தமிழகத்தில் 22 மாவட்டங்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ; டெல்டாவில் களையிழக்கும் ஆடி18 கொண்டாட்டம் 

Jul 30, 2026 - 16:23
Jul 30, 2026 - 17:26
 0  42
தமிழகத்தில் 22 மாவட்டங்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ; டெல்டாவில் களையிழக்கும் ஆடி18 கொண்டாட்டம் 

தமிழகத்தில் 22 மாவட்டங்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ; டெல்டாவில் களையிழக்கும் ஆடி18 கொண்டாட்டம் 

திருச்சி உள்பட 22 மாவட்டங்களில் வரவிருக்கும் நாட்களில் குடிநீர் தட்டுப்பாடு பெருமளவில் தலைதூக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததாலும், பருவ மழை பொய்த்து போய் எல்.நினோ தாக்கம் அதிகரித்ததாலும், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதும், காவிரியிலும் அதன் கிளை ஆறான கொள்ளிடத்திலும் போதிய நீர்வரத்து இல்லாதது இதற்கு முக்கியக் காரணமாகும். தற்போதைய நிலவரப்படி, நகரின் தினசரி குடிநீர் தேவையில் சுமார் 15 மில்லியன் லிட்டர் (15 MLD) பற்றாக்குறை நிலவுவதால், திருச்சி மாநகராட்சி நிர்வாகம் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.

திருச்சி மாநகரின் குடிநீர் தேவைகள் பெரும்பாலும் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றுப் படுகைகளில் உள்ள ஒன்பது முக்கிய நீர் ஆதாரங்களைக் கொண்டே பூர்த்தி செய்யப்படுகின்றன. இங்குள்ள நீர் சேகரிப்பு கிணறுகள் மூலம் பெறப்படும் குடிநீர், மாநகர் முழுவதும் உள்ள 129 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்குப் (OHT) பகிர்ந்தளிக்கப்படுகிறது.

குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களின் எண்ணிக்கை பெருமளவில் உயர்ந்துள்ளதால், மாநகராட்சியின் தினசரி குடிநீர் தேவை 135-150 MLD என்ற அளவில் இருந்து 165 MLD ஆக அதிகரித்துள்ளது.

மேலும், வறட்சி மாவட்டங்களான இராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு கம்பரசன்பட்டை பகுதியில் இருந்து ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு நீர் அதிக அளவு உறிஞ்சப்படுவதால் வறண்டு கிடக்கும் காவிரியில் நிலத்தடி நீர் முற்றிலும் சரிந்துள்ளது.

திருச்சி கொள்ளிடம் ஆற்றின் மூன்று பிரதான கிணறுகளில் (Central Sump) இருந்தும், தலா 125 HP மின்மோட்டார்கள் மூலம் நிமிடத்திற்குத் தலா 14,500 லிட்டர் தண்ணீர் இறைக்கப்பட்டு மாநகர மக்களுக்கு நாளொன்றுக்கு நபர் ஒருவருக்குத் தலா 132 லிட்டர் வீதம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. சமிபத்திய வறட்சியின் காரணமாக மாநகர மக்களுக்கான குடிநீர் விநியோகம் முற்றிலும் தடைபட்டுள்ளது.

காவிரியில் நீர்வரத்து குறைந்ததால், கடந்த ஜூன் முதல் வாரத்தில் கொள்ளிடம் ஆற்றின் பிரதான கிணறுகளில் இருந்து நிமிடத்திற்குத் தலா 6,000 லிட்டர் மட்டுமே தண்ணீர் கிடைத்தது. இதனால், குடிநீர் விநியோகத்தில் சிக்கல் எழுந்தது. கிடைக்கும் தண்ணீரின் அளவு மேலும் படிப்படியாகக் குறைந்து, ஜூலை இறுதியில் வெறும் தலா 2,000 லிட்டராகச் சரிந்தது.

இதே நிலை நீடித்தால், வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இக்கிணறுகள் முற்றிலும் வறண்டு, திருச்சி மாநகராட்சியின் அரியமங்கலம், பொன்மலை, ஏர்போர்ட், காந்தி மார்க்கெட், உறையூர் உள்ளிட்ட மாநகரின் முக்கிய பகுதிகளுக்கான குடிநீர் விநியோகம் முற்றிலும் தடைபடும் என நீர்வளத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மேட்டூரில் அணையில் நீர் கையிருப்பு தொடர்ந்து சரிந்து வருவதால், தமிழகத்தில், சென்னை உள்பட மேலும் 22 மாவட்ட மக்களும் குடிநீருக்காக தவிக்கும் நிலை ஏற்படும்.

வருடத்தின் 365 நாட்களும் வற்றாத ஜீவநதியாக பாய்ந்தோடிய காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகள் முற்றிலும் வறண்டு போனாலும் கூட, ஆற்றின் மேல்மட்ட நீர் மூலமாகவும், மணலுக்கு அடியில் இருக்கும் ஈரப்பதம் மூலமாகவும் தொடர்ந்து தண்ணீர் கிடைத்து வந்தது. இருப்பினும், சமீபத்திய கடுமையான வறட்சி, எல்.நினோ தாக்கம் காரணமாக வெப்ப காற்று வீசுவதால் மணலுக்கு அடியில் இருந்த நிலத்தடி ஈரப்பதமும் வெகுவாகப் பாதித்துள்ளது. மேலும், இத்தகைய வறட்சி தமிழகத்தின் 22 மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகம் உரிய காலத்தில் பங்கிட்டு நீரை தமிழகத்திற்கு பகிர்ந்து கொடுக்காவிட்டால், தமிழகத்தில் சென்னை, திருச்சி, தஞ்சை என 22 மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களும் குடிநீரின்றித் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

முன்னதாக, மேட்டூர் அணையில் குடிநீர் தேவைக்காக இன்று திறக்கப்பட்டு இருக்கும் 1500 கன அடி நீரும் திருச்சி மாவட்டம் முக்கொம்புவை வந்தடையும் முன்பே கானல் நீர் ஆகி விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

காவிரியில் வறண்டு கிடக்கும் மணல் பரப்பில் மேட்டூரில் திறக்கப்பட்டு வெளியேறும் வரும் நீர், அதீத வெப்பத்தால் நீராவியாகவே வெளியேறுவதால் காவிரி கொள்ளிடம் பகுதிகளில் குடிநீர் உறியும் ஆழ்குழாய் கிணறுகளுக்கு கூட நீரோட்டம் சென்றடையாத நிலை ஏற்பட்டு, வரும் காலங்களில் உந்து குழாய்களில் இருந்து காற்று மட்டுமே வரும் என நீர் பாசன துறை பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கொள்ளிடம் ஆற்றின் நடுவே உள்ள மூன்று பிரதான கிணறுகளும், தலா 6 மீட்டர் விட்டமும், 30 மீட்டர் ஆழமும் கொண்ட வலுவூட்டப்பட்ட சிமெண்ட் கான்கிரீட் (RCC) அமைப்பிலான 'வட்ட வடிவ உறிஞ்சுக் கிணறுகள் செயல்பட்டும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேட்டூர் மட்டுமல்லாது காவிரி சார்ந்த துணை நதிகளும் வறண்டு காணப்படுவதால் டெல்டா மாவட்டமே பேரதிர்ச்சியை சந்திக்க இருக்கிறது.

மேலும், வரும் மூன்றாம் தேதி டெல்டா மாவட்டங்களில் காவிரி படுகையில் ஆடி18 உற்சாகமாக கொண்டாட இருக்கும் நிலையில், வறண்டு கிடக்கும் காவிரியை பார்த்து வேதனையில் இருக்கின்றனர் டெல்டா பகுதி மக்கள். கடந்த காலங்களில் உற்சாகமாக கொண்டாடப்பட்ட ஆடி 18 இந்த வருடம் களை இழந்து காணப்படுகிறது டெல்டா மாவட்டங்களில்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0