மக்கள் நலன் சார்ந்த அரசியலை முன்வைக்கும் தற்போதைய அரசுக்கு மக்களின் ஆதரவு பெருகி வருகிறது- துரை வைகோ
மக்கள் நலன் சார்ந்த அரசியலை முன்வைக்கும் தற்போதைய அரசுக்கு மக்களின் ஆதரவு பெருகி வருகிறது- துரை வைகோ
மக்கள் நலன் சார்ந்த அரசியலை முன்வைக்கும் தற்போதைய அரசுக்கு மக்களின் ஆதரவு பெருகி வருகிறது. இது தொடர்ந்தால் வரும் தேர்தல்களில் 35 விழுக்காடு அல்ல, 60 விழுக்காடு வாக்கு பெறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என திருச்சியில் துரை வைகோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே, மதிமுக தொழிற்சங்கப் பிரிவு சார்பில் விடுபட்ட கேங்மேன் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கக் கோரியும், ஒப்பந்தப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும் கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம் என்ற பெயரில் முதல்வர் விஜய் தலைமையிலான அரசுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி எம்பியுமான துரை வைகோ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அதனை தொடர்ந்து துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது அவர் தெரிவித்ததாவது: கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 15,106 பேரில், அதிமுக ஆட்சியில் 9,613 பேருக்கு 02.03.2021 அன்று பணிநியமன ஆணை வழங்கப்பட்ட நிலையில், 5,493 தொழிலாளர்கள் இதுவரை விடுபட்டுள்ளனர்.
எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வு முறையாக நடத்தப்பட்ட பின்னரும் 5,493 பேர் விடுபட்டுள்ளனர். இவர்களின் குடும்பங்கள் மிகப் பெரிய ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளன. பெரும்பாலானோர் முதல் தலைமுறை அரசுப் பணியாளர்கள் மற்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். திருமணங்கள் உள்ளிட்ட சுப நிகழ்வுகள் கூட தடைபட்டுள்ளன.
இவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்க வேண்டும் என எங்கள் தொழிற்சங்கம் பல்வேறு நிலைகளில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. தலைவர் வைகோ கடந்த 30.08.2021 அன்று முந்தைய அரசுக்கு கடிதம் எழுதினார். எனது அறிவுருத்தலின்படி, 31.08.2021 அன்று பட்ஜெட் மனுவில் அன்றைய எங்கள் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் ரகுராமன் இந்தக் கோரிக்கையை எழுப்பினார்.
அதேபோல, எனது ஆலோசனையின்படி 07.09.2021 அன்று அன்றைய எங்கள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் புதூர் மு.பூமிநாதன் சட்டமன்றத்தில் இந்த விவகாரத்தை எழுப்பினார். இதன் தொடர்ச்சியாக தனியார் கமிட்டி அமைக்கப்பட்டது.
நான், கடந்த 12.04.2022 மற்றும் 28.12.2022 ஆகிய தேதிகளில் அன்றைய மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை இருமுறை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தேன்.
12.04.2023 அன்று சட்டமன்றத்தில் மதிமுக உறுப்பினர் புதூர் பூமிநாதன் எழுப்பிய கேள்விக்கு “விரைவில் நல்ல தீர்வு” என்று அப்போதைய அமைச்சர் உறுதியளித்தார்.
இதேபோல் 06.07.2023 அன்று முன்னாள் மின்துறை பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசுவை சந்தித்து கோரிக்கை வைத்தேன். அதன் பிறகு, அன்றைய மின்சாரத்துறை அமைச்சராக பொறுப்புவகித்த சிவசங்கரன் அவர்களையும் நேரில் சந்தித்து இக்கோரிக்கை குறித்து வலியுறுத்தியதுடன், தேர்தலுக்கு முன்பாகவே பணி ஆணை வழங்கிடுமாறும் கேட்டுக்கொண்டேன். ஆனால் அவைகள் நடைபெறவில்லை.
இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்தது. இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்யையும், மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமாரையும் சந்தித்து கோரிக்கை வைத்தேன். அப்போதே இருவரும் அதனை ஏற்றுக்கொண்டனர்.
குறிப்பாக, மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமாரை சந்தித்தபோது, அவர் இந்தக் கோரிக்கையை அரசு ஏற்கிறது என்றும், உறுதியாக “இவர்களுக்கு பணி வழங்கப்படும்” என்றும் உறுதியளித்தார்.
இந்த நிலையில் அமைச்சர் நிர்மல்குமார் அளித்துள்ள பேட்டியில், “15 ஆயிரம் காலி இடங்களை நிரப்புவதோடு, விடுபட்ட 5,493 கேங்மேன் பணியாளர்களையும் சேர்த்து 20,493 நியமன ஆணைகளை விரைவில் வெளியிட முதல்வரின் ஒப்புதலைப் பெற்றுவிட்டோம். நிதித் துறையின் ஒப்புதலைப் பெற்றவுடன் அவர்களுக்கு பணியாணை வழங்கப்படும்” என்று அறிவித்துள்ளார்.
இந்த மகிழ்ச்சியான செய்தியைக் கேள்விப்பட்டவுடன் மின்சாரத்துறை அமைச்சருக்கு அலைபேசியில் தொடர்புகொண்டு நன்றி தெரிவித்துக் கொண்டேன், முதலமைச்சர்க்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனப் பேசினார்.
கவன ஈர்ப்பு பொதுக்கூட்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பொதுக்கூட்டம், நன்றி அறிவிப்பு கூட்டமாக மாறியுள்ளதாகவும் துரை வைகோ எம்பி மேடையில் அறிவித்து தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
இந்தக் கூட்டத்தில் மதிமுக நிர்வாகிகள் டாக்டர் ரொகையா, மணவை தமிழ்மாணிக்கம், வெல்லமண்டி சோமு, சேரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0