி ஆகியவை ஒரே அலகாக இணைக்கப்பட்டன. இதனால், ஏற்கனவே போதிய பணியிடங்கள் இருந்த சென்னை மாநகராட்சி ஊழியர்கள் 15 ஆண்டுகளில் மூன்று பதவி உயர்வு பெற்ற நிலையில், தற்போது பதவி உயர்விலும் அவர்களுக்கே அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நகராட்சி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவித்தல், 24 மாநகராட்சிகளுக்கேற்ப புதிய பணியிடங்கள் உருவாக்கி பதவி உயர்வு வழங்குதல், மாநகராட்சிக்கு தனி இயக்குனரகம் அமைத்தல், மறைவு பணியிட ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு பதவி உயர்வாவது வழங்குதல், அரசாணை 152-ஐ திருத்துதல், நீதிமன்ற உத்தரவுப்படி நகர செவிலியர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். கடந்த ஆட்சியில் பொறியாளர் பிரிவுக்கு மட்டும் பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில், அடிப்படை பணியாளர்களின் கோரிக்கைகள் கவனிக்கப்படவில்லை. புதிய ஆட்சி பொறுப்பேற்று 3 மாதங்களாகியும் இப்பிரச்னைகள் முதல்வர் கவனத்துக்கு செல்லவில்லை. இதற்கு தீர்வு காணும் அதிகாரம் முதல்வரிடம் மட்டுமே இருப்பதால், விதிகளுக்குட்பட்ட கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0