தேர்தல் வாக்குறுதி அடிப்படையில் உரிய விலை கொடுக்க வேண்டும்- புள்ளம்பாடியில் பி.ஆர். பாண்டியன்
நெல் கொள்முதல் விலை உயர்வை வரவேற்கிறேன், தேர்தல் வாக்குறுதி அடிப்படையில் உரிய விலை கொடுக்க வேண்டும்- புள்ளம்பாடியில் பி.ஆர். பாண்டியன்
திருச்சி லால்குடி புள்ளம்பாடி காமராஜர் சிலை அருகாமையில் தேர்தல் வாக்குறுதிப்படி கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் விவசாயிகள் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு
தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் தலைமை தாங்கினார். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் ராஜா சிதம்பரம், அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் தங்க சண்முக சுந்தரம் மற்றும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் மேகராஜன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை புள்ளம்பாடி ஒன்றிய நகர விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியில் ஒன்றிய,நகர அனைத்து விவசாயிகள் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தில் தலைமை ஏற்ற பிஆர் பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழ்நாட்டில் கூட்டுறவு கடன் நிபந்தனை இல்லாமல் தள்ளுபடி செய்ய வேண்டும் என தொடர்ந்து விவசாயிகள் போராடி வருகிறார்கள். கடந்த 7ம் தேதி முதலமைச்சர் உத்திரவின் பேரில் அனைத்து விவசாயிகள் சங்க நிர்வாகிகளையும் 8 அமைச்சர்கள் பங்கேற்று அழைத்து பேசினர். விரைவில் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் கடன் தள்ளுபடி அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடவார் என தெரிவித்துள்ளனர். நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்.
காவிரி டெல்டா வறண்டு கிடக்கிறது. குறுவையை இழந்துவிட்டோம், சம்பாவும் கேள்வி குறியாகி உள்ளது. இந்நிலையில் குறுவை இழந்த விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய் வறட்ச்ச நிவாரணமாக வழங்க வேண்டும்.
குறுவை வருவாய் இழந்த விவசாயிகளை சம்பா சாகுபடியில் ஊக்கப்படுத்த ஏக்கர் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் ஊக்க நிதியாக ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா போன்ற மாநிலங்களில் பின்பற்றி வழங்க வேண்டும்.
கர்நாடக அரசு சட்ட விரோதமாக மேகதாட்டு அணை கட்ட முயற்சிக்கிறது. அதை சட்டப்படி தடுத்து நிறுத்த முதலமைச்சர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரியில் ஜூன் ஜூலை மாதத்திற்கு 40 டிஎம்சி தண்ணீர் நிலுவையில் இருப்பதாக ஆணையம் தெரிவித்துள்ளது. அதனை பெறுவதற்கு ஆணையம் மூலம் உரிய அவசரகால நடவடிக்கைகளை மேற்க்கொள்ள வேண்டும்.
100 அடி மேட்டூர் அணை நிரம்பிய பிறகு சம்பா சாகுபடிக்கு அணையில் தண்ணீரை திறக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கர்நாடக மறுக்கும் பட்சத்தில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒட்டுமொத்த காவிரி டெல்டா விவசாயிகளும் குடிப் புகும் போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என எச்சரிக்கிறேன்.
தமிழகத்தின் தலைமைச் செயலாளர் சாய் குமார் மீது முதலமைச்சர் மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறார். முதலமைச்சருக்கு நம்பிக்கை துரோகமிழைக்கக் கூடாது.காவிரி பிரச்சனையில் சட்டப்படி வழி காட்ட வேண்டும்.
மாறாக கர்நாடகாவிற்கு ஆதரவாக செயல்படுகிறாரோ?என்கிற சந்தேகம் விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. தமிழக நீர்ப்பாசன துறைக்கு தமிழகத்தைச் சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை அரசுத்துறை செயலாளராக நியமனம் செய்ய வேண்டும். தற்போது அனுபவம் இல்லாத நீர்ப்பாசனத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிற பிரசாந்த்நவனரே பொருத்தமற்றவர் என்பதை தலைமைச் செயலாளர் உணர வேண்டும்.காவிரி முல்லைப் பெரியாறு உள்ளிட்ட பல்வேறு நீர் ஆதார பிரச்சனைகளும் சட்டப்படி அனுபவம் மிகுந்த அரசுத்துறை அதிகாரியால் மட்டும்தான் கையாள முடியும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 2000க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0