திருச்சி: தீண்டாமையை சுமப்பவர்களுக்கு எதிராக, சடலத்தை புதைக்க இடம் கேட்டு தேவாலயத்தில் போராட்டம்.
திருச்சி: தீண்டாமையை சுமப்பவர்களுக்கு எதிராக, சடலத்தை புதைக்க இடம் கேட்டு தேவாலயத்தில் போராட்டம்.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே, உப்பிலியபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட கோட்டப்பாளையம் ஊராட்சியில் தலித் கிறிஸ்தவர் ஒருவரின் உடலை நல்லடக்கம் செய்ய கல்லறைத் தோட்டத்தில் இடம் வழங்கப்படாததால், அவரது உடல் மூன்று நாட்களாக வீட்டிலேயே வைக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விபரம் வருமாறு ;
கோட்டப்பாளையம் ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் 74 தலித் கிறிஸ்தவ குடும்பங்களும் உள்ளன.
இந்நிலையில், ஓய்வு பெற்ற அரசு ஆசிரியரான ராஜ் (வயது முதிர்வு காரணமாக) கடந்த ஜூலை 17-ம் தேதி அன்று உயிரிழந்தார். அவர் தலித் கிறிஸ்தவர் என்பதால், அவரது உடலை பொது கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்ய ஒரு தரப்பினர் வலியுறுத்தினர்.
ஆனால், அதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவரது உடலை நல்லடக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக, கடந்த மூன்று நாட்களாக அவரது உடல் வீட்டிலேயே வைக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்த வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
முசிறி சார் ஆட்சியர் சுஷ்ரி சுவாங்கி குந்திய, ஏடிஎஸ்பி தனராஜ், டிஎஸ்பி முத்துக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் இரு தரப்பினரிடையே சுமார் ஐந்து மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருப்பினும், எந்த உடன்பாடும் எட்டப்படாததால், பொது கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் நடைபெறவில்லை. குறிப்பிட்ட சமூகத்தினர் பொது கல்லறையில் உடலை நல்லடக்கம் செய்ய வேண்டும் எனக் கூறி தேவாலயத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து, அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால், சட்டம்-ஒழுங்கை காக்கும் வகையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இரு தரப்பினரையும் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் மீண்டும் அழைத்துள்ள நிலையில், அதன் முடிவை அப்பகுதி மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
முன்னதாக, துறையூர் கோட்டப்பாளையம் ஊராட்சியில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் இடையே மேல் ஜாதி, கீழ் ஜாதி என்ற தீண்டாமை நடைமுறை இன்றளவும் பயன்பாட்டில் இருப்பது வேதனைக்குரியது. கிறிஸ்தவர்களில் ரெட்டியார் சமூகத்தைச் சார்ந்த பாதிரியார் ஒருவர் கட்டுப்பாட்டில் கிறிஸ்தவர்கள் நல்லடக்கம் செய்யக்கூடிய கல்லறைத் தோட்டம் இருக்கின்றது. இங்கு இறந்தவர்களின் உடலை சுமந்து செல்வதற்கு இரு விதமான வாகனங்கள் பயன்பாட்டில் இருப்பதால் கடந்த 2024-ம் ஆண்டே கோட்டப்பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு சமுதாயத்தினர் நீதிமன்றம் மூலம் இறந்தவர்களை பொது கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்வதில் பாகுபாடு காட்டிடக்கூடாது என்ற தீர்ப்பு பெற்றிருக்கும் நிலையிலும், சாதிய பாகுபாடு இன்றி பல்லாயிரம் மாணவர்களுக்கு வகுப்பெடுத்த முன்னாள் ஆசிரியர் ஒருவரின் உடலை நல்லடக்கம் செய்வதில் தீண்டாமை சாதிய பாகுபாடு தொடர்வது திருச்சி மாவட்டத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0