மதுபான கொள்முதல் முறைகேடு ; செந்தில் பாலாஜிக்கு நெருக்கடி: தமிழகம் முழுவதும் 41 இடங்களில் ரெய்டு 

Jul 29, 2026 - 12:57
 0  23
மதுபான கொள்முதல் முறைகேடு ; செந்தில் பாலாஜிக்கு நெருக்கடி: தமிழகம் முழுவதும் 41 இடங்களில் ரெய்டு 

மதுபான கொள்முதல் முறைகேடு ; செந்தில் பாலாஜிக்கு நெருக்கடி: தமிழகம் முழுவதும் 41 இடங்களில் ரெய்டு 

தமிழகத்தில் மதுபான கொள்முதல் முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சரும், திமுக எம்பியுமான டி.ஆர்.பாலுவின் மன்னார்குடி பகுதியில் இயங்கும் மதுபான ஆலை உள்பட தமிழகத்தில் சென்னை, ஈரோடு, கரூர், புதுக்கோட்டை என 41 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். மேலும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தங்கி இருந்த தனியார் விடுதியில் அவரிடம் துருவித் துருவி விசாரணை செய்து வழக்கும் பதிவு செய்திருக்கிறார்கள் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார். இது குறித்த விபரம் வருமாறு ;

முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கடந்த திமுக ஆட்சி காலத்தில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். 

இந்நிலையில் மன்னார்குடியில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவுக்கு சொந்தமான மதுபான ஆலை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மதுபான ஆலை உள்பட தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இன்று (ஜூலை 29ம் தேதி) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் கரூர் அருகேயுள்ள ராமமேஸ்வரப்பட்டியில் முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜியின் பெற்றோர் வசிக்கும் வீட்டில் இன்று (ஜூலை 29ம் தேதி) காலை 7 மணிக்கு இரு வாகனங்களில் வந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அங்கு சோதனையிட்டு செந்தில்பாலாஜியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.

செந்தில்பாலாஜியின் நேர்முக உதவியாளரான சுப்பிரமணியன் மூர்த்திபாளையம் வீடு, தாந்தோணி கிழக்கு ஒன்றிய செயலாளர் பாஸ்கரின் கோயம்பள்ளி வீடு, கரூர் தொழிற்பேட்டையில் உள்ள டாஸ்மாக் அலுவலகம், கரூர் கோதை நகரில் உள்ள சக்தி மெஸ் கார்த்தி, அதன் பங்குதாரரான ரமேஷ் வீடு என 6 இடங்களில் கரூர், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும், புதுக்கோட்டை கல்லாக்கோட்டையில் கால்ஸ் தனியார் மதுபான ஆலை, சென்னை தி.நகர் தணிகாசலம் சாலையில் உள்ள மதுபான நிறுவனம் தொடர்புடைய இடத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டத்தின் பீளமேடு, பொள்ளாச்சி, நரசிம்மநாயக்கன்பாளையம், நவகரை ஆகிய 4 டாஸ்மாக் கிடங்குகள் மற்றும் மதுபான ஆலையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் சோதனை நடைபெற்று வருகிறது. 

 

மதுபான கொள்முதல் முறைகேடு தொடர்பாக சென்னையில் தனியார் விடுதியில் தங்கி இருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் துருவித் துருவி விசாரணை மேற்கொண்டு அவருக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளனர்.

முன்னதாக, கோதை நகரைச் சேர்ந்த கார்த்தி, ரமேஷ் ஆகிய இருவரும் தவெக ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜாவிடம் குதிரைப் பேரத்தில் ஈடுபட்டதாக ஜூலை 1-ம் தேதி சென்னை திருவல்லிக்கேணி போலீஸார் விசாரணைக்கு அழைத்து சென்னையில் கைது செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0