திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்: உதவி கமிஷனர் காயம் ; 50க்கும் மேற்பட்டோர் கைது

Jun 27, 2026 - 16:49
 0  128
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்: உதவி கமிஷனர் காயம் ; 50க்கும் மேற்பட்டோர் கைது

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்: உதவி கமிஷனர் காயம் ; 50க்கும் மேற்பட்டோர் கைது

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை சஞ்சீவி நகர் பகுதியில் சுற்று வட்டார கிராம மக்கள் அப்பகுதியில் புதிய மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சென்னை-திருச்சி, திருச்சி-சென்னை சாலைகளில் சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து முடங்கியது.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் (என்எச்-38) சஞ்சீவி நகா் - திருவானைக்காவல் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே கடந்த 1963-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழைய பாலம் உள்ளது. திருச்சி - சென்னை வழித்தடம் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டபோது, இதனருகே புதிய பாலம் கட்டப்பட்டது.

இதில், பழைய காவிரி பாலத்தில் 2010-இல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 16 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்தப் பாலத்தில் மீண்டும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்காக இந்தப் பாலம் ஜூன் 25 முதல் தற்காலிகமாக மூடப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்தது.

அதன்படி, நெடுஞ்சாலைத்துறையின் பராமரிப்புப் பணிகள் நேற்று முன் தினம் இரவு துவங்கின. பாலம் மூடப்பட்டதன் காரணமாக, கல்லணை சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தங்கள் அன்றாடத் தேவைகளுக்கும், வேலைகளுக்கும் செல்ல வெகுதூரம் சுற்றிச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் சஞ்சீவி நகர் பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவதால் அந்த இடத்தில் மேம்பாலம் வேண்டும் என்று கடந்த சில மாதங்களாகவே அவ்வப்போது பொதுமக்கள் சாலை மறியல் செய்து போராட்டம் நடத்தினர்.

இந்த சூழலில் காவிரி பாலம் பராமரிப்பு பணி காரணமாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு வழி பாதையாக இருக்கக்கூடிய புதிய காவிரி பாலத்தில் இரு வழி பாதையாக மாற்றி மாற்றுப் பயணத்திற்கு ஏற்பாடு செய்ததால் போக்குவரத்து நெரிசல், நேர விரையம் உள்ளிட்ட காரணங்களால் கடும் சிரமத்திற்குள்ளான பொதுமக்கள், மாற்று வழியால் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கண்டித்து, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த சாலை மறியல் காரணமாக 4 மணி நேரம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஐந்து கிலோ மீட்டருக்கும் மேலாக நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. போக்குவரத்து நெரிசல் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட வருவாய் அதிகாரி பாலாஜி, திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி மற்றும் அதிகாரிகள், காவல்துறையினர், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 

 

4 மணி நேரம் நீடித்த போராட்டம் பேச்சுவார்த்தைக்கு பின்னர் கைவிடப்பட்டது. உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் மறியல் போராட்டம் நடத்துவோம் என்று பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னதாக, பேச்சுவார்த்தையின்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது. அப்போது போராட்டக்காரர்களை குண்டு கட்டாக தூக்கி போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் உதவி காவல் ஆணையர் விஜயகுமார் கீழே விழுந்து காயம் அடைந்தார். இந்த தள்ளுமுள்ளுவில் சிலர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரும் பரபரப்பு நிலவியது. சாலை மறியல் போராட்டத்தால் சுமார் 4 கி.மீ. தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் நீண்டது. ஓயாமரி சாலை தொடங்கி, காவிரி பாலம், மாம்பழச் சாலை, திருவானைக்காவல், கும்பகோணத்தான் சாலை, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை வரையில் போக்குவரத்து முடங்கியது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0