முதல்வர் விஜய் குறித்து `அவதூறு' பேச்சு - முன்னாள் அமைச்சரும், திமுக எம்எல்ஏவு மான அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி கைது!
முதல்வர் விஜய் குறித்து `அவதூறு' பேச்சு - முன்னாள் அமைச்சரும், திமுக எம்எல்ஏவு மான அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி கைது!
முதல்வர் விஜய் குறித்து ஒருமையிலும், அவதூறாகவும் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அதிரடியாக ஆய்வுக்குச் சென்ற சட்டமன்ற உறுப்பினரை போலீசார் கைது செய்து காவல் துறை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் திருச்செந்தூர் தூத்துக்குடி பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் அருகே ஆத்தூர் பகுதியில் ஜூன் 20-ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய, திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன், முதல்வர் விஜய் குறித்து ஒருமையிலும், அவதூறாகவும் பேசியதாக, தவெக நகரச் செயலாளர் செல்வம், ஆத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், அனிதா ராதாகிருஷ்ணன் மீது ஆத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி, அனிதா ராதாகிருஷ்ணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில், இந்த பேச்சுக்கு அவதூறு வழக்கு தான் தாக்கல் செய்திருக்க வேண்டுமே தவிர, போலீஸார் வழக்குப்பதிவு செய்ய முடியாது. அதனால் முன் ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.
காவல் துறை தரப்பில், ஏழு முறை எம்எல்ஏவாக இருந்த மனுதாரர் கட்டுப்பாட்டுடன் பேசியிருக்க வேண்டும். இந்த வழக்கை பதிவு செய்திருக்காவிட்டால் இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டிருக்கும். அதனால் முன் ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிடப்பட்டது. புகார்தாரர் தரப்பிலும் முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “1967-ம் ஆண்டுக்கு பின் தமிழகத்தை திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் தான் ஆட்சி செய்திருக்கிறார்கள். நாம் தான் வாக்களித்து தேர்ந்தெடுத்தோம்.
மனுதாரர் சாதாரண குடிமகன் அல்ல, எம்எல்ஏவாக உள்ளவர். அவர் முதல்வர் பதவிக்கான மரியாதை கொடுக்க வேண்டாமா. ஏன் இதுபோன்ற மொழியில் ஒரு எம்எல்ஏ பேச வேண்டும்,” எனக் கேள்வி எழுப்பி, அனிதா ராதாகிருஷ்ணனின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
நீதிபதி முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட அடுத்த நிமிடமே, திமுக முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் திமுக சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆத்தூர் பேரூராட்சி பகுதியில் ஆய்வுக்கு சென்றிருந்தபோது தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினர் முதல்வர் குறித்த அவதூறு வழக்கில் கைது செய்வதாக தெரிவித்து கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். மேலும் உங்கள் வாகனத்தில் செல்ல அனுமதி இல்லை காவல்துறை வாகனத்தில் மட்டுமே செல்ல வேண்டும் எனக்கோரி காவல்துறை ஜீப்பில் அனிதா ராதாகிருஷ்ணனை ஏற்றி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இதனை அடுத்து தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதியில் திமுகவினர் பெருமளவில் திரண்டு காவல்துறைக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் எதிர்க்கட்சி எம்எல்ஏவான திமுகவைச் சேர்ந்த ஒருவரை அவதூறு வழக்கில் கைது செய்து திமுகவுக்கு எச்சரிக்கை கொடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0